நாம் ஒற்றுமைக்கு எதிரானவர்களா?
விமர்சனம்: உங்களது பிரச்சார வழிமுறை பல்வேறு பிரிவுகளை ஊரில் தோற்றுவிக்கின்றது. நீங்கள் ஊர்த் தலைமைக்குக் கட்டுப்பட்டு ஒற்றுமையாக நடந்தால் என்ன?
விளக்கம்: நிச்சயமாக நாம் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் அல்ல. ஒற்றுமையை அதிகம் வலியுறுத்தி வருகின்றோம். நாம் வலியுறுத்தும் ஒற்றுமை மனிதர்களின் கற்பனையில் உதித்த போலி ஒற்றுமையை அல்ல. மாறாக திருமறைக் குர்ஆனின் (3;103)ம் வசனம் கூறும் ஒற்றுமையையே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
‘அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்!’ என அல்லாஹ் ஒற்றுமையைப் பற்றிக் கூறுகின்றான்.
அல்குர்ஆன் கூறும் ஒற்றுமை ஒன்றே உலக மக்களின் ஒற்றுமைக்கு ஒரே வழி. அதைத் தவிர ஒற்றுமைக்கு வேறு வழியே இல்லை. அல்லாஹ்வின் மார்க்கத்தில் உள்ளதை உள்ளபடி பிரச்சாரம் செய்தால் நிச்சயமாக சத்தியம், அசத்தியம் என இரு பிரிவுகள் தோன்றத்தான் செய்யும். இதனைத் தவிர்க்க முடியாது. அமைதியாகவும், சாந்தமாகவும் இருந்த எத்தனையோ ஊர்களில்தான் நபிமார்கள் ஓரிறைக் கொள்கையை மூலமந்திரமாகக் கொண்ட சத்தியப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.
நபிமார்கள் மேற்கொண்ட தீவிரப்பிரச் சாரத்தால் அவ்வூர்கள் இரு பிரிவுகளாகின. இதனால் நபிமார்களைப் பிரிவினைவாதிகள் என்றோ ஒற்றுமையை விரும்பாதவர்கள் என்றோ கூற முடியுமா? உலக விவகாரங்களில் ஊர்த் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படலாம். ஆனால் மார்க்க விவகாரங்களில் ஊர்த்தலைமைக்குக் கட்டுப்பட்டால் நரகத்தைத் தவிர வேறு தங்குமிடமில்லை என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
‘அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?’ எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக!. அவர்களை மிகப்பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!. (எனவும் கூறுவார்கள்)’.
(33:66-68)
மேற்குறித்த இறைவாக்குச் சொல்லும் பாடமென்ன? மார்க்க விவகாரங்களில் அல்லாஹ்வின் தீர்ப்பைத் தான் ஒரு உண்மை முஸ்லிம் பின்பற்ற வேண்டுமே தவிர ஊர்த்தலைமை சொல்லும் தீர்ப்புக்களை அல்ல. மார்க்க விவகாரங்களில் நாம் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் தான் கட்டுப்பட வேண்டுமென்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். எம்மைப் பொருத்தவரையில் நாம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கு மாத்திரமே கட்டுப்படுவோம்.
இந்நிலைப்பாட்டைக் கைக்கொள்வதால் நம்மை ‘ஒற்றுமையை விரும்பாதவர்கள்’ என யாராவது கூறினால் அது அவர்களின் மார்க்க விளக்கக் குறைவையே காட்டுகின்றது. ஏனெனில் இவ்வுலகில் மனிதர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நாம் மனிதர்கள் விரும்பும் அமைப்பில் செயற்பட்டால் யாரும் யாருக்கும் உதவி செய்யமுடியாத அந்த மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் கைசேதப்பட்டவர்களாகவும், நஷ்டவாளிகளாகவும் நிற்க வேண்டிவரும் என்பதை அவ்விமர்சகர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளட்டும்.
அல்குர்ஆன், அஸ்ஸுன்னா பற்றிய தெளிவுகள் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் இக்காலத்திலும் ‘ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப்பிடியுங்கள்’ எனும் போலிவாதம் எழுப்பப்படுவதைக் காணுகின்றோம்.
அல்குர்ஆனிலோ ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலோ இடம் பெறாத எத்தனையோ அம்சங்களை இன்று எம் சமுதாயத்தவர்கள் நாளுக்கு நாள் கடைப்பிடித்து வருகின்றனர். உதாரணமாக வரதட்சணை வாங்கும் கொமையை குறிப்பிடலாம். இன்று அதிகமான முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். ஒற்றுமையாக அனைவரும் சீதனம் வாங்குவதால் நாம் சீதனத்தை அங்கீகரித்து விட முடியுமா? நாம் சீதனத்தை எதிர்ப்பதால் எம்மை ‘பிரிவினைவாதிகள்’ எனத்தான் கூற முடியுமா?.
ஒவ்வெரு சாராரும் தாங்கள் கொண்டிருக்கும் கருத்துத்தான் சரியானது என்ற பிடிவாதத்தில் இருப்பதனால் நிச்சயம் ஒற்றுமை ஏற்படாது. மாறாக தங்களது அனைத்துக் கருத்துக்களையும் விட்டு விட்டு அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் கூறும் கருத்துக்களின் பால் திரும்புவதே உண்மையான ஒற்றுமைக்கு ஒரே வழி.
இன்று சில இயக்க சகோதரர்கள் ‘முரண்பாடுகளுக்கு மத்தியில் உடன்பாடு காண்போம்’ எனும் கோஷத்தை முன்னிருத்தி மத்ஹபு களையும், புராணங்களையும் ஏற்று அதனடிப்படையில் ஒற்றுமைப்படுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
மனிதர்களின் கற்பனையில் உதித்த வெற்றுத் தீர்மானங்களைக் கைவிட்டு விட்டு அல்லாஹூத்தஆலா கூறும் ‘ஒற்றுமையின்’ பால் அனைவரும் திரும்புவோமாக!
அல்லாஹ் போதுமானவன்.
<<Back to Magazine Index

Comments are closed.