Skip to content

உணரப்படாத பயங்கரத் தீமை வட்டி!

December 15, 2008

-அபூ நதா

நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள் (3:130)

இஸ்லாம் அழகானதும், அறிவுபூர்வமானதுமான பூரண வாழ்கைத் திட்டம் என்பதை நாம் அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றிருக்கின்றோம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் ஒன்றைத் தடுத்தால் அதில் நிச்சயம் எந்த இலாபமும், பிரதி பலனும் இருக்கமாட்டாது என்பதையும் அவர்கள் ஒன்றை ஏவினால் அதில் நிச்சயம் வெற்றியும், உதவியும் இருக்குமென்றும் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும்.

இந்த நம்பிக்கையையே அல்லாஹ்வுடைய தூதர் ஆழமாக அருமைத் தோழர்களின் உள்ளத்தில் வேரூன்ரச் செய்தார்கள். இஸ்லாமிய மார்க்கத்தில் மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்டதும் தடுக்கப்பட்டதுமான பயங்கரத் தீமையே ‘வட்டி’ ஆகும்.

பொதுவாக ஒரு மனிதன் ஏமாற்றப்படுவதை எதிர்க்கும் இஸ்லாம் ‘வட்டி’ எனும் இக்கொடிய பாவத்தையும் அக்காரணத்தை மையப்படுத்தியே எதிர்க்கின்றது. இன்று எமது சமூகத்தில் நடைபெறும் பெரும் பாலான வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களை நோக்குமிடத்து அங்கு ‘வட்டி’தான் அடிப்படையாகக் கொள்ளப்படுவதைக் காணமுடிகின்றது.

அல்லாஹ்வின் அருளை முழுக்க முழுக்க இழக்கச் செய்யும் இப்பாவத்தை எமது முஸ்லிம் வியாபாரிகள் சர்வ காதாரணமாக கடைப்பிடிப்பதே இன்று பெரும் சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த வட்டியைப் பற்றி திருமறைக் குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

‘வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். ‘வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபா ரத்தை அனுமதித்து வட்டியைத் தடைசெய்துவிட்டான்.

தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்தபின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்’ (2:275). இவ்வசனம் நமக்கு மூன்று பாடங்களை இரத்தினச் சுருக்கமாக முன்வைக்கின்றது.

1. அல்லாஹ்வால் வட்டி தடுக்கப்பட்டு விட்டது.
2. வட்டியை உண்போர் நாளை மறுமையில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள் 
3. வட்டியை உண்போர் நிரந்தர நரகவாதிகள்.

இம்மூன்று விடயங்களையும் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் அச்சத்தோடு ஆழமாக சிந்தித்தால் வட்டியோடு தொடர்பான அத்தனை காரியங்களையும் உடனடியாக நிறுத்திக் கொள்வான். முஸ்லிம்களாகிய நமது இலக்கே அந்த சுவனத்தை அடைவது தான். ஆனால் இந்த வட்டியோடுள்ள தமது வியாபாரத்தினால் நிரந்தர நரகை ஒரு முஸ்லிம் அடைய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றான்.

வட்டிக்குக் கொடுப்பவனும், எடுப்பவனும், அதற்கு உறுதுணையாக இருப்பவனும ‘வட்டி நமது வருமானத்தை நிச்சயம் பெருக்கும’ எனும் மறைமுகமான ஒரு நம்பிக்கையில் தான் வட்டிக்குத் துணைபோகின்றார்கள். இவர்களின் இந்த நம்பிக்கையை அல்குர்ஆன் வன்மையாக மறுப்பதை ஸுரதுல் பகராவின் 276வது வசனத்தில் காணலாம்.

‘அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்’ (2:276).

அதேபோன்று தான் திருமறைக் குர்ஆனில் வட்டி எடுப்து இறையச்சத்தைப் பாதிக்கும் விடயம்; என்பதை பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்’ (2:278).

 அநியாயங்களும், அட்டூழியங்களும் தலைவிரித்தாடும் இக்காலகட்டத்தில் அல்குர்ஆனிய மனிதர்களாக வாழ்வதென்பது உள்ளங்கையில் நெருப்புத் தணலை வைத்திருப்பது போன்று தான். இருந்த போதிலும் இஸ்லாம் முற்றாகத் தடுத்த இவ்வட்டியை நாம் கைவிடும் போதுதான் அல்லாஹ் நமது வியாபாரத்திலும், குடும்பத்திலும் அருளையும் நிறைவான திருப்தியையும் தருவான் என்பதை வர்த்தகர்களாக இருக்கும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பொருளாதார ரீதியில் தொடர்ச்சியான பின்னடைவை முஸ்லிம் சமூகம் பல நூற்றாண்டுகளாக சந்தித்து வருகின்றது என்றால் அதற்கு வட்டியும் ஒரு காரணமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

வட்டித் தொழிலினால் நடுத்தெருவுக்கு வந்த எத்தனையோ குடும்பங்களை நாம் கண்கூடாக பார்க்க வில்லையா? எதிர்கால முஸ்லிம் சமூகத்தை மென்மேலும் குட்டிச் சுவராக்கும் இவ்வட்டிக்கு துணைசெய்யும் அத்தனை மனிதர்களும் ஒரு முறை மறுமையை நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வங்கிகளில் சிறு வட்டியை எடுத்துக் கொள்ளலாமென்ற பிழையான பத்வாக்களைக் வீசி விட்டு காலத்தால் முரண்படாத அல்லாஹ்வின் இறைச் செய்திகளான அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் நமது வியாபாரம் உட்பட அனைத்திற்கும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.

எப்பாவத்திற்கும் சொல்லப்படாத உவமானம் இந்தப் பயங்கரத் தீமையான வட்டிக்கு மாத்திரமே சொல்லப்படுகின்றது அல்லாஹ் தனது திருமறையில் 2ம் அத்தியாயம் 279ம் வசனத்தில் பின்வருமாறு கூறுகின்றான்:

 ’அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது’ (2:279).

அன்புக்குரிய வியாபாரிகளே!

இந்த வட்டியை இன்றிலிருந்தாவது நாம் விட்டொழிப்போம். வட்டிக்கு உறுதுணையாக அமையும் அத்தனை காரியங்களையும் கைவிட்டு விட்டு உண்மை முஸ்லிம்களாக நீதிக்கும் நியாயத்திற்கும் குரல் கொடுக்கும் இஸ்லாமிய வியாபாரிகளாக நாம் மாறுவதற்கு முயற்சிப்போமாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் எமது நெஞ்சங்களில் அவனின் அச்சத்தை நிறைவாகத் தந்தருள்வானாக!

<<Back to Magazine Index

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers