தாருல் அதர் அத்தஅவிய்யா-சில குறிப்புகள்
-ஆசிரியர் பக்கம்.
நீங்கள் சத்தியத்தை அசத்தியத்துடன் கலக்காதீர்கள்! அறிந்து கொண்டே உண்மையை மறைக்காதீர்கள்! (02:41)
அல்லாஹ்வின் பேரருளால் அவனது சத்திய மார்க்கத்தை அதன் தூயவடிவில் சர்வதேசமெங்கும் தெளிவாகவும், நேர்மையாகவும் பிரச்சாரம் செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட அமைப்பே தாருல் அதர் அத்த அவிய்யா ஆகும்.
இஸ்லாத்தின் சட்ட மூலாதாரங்கள் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஆகிய இரண்டு மாத்திரமே. நடைமுறையில் முஸ்லிம்களால் பின்பற்றப்படும் பெரியார்களோ, இமாம்களோ, ஊர் வழக்காறுகளோ, மத்ஹபுகளோ அல்ல என்பதை அடிப்படைக் கொள்கையாக தாருல் அதர் பிரச்சாரம் செய்து வருகின்றது.
அல்லாஹ்விற்குச் சொந்தமான இம்மார்க்கத்தில் ஆதாரமற்ற பல போலியான தகவல்கள் நிலவுவதாலேயே அத்வைதம், ஸூபித்துவம், கப்ரு வணக்கம் போன்ற இஸ்லாத்திற்கு விரோதமான கொள்கைகள் முஸ்லிம்களுக்குள் தோன்றி நாளுக்கு நாள் எமது சகோதரர்கள் தூய இஸ்லாத்தை இழந்து வருகின்றனர். இதனைக் கவனத்தில் கொண்டு இஸ்லாத்தின் பெயரால் சொல்லப்படும் அத்தனை போலியான ஹதீஸ்களையும் வன்மையாக தாருல் அதர் எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றது.
அல்லாஹ்வுக்குச் சொந்தமான இம்மார்க்கத்தில் மூடநம்பிக்கைகளுக்கு துளியளவும் இடமில்லை என்பதால் கத்தம், பாத்திஹா, கந்தூரி, மீலாது, மௌலூது, நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல், குறி சொல்லுதல், சகுனம் பார்த்தல் போன்ற பிற்போக்குத்தனங்களை அடியோடு கைவிடுமாறு தீவிர பிரச்சாரத்தை எமது அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.
ஒரு முஸ்லிம் ஈருலகிலும் வெற்றிபெற விரும்பினால் அவன் பின்பற்ற வேண்டிய ஒரே தலைவர் அல்லாஹ்வின் தூதர் மாத்திரமே! ஏனெனில், மார்க்கத்தின் பெயரால் யாரையும் ஏமாற்றாத, பொய் புரட்டலில் ஈடுபடாத, அல்லாஹ்வின் வழிகாட்டலில் தனது வாழ்வை அமைத்துக் கொண்ட ஒரே ஆன்மீகத் தலைவர் நபிகள் நாயகத்தைத் தவிர வேறு யாருமில்லை. அவரது நடவடிக் கைகளே எமக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டுமே யன்றி தொன்று தொட்டு நடைமுறையிலுள்ள வழக்காறுகல் அல்ல.
‘ஈருலக வெற்றிக்கும் நற்பேறுக்கும் ஸுன்னாவைப் பின்பற் றுங்கள்! பித்அத் செய்யாதீர்கள்!’ எனும் கொள்கையை முஸ்லிம் களுக்கு மத்தியில் இவ்வமைப்பு உரக்கச் சொல்லி வருகின்றது.
அதேபோன்று மற்றுமொரு பயங்கரத் தீமையான ஷிர்க்கையும் தயவு தாட்சண்யமின்றி தாருல் அதர் எச்சரித்து வருகின்றது.
சத்தியப்பிரச் சாரத்தை மேற்கொள்ளும் போது அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்சாமல் முற்போக்கான முறையில் செயற்படும் தாருல் அதர் எத்தகைய சோதனைகள், சவால்கள் மலையாகக் குவிந்தாலும் அவற்றை எதிர் கொண்டு தனது தஃவாப் பணியை செவ்வனே செய்து வருகின்றது. அலஹம்துலில்லாஹ்.
வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து எவ்விதமான உதவிகளையும் பெறாமல் தனது சொந்தப் பணத்திலேயே இயங்கிவரும் இவ்வமைப்பு வெறுமனே மார்க்கப் பணிகளோடு மாத்திரம் சுருங்கிக் கொள்ளாமல் சமுதாயப் பணிகளிலும் தீவிரமாகக் களமிறங்கிச் செயற்பட்டு வருகின்றது. முஸ்லிம் சமூகத்தில் அதிகம் வழக்கொழிந்து போன இரத்ததானம், சீதன ஒழிப்பு மற்றும் சீதன ஒழிப்பு போன்ற அவசியப்பணிகளைத் தொடங்கி சமூக விழிப்புணர்வை அல்லாஹ்வின் உதவியால் ஏற்படுத்தியுள்ளது. சினிமாவுக்கும், சீரியலுக்கும் அடிமைப்பட்டுப் போன ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளை அல்லாஹ்வின் தீனை நடை முறைப்படுத்தும் கொள்கைவாதிகளாக இவ்வமைப்பு மாற்றியுள்ளது.
தாருல் அதரின் சிந்தனைப் புரட்சியால் இன்று இளைஞர் சமூகம் கல்வித் துறையில் முன்னேற்றம் காண ஆரம்பித்துள்ளதை உணரக்கூடியதாக உள்ளது. ஆபாசமும், அநாவசியமும் நிறைந்திருக்கும் இன்றைய இணைய தளத்தில் அல்லாஹ்வின் மார்க்கத்தை தமிழ் பேசும் அன்பர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள தாருல் அதர் ஓர் இணைய தளத்தையும் தொடங்கி சர்வதேசமெங்கும் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது.
முன்னேறி வரும் இன்றைய உலகில் அதிகரித்துக் காணப்படும் தவறான பொருளீட்டலையும் மேற்கத்தைய மோகத்தையும் கைவிடுமாறும் எமது அமைப்பு தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது.
சத்தியத்தை மறைப்பதும், மறுப்பதும் அல்லாஹ்வின் சாபத்திற்குரிய குற்றமென்பதால் சமூக ஒற்றுமையைக் காரணம் காட்டி சத்தியத்தில் சமரசம் செய்வதை தாருல் அதர் வன்மையாகக் கண்டிக்கின்றது. நேர்மையாகவும் ஜனநாயக அடிப்படையிலும் பிரச்சாரம் செய்யும்போது எமது அமைப்பிற்கு அல்லாஹ்வின் வெற்றியும், உதவியும் நிச்சயம் இருக்கும் என்ற ஆன்மீக நம்பிக்கையோடு தஃவா செய்யும் இவ்வமைப்பின் வளர்ச்சிக்காக அல்லாஹ்விடம் நாம் அனைவரும் இருகர மேந்துவோம்.
இம் ‘மாத இதழ்’ ஏன் வெளியிட நேர்ந்தது?
அல்லாஹ்வின் பேரருளால் அவனது சத்தியக் கொள்கையை தெளிவாகவும், நேர்மையாகவும் பிரச்சாரம் செய்யும் தாருல் அதர் மிக நீண்ட காலமாக ஒரு மாதாந்த இதழை வெளியிடுவதற்கு உத்தேசித்திருந்தது. இஸ்லாமியக் கொள்கையில் போதிய தெளிவில்லாமலும், திருப்தியில்லாமலும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் துயர் நிலையை, எழுத்துப் புரட்சியால் மாற்றியமைத்து ஆரோக்கியமான, தூர நோக்குள்ள, நேர்மைக்கும் மற்றும் நியாயத்திற்கும் குரல் கொடுக்கும் ஆக்கபூர்வமான முஸ்லிம் சமூகத்தைக் கட்டியெழுப்புவதே இம்மாத இதழின் அடிப்படை நோக்கமாகும்.
இச்சமூகத்தில் எத்தனையோ மாத இதழ்கள் வெளி வருகின்றன. ஆனால் அவைகளில் அதிகமானவை அல்லாஹ்வின் வஹியை சுமக்காமல் தனிமனிதக் கருத்துக்களையும், தேவையற்ற சரிதைகளையும் சுமந்து மக்களை மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றி வருகின்றன. ‘அல் அதர்’ மாத இதழைப் பொறுத்தமட்டில் முழுக்க முழுக்க வஹியை மாத்திரம் மூலதனமாகக் கொண்டு தனிமனிதக் கருத்துக்களை ஆதாரமாகக் கொள்ளாமல் இருப்பதே இவ்விதழுக்கான தனிச் சிறப்பாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் எமது தூய்மையான எண்ணத்திற்கு நிறைவான கூலியைத் தந்தருள்வானாக. இன்னும் இவ்விதழின் தூய்மையான நோக்கத்தை அல்லாஹ் நிறைவேற்றுவானாக!
Back to Megazine Index

Comments are closed.