Skip to content

நல்ல மனைவி அமைய…

January 19, 2009

SLM. நஷ்மல் (பலாஹி)
nashmalslm@yahoo.com

‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் பெண்கள்(வளைந்த)விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே நீடிக்கும். ஆகவே பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ (ஸஹீஹுல் புஹாரி: 5186)

இன்றைய காலகட்டத்திலே இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இல்லற வாழ்வே இன்பத்தையளித்து சமூகத்தோடு இயைபுபட்டு வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இணையும் தம்பதிகளின் புரிந்துணர் வின்மையின் காரணமாக பல குடும்பங்கள் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதைக் காணலாம். ஆகையால் கணவனும் மனைவியும் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் போது மணவாழ்வு மகிழ்ச்சியளிக்கும்;;. இங்கு நாம் கணவனின் கடமைகள் சிலவற்றை நோக்குவோம்.

1. கணவன் வீட்டில் நுழையும் போது சலாம் கூறுதல்.
அழ்ழாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்கள் இது பற்றிக் கூறுகையில் ‘நீங்கள் இறை நம்பிக்கை(ஈமான்) கொள்ளாத வரை சொர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை(முழுமையான) இறை நம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயற்படுத்தினால் ஒருவரையொருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி)  நூல்: முஸ்லிம் 93)

மேற்படி நபிமொழி யிலிருந்து கணவன் மனைவி விரும்பும் பாசமும் நேசமும் உருவாவதற்கு அடிக்கடி சலாம் கூறிக்கொள்வது சிறந்த வழியாகும். குறிப்பாக பாசத்திற்காக ஏங்கும் தம்பதிகள் இவ் அடிப்படை சுன்னாவை நடைமுறைப் படுத்துவதன் மூலம் இல்லறம் இனிக்க வாழலாம்.

2. வாயில் துர்வாடை வீசா வண்ணம் பல்துலக்குவதன் மூலம் சுகந்தத்தைப் பேணுதல்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘நபி(ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பல்துலக்குவார்கள்.’ (நூல்: முஸ்லிம் 424) கணவனின் வருகையை எதிர்பார்த்திருந்த மனைவி அவனை முகமலர்ச்சியுடன் வரவேற்கும் வேளை, கணவனின் வாயில் இருந்து வரும் துர்வாடை அவளை முகம் சுளிக்கச் செய்கின்றது. ஆகையால் பல்துலக்கி வாயை சுத்தம் செய்வதானது இல்லறத்தை செழிப்பாக்கும்.

3. மனைவியை விஷேட பெயர் கொண்டு அழைத்தல்.

அன்னை ஆயிஷா (ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள் என்னிடம்) ஆயிஷ் இதோ(வானவர்) ஜிப்ரீல் உனக்கு ஸலாம் உரைக்கிறார் என்று சொன்னார்கள்.’ (நூல்: புஹாரி-3768, முஸ்லிம்-4837)

நல்ல வார்த்தைகளுக்கும் வசீகரிக்கும் தன்மை உண்டு. ஆகையால், அழகிய பெயர் கொண்டு அழைப்பது மனைவியை மகிழ்விக்கும் வித்தைகளில் ஒன்றாகும். இந்நடைமுறை புதுமணத் தம்பதியினர்களிடம் காணப்பட்டாலும் காலப்போக்கில் இது வழக்கொழிந்து செல்கின்றது.

5. மனைவியின் உதவிகளை வரவேற்றல், நன்றி செலுத்ததல்.

இது குறித்து நபி(ஸல்) அவர்கள் ‘யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவர் அல்லாஹ்வக்கு நன்றி செலுத்தமாட்டார்’ என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத்-7313) உங்களின் மனைவியரின் உதவிகளுக்கு நன்றி கூறிப் பாராட்டும்போது மென்மேலும் உங்கள் மனைவியின் பாசமும், பரிவும்  அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

6. வீட்டுப் பணிகளில் பங்கேற்றல்.

காலத்தின் தேவை அதிகரித்துவர இல்லத்து பணிகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. முன்னொரு காலத்தில் தமது அன்றாட வேலைகளுக் கப்பால் பலமணி நேரம் ஓய்வெடுத்து திக்ர், குர்ஆன், திலாவத் மற்றும் ஸலவாத் ஓதுதல் போன்ற உபரியான வணக்கங்களில் எமது பெண்கள் ஈடுபட்டுவந்துள்ளனர். ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் ‘பிஸி, மற்றும் நேரம் இல்லை’ போன்ற குரல்களே ஒலிக்கின்றன.

ஒரு இல்லத்தரசியைப் பொறுத்தவரை திருமணம் முடித்தது முதல் பேரப்பிள்ளை காணும்வரை அளப்பரிய பணிகளைச் செய்து வருகின்றாள். வீட்டுச்சுத்தம், துணிதுவைத்தல், பிள்ளைப் பராமரிப்பு, சமைத்தல் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதற்குள் கணவனுக்காக செய்கின்ற பணிகளும் ஏராளம். ஆனால் கணவன்மார்களில் பலர் அற்பவிடயங்களுக்கெல்லாம் மனைவி மீது சீற்றம் கொள்கின்றனர். எமது முன்மாதிரி பெருமானார்(ஸல்) அவர்கள் பற்றி ஆயிஷா(ரழி) அவர்கள் தரும் விவரணம் இதோ :

பெருமானார்(ஸல்) அவர்களது இல்லத்துப் பணியின் பங்குபற்றி வினவப்பட்டபோது, நபியவர்கள் தமது துணியைத் தைப்பவராகவும் காலணியை சீர்செய்பவர்களாகவும் ஏனைய ஆண்கள் தமது வீடுகளில் செய்வதையெல்லாம் தாங்களும் செய்பவர்களாக இருந்தார்கள்.’ (நூல்: அஹ்மத்- 24346, இப்னுஹிப்பான்-5155)

6. எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பதைத் தவிர்த்தல்.

‘இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை(முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளக்கூடும் என பெருமானார்(ஸல்) அவர்கள்  கூறினார்கள்.’ நூல்: முஸ்லிம்-2915.

இன்று சில ஆண்கள் தான் சந்திக்கும் அனைத்துப் பெண்களிடமும் உள்ள எல்லாப் பண்புகளும் தன் மனைவியிடமும் ஒன்று சேர அமைந்திருக்க வேண்டுமென ஒப்பீட்டாய்வு செய்கின்றனர். அவள் மேற்கொள்ளும் பல பெறுமதியான பணிகளைக் கூட கண்டுகொள்வதில்லை.

<<INDEX AL ATHAR MEGAZINE JANUARY 2009

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers