Skip to content

மனிதப் பிறவியும் ஒரு மிருகப் பிறவியா?

January 19, 2009

FM. அஸ்லம்
(ரஜரட்டை மருத்துவபீடம்)

‘அவன் பால் அருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.’ (அல் குர்ஆன் 31:14)

children1

பூமியில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அக் குழந்தைக்குரிய மிகச்சிறந்த ஆகாரமாக உலகிலுள்ள எந்த உணவுக்கும் நிகரில்லாத தாய்ப்பால் எனும் அந்த அற்புத பாணத்தை தாயின் மார்பகங்களிலிருந்து சுரக்கச் செய்யும் அழ்ழாஹ்வே உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து முதல் நான்கு நாட்கள் வரை தாயின் மார்பகங்களிலிருந்து வெளியாகும் மஞ்சள் நிற, அடர்ந்த, ஒட்டும் தன்மையுள்ள, மிக அதிகளவு பிறபொருளெதிரிப் புரதங்களைக் கொண்ட கடும்புப் பால் (uypocalcemic Tetan uypocalcemic Tetanyy) என அழைக்கப்படும். இத்திரவத்தை குழந்தைக்குக் கொடுப்பதன் மூலம் நோய்க்கிருமிகளுக்கு எதிரான நிர்ப்பீடணத்தை வழங்கி பலவகையான நோய்த் தொற்றுக்களில் இருந்தும் குழந்தையைப் பாதுகாக்கலாம்.

நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள காபோவைத ரேற்றுக்களான மாப்பொருள், கிளைக்கோசன் என்பன நமது சமிபாட்டுத் தொகுதியால் சுரக்கப்படும் பல வகையான நொதியங்களின் செயற்பாட்டின் மூலம் அவற்றின் மிக எளிய வடிவமான குளுக்கோசு(Monosaccharide) ஆக மாற்றப் பட்ட பின்னரே உடலால் அகத்துறிஞ்சப்படுகின்றது. ஆனால், தாய்ப்பாலில் நேரடியாக குளுக்கோசோ அல்லது குளுக்கோசால் ஆக்கப்பட்ட பல்சக்கரைட்டுக்களோ இன்றி வழமைக்கு மாற்றமாக ஒருவகை இருசக்கரைட்டு காணப் படுகின்றது.

பாலில் உள்ள இவ் இலக்ரோசு வெல்லமானது குழந்தையின் சமிபாட்டுத் தொகுதியில் சுரக்கப்படும். இலக்ரேசு(டுயஉவயளந) எனப்படும் நொதியத்தின் மூலம் குளுக்கோசாகவும் கலக்ரோசாகவும் பிரிக்கப்படுகின்றது. பிரிக்கப்பட்ட இக் குளுக்கோசானது குழந்தையின் சக்தித் தேவையை பூரத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுவதுடன், கலக்ரோசானது பச்சிளம் குழுந்தையின் முதிர்வடையாத மூளைக்கலங்களை முதிர்வடையச் செய்து நரம்புக் கலங்களைச் சூழ்ந்து ஒரு கவசத்தை உருவாக்கி நரம்புக் கணத் தாக்க வேகத்தை அதிகரித்து நாளைய மனிதனை உறுதியானவனாக உருவாக்கும் மிகப்பெரும் திட்டத்துடன் பாலில் அந்த விஷேட வெல்லத்தை ஒரு கூறாக ஆக்கியிருக்கும் அழ்ழாஹ்வே மிக நுட்பமான அறிவுடையவன்.

தாயின் கருவறையில் ஒட்டுண்ணியாக வாழ்ந்த அந்தக் குழந்தை பூமியில் பிறந்தவுடன் தாயுடனான எல்லா உறவுகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் சுயமாக சுவாசிக்க முற்பட்டு முதல் மூச்செடுப்பதற்காக அழ ஆரம்பிக்கின்றது. இந்த அழுகையில் வளியிலுள்ள நுண்ணங்கிகள் வாயினூடாக சமிபாட்டுத் தொகுதியை சென்றடைந்து அதைச் சூழ ஒரு பாதுகாப்புக் கவசத்தை ஆக்கி நோய் உண்டு பண்ணும் நுண்ணங்கிகள், இரசாயனப் பதார்த்தங்கள் போன்றவற்றிலிருந்து சமிபாட்டுத் தொகுதியை ஆக்கியுள்ள கலங்களைப் பாதுகாக்கின்றது. மற்றும் சில நன்மை பயக்கும் நுண்ணங்கிகள் (Lactobacillus bifidus) பாலிலுள்ள இலக்ரோசு வெல்லத்தை இலக்ரிக்கமிலமாக மாற்றி அமில ஊடகத்தை உருவாக்குவதன் மூலம் சமிபாட்டுத்தொகுதியினுள் உட்செல்லும் நோய் விளைவிக்கும் நுண்ணங்கிகள் இந்த அமில ஊடகத்தில் வாழ முடியாமல் செத்து மடிகின்றன. ஆனால் பசுப்பாலில் இல்லாத தாய்ப்பாலில் உள்ள சில பதார்த்தங்கள்(Bifidus factor) நன்மை பயக்கும் இவ்வகை நுண்ணங்கிகளின் வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் அதன் தொடர்ச்சியான நிலவுகையினால் நோய்த் தொற்றுக்களில் இருந்து தாய்ப்பால் அருந்தும் பிள்ளைகள் பெரிதும் பாதுகாப்புப் பெறுகின்றன.

முதல் நான்கு மாதம்வரை ஒரு குழந்தைக்குத் தேவையான போசணைப் பதார்த்தங்களான புரதம், காபோவைதரேற்று, இலிப்பிட்டு, விட்டமின்கள், கனியுப்புக்கள் என்பனவற்றை தேவையான அளவில்  தேவையான விகிதத்தில் தாய்ப்பால்  கொண்டிருப்பதால் ஒரு குழுந்தைக்கு முதல் நான்கு மாதங்கள் வரை தாய்ப் பாலைத் தவிர வேறு எந்த ஆகாரமும் கொடுக்கலாகாது என்பது கண்டிப்பான மருத்துவ ஆலோசனையுமாகும்.

எந்த ஒரு தாயிலும் குழந்தையின் தேவைக்கு ஏற்ப தேவையான அளவு பால் சுரக்கின்றது. உதாரணமாக இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுத்த தாயில் கூட அக்குழந்தைகளின் தேவைக்கு ஏற்ப பால் சுரக்க ஆரம்பிப்பதாலும் மற்றும், போசனைக் குறைபாடுடைய தாயிலிருந்து பெறப்படும் தாய்பாலில் உள்ள போசணைக் கூறுகள் சாதாரண சுகதேகித் தாயின் தாய்ப்பாலை எல்லா விதத்திலும் ஒத்திருப்பதாலும் தாயில் பால் இல்லை,

மற்றும் தாய்க்கு போசணைக் குறைபாடு போன்ற  நொண்டிக் காரணங்களைக் கூறி உங்களது குழந்தைகளை புட்டிப் பாலுக்கு அடிமையாக்கி மிருகப் பிறவியாக மாற்றும் தாய் மார்களே!

ஒரு குழுந்தை பசியால் அழ ஆரம்பிக்கும் போது அக்குழந்தையின் அழுகையின் ஒசையால் புறோலக்ரின் (Prolactin) எனும் ஒருவகை ஓமோன் தாயின் உடலில் இயல்பாகவே உடனடியாகச் சுரக்கப்பட்டு பால் உற்பத்தி அதிகரிக்கப்படுவதனால் தாயின் மார்பகங்களில் இருந்து பால் கசிய ஆரம்பிக்கின்றது. இந்தப் பாலைக்கூட அந்தப் பச்சிளம் குழந்தையை அருந்த அனுமதிக்காமல் பசி தீர்ந்தபின்னர் அவசர அவசரமாக உங்களால் தயாரித்து வந்து ஊட்டப்படும் அந்த புட்டிப்பால் சற்று செறிவு கூடியதாகவோ அல்லது நீர்த்தன்மை கூடியதாகவோ இருக்கக்கூடும். அது மட்டுமல்லாமல் அதிக பாசத்தால் தேவையை விட அதிகமாகவோ, உங்களுக்குள்ள அவசர வேலைகளால் தேவையைவிட குறைவாகவோ ஊட்டிவிட்டு பிள்ளையை தவிக்க விட்டு விடுகின்றீர்கள். தவிர்க்க முடியாமல் ஏற்படும் இவ்வாறான தவறுகள் வாந்திபேதி, வயிற்றோட்டம் போன்ற நோய்களை வரவழைத்து விடுகின்றது.

ஆனால் தாய்ப் பாலிலுள்ள கூறுகள் ஒரு ஊட்டத்தின் போதே தொடர்ச்சியாக மாற்றமடைவதால் முதலில் மார்பகங்களில் இருந்து வெளிவரும் பாலில் (Fore milk) கொழுப்பு மூலக்கூறுகள் குறைவாகவும் பின்னர் வெளிவரும் பாலில் கொழுப்பு மூலக்கூறுகள் படிப்படியாக அதிகரித்து பாலை அதிக சுவையுடையதாக மாற்றுவதால், குழுந்தை அதிக விருப்பத்துடன் போதுமான அளவு அருந்தி ஒரு பக்க மார்பகத்தை முற்றாக காலி செய்கின்றது. பின்னர் மறுபக்க மார்பகத்தை அருந்தக் கொடுப்பதால் அப்பக்கத்திலிருந்து முதலில் வெளியேறும் பால் குறைந்த அளவு கொழுப்பு மூலக்கூறுகளைக் கொண்டிருப்பதனால் பிள்ளைக்கு போதுமென்ற உணர்வை மூளையிலுள்ள Satiatary centre கொடுப்பதனால் தானாக வாயை எடுக்கும் இந்த சுதந்திரத்தைக் கூட அந்த பச்சிளம் குழந்தைக்கு வழங்காமல் அடக்கி ஒடுக்குகின்றீர்கள் அல்லவா?

சூப்பியுடனும், பால் போத்தல்களுடனும் அலைந்து திரியும் தாயே? சூப்பியில் இடப்பட்டிருக்கும் துவாரத்தின் மூலம் எவ்வித சிரமமுமின்றி பால் அருந்திப் பழக்கப்பட்ட உனது குழந்தைக்கு சில சந்தர்ப்ப சூழ்நிலையில் கூட தாய்ப்பால் ஊட்ட முற்படும் போது தாயின் மார்பகங்களில் இருந்து விசையைப் பிரயோகித்து பாலை உறிஞ்சிக்குடிக்க முடியாமல் திணறும் காட்சியைக் கண்டு தாய்ப்பால் ஒவ்வாமை (Allergy) என்று கூறி புட்டிப்பாலுக்கு முற்று முழுதாக அடிமையாக்கும் தாயே, அது ஒவ்வாமையல்ல நீ பழக்கிய பழக்கம்.

குழந்தைக்கு தகுந்த முறையில் பால் ஊட்டும் தாய்மார்கள் மிகவும் கொடிய நோயான மார்பகப் புற்றுநோயிலிருந்து பாதுகாப்புப் பெறுகின்றார்கள் என்ற மருத்துவ இரகசியம் கூட உங்களுக்குத் தெரியுமா?

ஒவ்வொரு நாளும் இரவிலும் பகலிலும் தொடர்ச்சியாகப் பாலூட்டும் தாயின் உடலில் ஓமோனால் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் அத்தாயில் 6 மாதம் தொடக்கம் 24 மாதம் வரை சூலிடல் நிகழ்வது பிற்போடப்படுவதால் இது ஒரு தற்காலிக கருத்தடை உத்தியாகவும் சில நாடுகளில் கையாளப்படுகின்றது. இதனால் அடுத்தடுத்து இரு குழுந்தைகளுக்கிடையில் குறைந்தது இரண்டு வருட வயது வித்தியாசத்தைப் பேணிக் கொள்ளவும் முடியும். ஆனால் தாய்பால் ஊட்டாமல் பசுப்பால் ஊட்டும் தாய்மார்கள் ஒரு வருட வித்தியாசத்தில் அடுத்தடுத்து இரு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதால் பால்மா பக்கட்டுக்களின் அதிகரித்த விலைவாசி, வறுமை போன்ற காரணங்களால் குழந்தைகள் குவாசியக்கோர், மராஸ்மஸ் போன்ற புரதக் குறைபாட்டால் ஏற்படும் தீவிர நோய்களுக்குள்ளாகின்றன.

பசுவினுடைய கன்று குறுகிய காலத்தில் விரைவாக வளர்ச்சியடைவதால் பசுப்பாலில் கல்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற கனியுப்புகள் அதிக செறிவில் காணப்படுகின்றது. அப்பசுப்பாலை மனிதப் பிறவிக்குக் கொடுப்பதன் மூலம் அதிக கல்சியம் பாலை கட்டியாக மாற்றி, திரளச்செய்து சமிபாடு அடையவிடாமல் கல்சியம் அகத்துறிஞ்சல் தடுக்கப்பட்டு ஏற்புவலி ஏற்படுகின்றது. மற்றும் சோடியம், பொட்டாசியம் போன்ற உப்புக்களின் அதிகரித்த செறிவால் ஏற்படும் சுமையைத் தாங்க முடியாமல் பச்சிளம் குழந்தையின் முதிரச்சியடையாத சிறுநீரகம் தள்ளாடுவதையும், இவ்வுப்புக்களின் செறிவு குழந்தையின்உடலில் அதிகரித்து உயர்குருதி அமுக்கத்தையும், இவ்வுப்புக்கள் அகத்துறிஞ்சப்படுவதில் ஏற்படும் கோளாறுகள் மிக உக்கிரமான வயிற்றோட்டத்தையும் ஏறபடுத்தி சிலவேளை குழந்தையை மரணத்தின் விளிம்பிற்குக் கூட கொண்டுபோய்ச் சேர்க்கின்றது.

‘மனிதனுக்கு அவனது பொற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பால் அருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும் உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே திரும்பிவருதல் உண்டு’. (31:14)

ஒரு குழந்தைக்கு எவ்வளவு காலம் வரை பால் ஊட்ட வேண்டும் என்ற சர்ச்சை பல வாதங்களுக்கு உட்பட்டு பல்வேறு ஆராய்ச்சிகளின் பின்னர் 2 வருடங்கள் என உலக சுகாதார ஸ்தாபனம்(றுர்ழு) அண்மையில் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. ஆனால், இதை 1400 வருடங்களுக்கு முன்னர் பாலில் என்னென்ன கூறுகள் காணப்படுகிறது என்று அறியப்படாத காலத்திலேயே மேலேயுள்ள வசனத்தின் மூலம் 2 வருடங்கள் பாலூட்டுவது தாயின் கடமை என்றும் அது பிள்ளையின் உரிமை என்றும் கூறுவது என்றால் நிச்சயாமாக யாவற்றையும் படைத்து அப்படைப்புக்கள் பற்றி நுட்பமாக அறிந்த இறைவனால் மட்டுமே முடியும். என்றும் அவனுடைய சட்டங்களே மனிதனுக்குப் பொருத்தமானதும் அவனே சட்டமியற்றும் அதிகாரமுடையவன் என்பதும் நிரூபணமாகின்றது.

இத்தனைக்கும் மேலாக பசுப்பால் அருந்தும் குழந்தைகளே ஆரடவipடந ளுஉடநசழளளைஇ வயிற்றோட்டம், உயர் குருதி அமுக்கம், ஏற்புவலி, மற்றும் புட்டிப்பால் தயாரிக்கும் போது ஏற்படும் ஏராளமான நுண்ணங்கித் தொற்றுக்களால் பலவிதமான நோய்களுக்குள்ளாகி அடிக்கடி வைத்திசாலையை தங்குமிடமாக்கிக் கொள்கின்றன என்ற செய்தியும் வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்பட்ட உண்மையாகும்.

பல ஹெக்டயர் நிலப்பரப்புக்களில் பல்லாயிரக் கணக்கான இயந்திரங்களும், வேலையாட்களும் வேலைக்கு அமர்த்தப்பட்டு பசுப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெறும் உலர் பால்மா பக்கட்டுக்ளின் கவர்ச்சிகரமான விளம்பரத் தால் ஏற்பட்ட ஆசையும், பாலூட்டுவதன் மூலம் அழகு குறைந்துவிடும் என்ற நவீன மூட நம்பிக்கையும் இறைவனின் சட்டங்களையெல்லாம் புறந்தள்ளச் செய்து குடும்ப நிலையையும் பாராமல் அந்த விலை உயர்ந்த பால்மா பக்கட்டுக்களை வாங்கி பாலூட்டி அந்த மனிதப் பிறவியையும் மிருகப்பிறவியாக மாற்றும் தாயே!

உனது உடம்பில் ஒரு சிறிய பரப்பில் மிகவும் கச்சிதமாய் இயங்கும் அத்தொழிற்சாலையை அமைத்திருக்கும் மிகப்பெரும் படைப்பாளனான அழ்ழாஹ்வுக்கு நன்றியுள்ளவளாகவும் அவனுக்கு கட்டுப்பட்டு நடப்பவளாகவும் அதிலிருந்து வெளிவரும் அந்த அற்புத பாலை 2 வருடங்கள் உனது பிள்ளைகளுக்கும் அனுபவிக்கக் கொடுத்து தாய்க்கும், இறைவனுக்கும் நன்றியுள்ள பிள்ளைகளாக நமது பிள்ளைகளை வளர்தெடுப்பாயாக…

<<INDEX AL ATHAR MEGAZINE JANUARY 2009

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers