Skip to content

பாதையைப் பாதுகாக்கும் விடயத்தில் இஸ்லாம் சொல்வதென்ன?

December 15, 2008

-ஸஹ்றான் (மஸ்ஊதி)

அல்லாஹ் அழகானவன், அழகையே அவன் விரும்புகின்றான். (ஸஹீஹ் முஸ்லிம்: 147)

அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அவர்கள் கூறியதாவது:

‘நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘அப்படியென்றால் நீங்கள் அந்த சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள்.

மக்கள் ‘பாதையின் உரிமை என்ன என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘(அந்நிய பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்’ என்று பதிலளித் தார்கள். (ஆதாரம்: ஸஹீஹூல் புஹாரி, ஹதீஸ் இல:2465)

மேற்குறித்த ஹதீதில் அல்லாஹ்வுடைய தூதர் வீதிகளில் கூடி நிற்பதையும், உட்காருவதையும் தவிர்க்குமாறு கூறியபோது அருமைத் தோழர்கள் நாங்கள் பேசுவதற்காகத்தான் வீதிகளில் கூடுகின்றோம் என பதிலளிக்கின்றனர். அப்போது அல்லாஹ்வுடைய தூதர் நான்கு ஒழுக்கங்களைச் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

அவையாவன:
1.(அந்நிய பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வது.
2.(பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமலிருப்பது.
3.சலாமுக்கு பதிலுரைப்பது.
4.நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது.

இன்று எத்தனையோ முஸ்லிம் சகோதரர்கள் தங்களது ஓய்வு நேரத்தைக் கழிப்பதற்காக வீதிகளிலும், சில நேரங்களில் முச்சந்திகளிலும் கூடி நின்று பேசும் வழக்கத்தைப் பார்க்கின்றோம்.

பேசுவதற்காக ஒன்று கூடும் இச்சகோதரர்கள் வீதிகளுக்குரிய உரிமைகள் என அல்லாஹ்வுடைய தூதரால் முன்மொழியப்பட்ட மேற்குறித்த நான்கு உரிமைகளையும் மதிக்கின்றார்களா? இல்லை மிதிக்கின்றார்களா? வீதியெனும் போது பல அந்நிய பெண்கள் தங்கள் தேவை நிமித்தம் அங்கு வருவார்கள்.

அப்பெண்களைப் பார்க்காமல் தங்களது பார்வையைத் தாழ்த்திக் கொள்வதுதான் ஒரு உண்மை முஸ்லிமுக்கு அழகாகும். ஆனால் இன்று கல்வி நிமித்தம் உபரியான கற்கை வகுப்புக்களுக்குச் செல்லும் அதிகமான யுவதிகளை கிண்டல் செய்வதற்காகவே சில வீதிகளில் பெரும் இளைஞர் கும்பலே நிற்கும் அவலத்தை என்ன சொல்வது? கேட்டால் ‘பொழுது போகவில்லை’ என்கின்றனர்.

அல்லாஹ் இவர்களுக்கு வழங்கியிருக்கும் ‘இளமை’ எனும் மகத்தான அருளை பயன்படுத்தத் தெரியவில்லை அல்லது தவறுகின்றார்கள் என்பதைத்தான் இது காட்டுகின்றது. மிக அண்மைக்காலமாக வெளிநாடுகளில் வேகமாக எழுச்சி பெற்று வரும் இஸ்லாமியப் பிரச்சாரத்தால் கல்வியிலும், மார்க்க விவகாரங்களிலும் புயலாக மாறிவரும் அங்குள்ள இளைஞர் சக்தியோடு, நமது நாட்டு இளைஞர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இவர்களின் மார்க்க ரீதியான அசமந்தப்போக்கு பளிச்சிடும்.

சமூகப் பயன்பாட்டிற்காக உழைக்க வேண்டிய இவ்விளைஞர்கள் வெறுமனே வீதிகளில் ஒன்றகூடிக்கொண்டு வகுப்புகளுக்குச் செல்லும் பெண்களைப் பகிடி செய்வதால் என்ன சாதித்தார்கள்?. சமூக மட்டத்திலும், கிண்டல் செய்யப்படுகின்ற அப்பெண்களிடத்திலும் ‘கெட்டவர்கள்’ எனும் அவப் பெயரைத்தான் சுமந்தார்களேயன்றி வேறு எவற்றையுமல்ல. திருமறைக் குர்ஆன் 24:31 வசனத்தில் அல்லாஹூத்தஆலா

‘(நபியே!) இறைவிசுவாசியான ஆண்களிடம் (பெண்களைப்) பார்ப்பதை விட்டும், தங்களது பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் படியும் வெட்கஸ்தலத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் படியும் கூறுவீராக! அது அவர்களுக்குத் தூய்மையானது’ எனக் குறிப்பிடுகின்றான்.

அதே போன்று அல்லாஹ்வின் தூதர் மறுமை நாளில் இறைவனின் நிழலைப் பெறுவோரின் பட்டியலில் இறை வணக்கத்தில் வளர்ந்த இளைஞனையும் குறிப்பிடு கின்றார்கள். (ஆதாரம்: ஸஹீஹூல் புஹாரி 6806).

எனவே வீதிகளில் ஓய்வுக்காக ஒன்று கூடும் சகோதரர்கள் வீதிக்குரிய முதலாவது உரிமையாகிய ‘அந்நிய பெண்களைப் பார்க்காமல் பார்வையைத் தாழ்த்திக் கொள்வது’ எனும் உரிமையை அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதே போன்று வீதிகளில் பயணிக்கும் மனிதர்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் செயற்பாடுகளை சர்வ சாதாரணமாக சிலர்கள் செய்து வருகின்றனர்.

எத்தனையோ சகோதரிகள் தங்களுடைய வீடுகளில் சமைத்த கழிவுப் பொருட்களை தனது சுவருக்குப் பின்னால் அதாவது வீதிக்கு வீசி விடுகின்றனர். சில நேரங்களில் பல நாட்களாக அக்கழிவுகள் தேங்கிக் கிடப்பதால் புதிய புதிய பல நோய்களுக்கு அப்பகுதியில் உள்ள மக்களும், அவ்வீதியால் பயணிக்கும் பயணிகளும் ஆளாகின்றனர். இக்கொடுமையை சில சகோதரிகள் சாதாரணமாக நினைப்பதே இதற்கு அடிப்படைக் காரணமாகும். அலட்சியமாகக் கருதப்படும் இச்செயல் அல்லாஹ்வின் பார்வையில் ஆபத்தானது என்பதை இவர்கள் ஏனோ மறந்து விடுகின்றனர்.

அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் இது பற்றி பின்வருமாறு கூறினார்கள் இறை நம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான அல்லது அறுபதுக்கும் அதிகமான கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது ‘தொல்லை தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவதாகும்’ நாணமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளைதான். (அறிவிப்பாளர்: அபூ{ஹரைரா, ஸஹீஹூ முஸ்லிம். 58)

மேற்குறித்த செய்தியில் ‘தொல்லை தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது ஈமானில் ஒரு பகுதி’ எனும் தகவல் அல்லாஹ் வுடைய தூதரால் முன்வைக்கப்படுகின்றது.

இந்நபி வழியை உதாசீனம் செய்வதால் இன்று எத்தனையோ வீதிகள் பார்ப்பதற்கு அசிங்கமானதாகவும் அருவருப்பு நிறைந்ததாகவும் காணப்படுகின்றன. இஸ்லாமிய மார்க்கம் அநியாயத்தை முதன்மையாக எதிர்க்கும் தனித்துவமான மார்க்கம் என்பதைத் தெரிந்த கொண்ட எத்தனையோ சகோதர, சகோதரிகள் வீதியைப் பாதுகாக்கும் விடயத்தில் அலட்சியமாக இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். சில பெண்கள் தங்களது வீட்டைக் கழுவி விட்டு அழுக்குத் தண்ணீரை வெளியே விட்டு விடுகின்றனர்.

தங்களது வீட்டை சுத்தமாக வைத்திருக்க விரும்பும் இப்பெண்மணிகள் வீதியை அசிங்கப் படுத்தி அல்லாஹ்வின் கோபப் பார்வைக்கு ஆளாகின்றனர். அதுமாத்திரமில்லாமல் வீதியோரங்களில் வசிக்கும் சில சகோதரிகள் தங்களது குளியலரைக் கழிவு நீரை வீதிகளில் திறந்து விடுகின்றனர். இது பகிரங்கமான அநியாயமில்லையா? ‘பாதையில் செல்வோருக்கு சொல்லாலும், செயலாலும் துன்புறுத்தும் இச்சகோதரிகள் அல்லாஹ்வின் தண்டனையைப் பயந்து கொள்ள வேண்டும்.

மனித நேயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் ‘வீதிகளில் மக்களுக்கு இடையூறு தரும் பொருளை அகற்றுவதின் சிறப்பைக் கூறுவதைப் பாருங்கள்!

‘ஒரு மனிதர் (தொழுவதற்காக) நடந்துவரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையை விட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதை விட்டும்) பிற்படுத்தி விட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்கு பாவமன்னிப்பும் அளிக்கிறான்’ என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி. ஹதீஸ் இல:652).

இவ்வாறான நபிமொழிகளை எமது சமூகத்தில் அதிகமானோர் புறந்தள்ளி சூழலை மாசுபடுத்துவது சமூக விரோதச் செயலாகும். ஆரோக்கியமான சமூக சூழலைத் தோற்றுவிக்குமாறு அல்லாஹ்வின் தூதரின் அழகான வழிகாட்டல்கள் இருந்தும் முஸ்லிம்கள் அலட்சியமாக அவற்றைக் கருதுவது, எதிர்காலத்தில் மாற்று மத அன்பர்களிடம் இஸ்லாமியக் கொள்கைப் பரவலாக்கத்திற்கு மிகப் பெரிய ஆபத்தான தடைக்கல்லாக இவ்வாறான விடயங்கள் அமைந்து விடும் துரதிஷ்டம் உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
(வளரும்)….

 

<<Back to Megazine Index

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers