Skip to content

தாருல் அதர் சொன்னாலும் கண்மூடித்தனமாகப் பின்பற்றாதீர்கள்!

December 15, 2008

-அபூ ஹம்னா

(மக்களே!) உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்! அதைவிடுத்து நீங்கள் நேசிப்பவர்களைப் பின்பற்ற வேண்டாம்! குறைவாகவே படிப்பினை பெறுகின்றீர்கள். (07:03)

இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் மார்க்கம். கண்ணியமான இம்மார்க்கத்தில் புரோகிதம் கிடையாது. மார்க்கத்தின் பெயரால் யாரும் வயிறு வளர்க்க முடியாது. தங்களுக்கு சரி என்று பட்டவற்றையெல்லாம் மார்க்கமென்று கூறிவிட முடியாது.

தாருல் அதரைப் பொறுத்தவரை அது வஹியை மாத்திரம் பின்பற்றுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. இஸ்லாத்தின் பெயரில் மார்க்க அறிஞர்களால் போதிக்கப்பட்டிருக்கும் அத்தனை போலி மத அனுஷ்டானங்களையும் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக் கட்டி தூய இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த தாருல் அதர் விரும்புகின்றது.

மக்களுக்குத் தூய்மையான சத்திய இஸ்லாம் கிடைக்கப்பெற வேண்டுமாயின் கடுமையான உழைப்பும், முயற்சியும் பிரச்சாரக் களத்தில் தேவை என்பது யாவரும் அறிந்த விடயமே! கடுமையாண அர்ப்பணிப்போடு இப்பிரச்சாரப் பணியை அல்லாஹ்வின் அருளால் தாருல் அதர் செய்து வருகின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் 3:103 இறைவாக்கில் தெளிவாகக் கூறியிருப்பது போல் அல்லாஹ்வின் இறுதி வேதமான அல்குர்ஆனைப் பற்றிப் பிடிக்காதவரை முஸ்லிம்களிடையே ஒற்றுமை ஏற்படாது என்பதை தெளிவுபடுத்தும் அதே வேளை மனிதர்கள் யாராக இருந்தாலும் தங்கள் சொந்த யூகங்களையும், தாங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் முன்னோர்களின்(இமாம், செய்கு) யூகங்களையும் விட்டு விட்டு அல்லாஹ் 4:59 இறைவாக்கில் கட்டளையிட்டிருப்பது போல் அல்குர்ஆனின் பாலும், நபி(ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நடைமுறைகளின் பாலும் திரும்ப வேண்டுமென தாருல் அதர் தெளிவாகப் பிரச்சாரம் செய்து வருகின்றது.

மேற்குறித்த வழி முறையே முஸ்லிம் சமுதாய ஒற்றுமைக்கு ஒரே வழி. வேறு வழியே இல்லை என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்து அதை மக்களுக்கு நாம் எடுத்துச் சொல்கின்றோம்.

அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தௌளத் தெளிவாகக் கூறும் உண்மைகளையே மக்கள் மன்றத்தில் வைக்கின்றோம். அதுவும் எடுத்துச் சொல்வது, மறைக்காமல் சொல்வது, உள்ளதை உள்ளபடி நேரடியாகச் சொல்வது எங்களது கட்டாயக் கடமையாக இருப்பதால் மட்டுமே மக்கள் முன்னிலையில் எடுத்து வைக்கின்றோம். அல்குர்ஆன், அல் ஹதீஸ் போதனை, யாருடைய உள்ளத்தில் ஈமான்(விசுவாசம்) இருக்கிறதோ அவர்களுக்குப் பலன் அளிக்கத்தான் செய்கின்றது.

இது அல்லாஹ் அளித்துள்ள உறுதி மொழி. சத்தியத்தை மக்கள் மத்தியில் முன்வைக்கும் போது நாம் மிகக் கவனமாகவே நடந்து கொள்கின்றோம். இது அல்லாஹ்வின் மார்க்கம். மார்க்கப் பிரச்சாரத்தின் போது எங்களது சொந்தக் கருத்துக்கள் சத்தியத்தோடு கலந்துவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றோம்.

நமது பிரச்சாரத்தை செவிமடுக்கும் சகோதரர்களுக்கு நாம் கூறும் அறிவுரைகள் யாதெனில், நீங்கள் மத்ஹபுகளையும், பெரியார்களையும், ஊர் வழக்காறுகளையும் தூக்கி வீசி விட்டு அல்லாஹ்வின் மார்க்கமாகிய அல்குர்ஆனின் பாலும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் பாலும் திரும்புங்கள்! யார் என்ன சொன்னாலும் இஸ்லாம் என்று அல்லாஹ் அங்கீகரிப்பது அல்குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் மாத்திரம்தான்.

மார்க்கத்தை யார் சொன்னாலும் அவற்றை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்! ஒருவரின் பட்டங்களோ,பதவிகளோ மார்க்கத்தைத் தீர்மானிப்பதில்லை. அல்லாஹ் யார் யாருக்கெல்லாம் அவனது மகத்தான அருளை நாடினானோ அவர்களை மாத்திரமே சத்தியத்தைப் பிரச்சாரம் செய்யும் களத்திற்கு அனுப்புகின்றான்.

யார் மார்க்கத்தைச் சொன்னாலும் அவற்றை அல்குர்ஆனிலும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் உரசிப்பார்த்துக் கொள்ளுங்கள்! அது தாருல் அதர் சொன்னாலும் சரியே!. மத்ஹபு சிந்தனையை ஒழித்து வரும் அதே வேளை மீண்டும் மத்ஹபு மாயையிலும், தனிமனித வழிபாட்டிலும் சிக்கி விடாதீர்கள்!

மார்க்கத்தை யார் சொன்னாலும் சொல்வதைக் கேளுங்கள்! புறக்கணிக்க வேண்டாம். உள்நாட்டு உலமாக்கள், வெளிநாட்டு உலமாக்கள், உள்ளூர் பட்டதாரிகள், வெளியூர் பட்டதாரிகள், மூத்த உலமாக்கள், சின்ன உலமாக்கள் என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் அனைவரும் சொல்வதை செவிமடுங்கள்! ஆனால் அவர்களில் அல்குர்ஆனிலிருந்தும் ஆதாரபூர்வமான ஹதீஸ் களிலிருந்தும் யார் மார்க்கம் சொல்கின்றார்களோ அவற்றை மார்க்கமாக எடுத்துக் கொள்ளுங்கள்!

ஒருவரின் மீதோ, ஒரு இயக்கத்தின் மீதோ குருட்டுத்தனமான, வெறித்தனமான அன்பு கொள்ளாதீர்கள்! ஒரு அமைப்பு அல்குர்ஆனையும், ஆதார பூர்வமான ஹதீஸ்களையும் சொல்லும் காலமெல்லாம் அந்த அமைப்போடு இணைந்திருங்கள்!

நாம் பின்பற்ற வேண்டிய ஒரே தலைவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மாத்திரமே! அவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுடைய தூதருக்கு நிகராக எவரும் இவ்வுலகில் இல்லை.

மக்களை மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றாத, அற்ப இலாபத்திற்காக சத்தியத்தில் சறுகிச் செல்லாத மாமனிதர் நபிகளாரைப் பின்பற்றுவதில் கூடுதல் கரிசனை செலுத்துங்கள்! நமக்கு அல்லாஹ்வின் திருப்தி ஒன்றே தேவை. மனிதர்களின் திருப்தி அல்ல என்பதை உறுதியாக நெஞ்சத்தில் பதித்துக் கொள்ளுங்கள்!.

மனிதத் திருப்திக்காக மார்க்கமென்று எதையும் சொல்லத்தயாரான ஏமாற்றுப் பேர்வழிகள் நமது சமூகத்தில் நிறையவே இருக்கின்றனர். மக்களாகிய நாங்கள் தான் விழிப்பாக இருக்க வேண்டும். யாருடைய தோற்றங்களையோ, நாவன்மை யையோ கண்டு ஏமாந்து விடாதீர்கள்!

தாருல் அதர் என்ன கருத்துக்களைக் கூறினாலும் அக்கருத்துக்களை அல்குர்ஆனிலும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் உரசிப்பார்த்துக் கொள்ளுங்கள்!

நாங்கள் சொல்லும் கருத்துக்கள் அல்குர்ஆனிலும் ஆதார பூர்வமான ஹதீஸ்களிலும் இருந்தால் அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுப் பின்பற்றுங்கள்! இல்லாவிட்டால் எமது கருத்துக்களை தூக்கி வீசி விடுங்கள்!

அல்லாஹ் நம் அனைவரையும் ஆதாரங்களின் அடிப்படையில் மார்கத்தை விளங்கிக்கொள்ளும் மனோ பக்குவத்தைத் தந்தருள்வானாக!

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers