Skip to content

அன்பான அழைப்பாளர்களே! அழைப்புப்பணியில் அயராது உழையுங்கள் !

November 21, 2008

அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே!  வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் விளக்கம் வந்த பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பான்.

அவர்கள் உம்மிடம் விதண்டாவாதம் செய்வார்களானால் ‘என் முகத்தை அல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும் (இவ்வாறே செய்து விட்டனர்) ‘எனக் கூறுவீராக! வேதம் கொடுக்கப்பட்டோரிடமும் எழுதப்படிக்கத் தெரியாதோரிடமும் ‘இஸ்லாத்தை ஏற்கிறீர்களா?’ என்று கேட்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர்வழி பெற்றனர். புறக்கணித்தால் எடுத்துச் சொல்வதே உமக்குக் கடமை. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.(3:19,20)

அல்லாஹ்ஹுத்தஆலா தன்னுடைய வழிகாட்டலை அனைத்து மக்களுக்கும் எட்டச் செய்வதற்காகவே தூதர்களை இவ்வுலகிற்கு அனுப்பினான். அத்தூதர்கள் தன்னலம் பாராது கெளரவங்களை எதிர்பார்க்காமல் பல்வேறு சவால்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் அல்லாஹ்வினால் அமானிதமாக நம்பி ஒப்படைக்கப்பட்ட இந்த தஃவாப் பணியினை மேற்கொண்டார்கள் என அல்லாஹ் தனது அருள் மறையில் குறிப்பிடுகின்றான்.

கொலை மிரட்டல் சத்தியத்தைச் சொன்னதால் ஊர் விலக்கம் மார்க்கத்தில் உள்ளதை உள்ளபடி சொன்னதால் ஊர்த்தலைமையின் கெடுபிடிகள் போன்ற இன்னோரன்ன சவால்களுக்கு மத்தியிலும் அயராது இப்பணியினை அவர்கள் மேற்கொண்டார்கள். அல்லாஹ் எத்தகைய சோதனைகளை வைத்தபோதிலும் அதில் வென்ற முன்னெனி வீரர் நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ் தனது அருள் மறையில் ‘இப்றாஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்’ (2:124) எனக் குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ்வின் மார்க்கத்தை அதன் தூயவடிவில் எடுத்துரைத்த இப்றாஹீமை அம்மக்கள் அங்கீகரிக்கவில்லை. அல்லாஹ்வின் சோதனைகளையும் மக்களின் விமர்சனத்தையும் பொறுத்துக் கொண்டு இப்பணியில் இருந்து ஓயாமல் அயராது அவர் பாடுபட்டதால் அல்லாஹ்விடத்தில் உயர் அந்தஸ்த்தைப் பெற்றார் என்பதை அல்குர்ஆனைப் படிக்கும் அனைவரும் புரிந்து கொள்வர்.

நமது நாடான இலங்கையைப் பொருத்தமட்டில் அழைப்புப் பணியென்பது அநாதரவான ஒன்றாக இன்று நடைபெற்று வருவதை நாம் காணுகின்றோம். அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்தித்து உதவி பெற வேண்டிய எம்மவர்கள் மகான்கள் பெரியார்கள் நாதாக்கள் அவ்லியாக்கள் என்று ஜியாரங்களில் மண்டியிட்டு அல்லாஹ் அல்லாதவர்களிடத்தில் பிராத்திக்கும் அவலத்தை என்னவென்பது?. ஷிர்க் பித்அத் மூடநம்பிக்கை மேற்கத்தைய மோகம் பிற்போக்கு சிந்த்தனை அசமந்தப் போக்கு போன்ற நோய்களால் இன்று எம் சமூகம் பாழ்பட்டிருப்பதை நோக்கும் போது அழைப்புப் பணியானது அத்தியவசியமான ஒன்றாகத் திகழ்கின்றது.

இதற்கிடையில் இஸ்லாத்தின் பெயரில் பல்வேறு அமைப்புக்கள் ‘தஃவா’ எனும் சுலோகத்தோடு மக்களை இஸ்லாத்தில் இல்லாத தனிமனிதக் கருத்துக்களை நோக்கியும் மத்ஹபுகள் எனும் கற்பனைக் காவியங்களை நோக்கியும் அழைப்பு விடுத்த வண்னமுள்ளன. அல்குர்ஆன் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் பற்றிய ஆழமான அறிவில்லாத பாமர மக்களும் நுனிப்புல் மேயும் சில மார்க்க அறிஞர்களும் இவ்வலையில் சிக்கி ‘இது இஸ்லாமாகத்தான் இருக்கும்’ எனும் மயக்கத்தில் அதற்காகப் பாடுபட்டு வருகின்றனர்.

மார்க்கத்தைச் சொல்லும் மனிதர்களின் பின்புலத்தை மையமாகவும் சத்தியத்தைப் பிரச்சாரம் செய்யும் அமைப்புக்களின் ஆதரவாளர்களின் எண்னிக்கையையும் வைத்து ‘இது போலியானது’ எனக் கருதி உண்மையான மார்க்கத்தைத் தொலைத்து விட்டு தடுமாறும் சகோதரர்களுக்கு அல்லாஹ்தான் நேர்வழி காட்ட வேண்டும். மார்க்க விளக்கம் குன்றிய எமது சகோதரர்களின் இந்நிலையை மாற்றியமைக்க அனைத்து தெளஹீத் பிரச்சாரகர்களும் முன்வரவேண்டும்.

அது மாத்திரமில்லாமல் இப்பணியானது சோதனைகளும் துன்பங்களும் நிறைந்த பணியாகும். இப்பணியினை மேற்கொள்ளும் போது கெளரவங்களை எதிர்பார்க்கக் கூடாது. கண்னியமாகவும் சமூக அந்தஸ்த்தோடும் வாழ்ந்த எத்தனையோ நபிமார்கள் சத்தியத்தை முன்வைத்ததற்காக வேண்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை அச்சொட்டாகப் பின்பற்றிய எத்தனையோ நபிமார்கள் மக்கள் மன்றத்தில் மானபங்கப்படுத்தப்பட்டார்கள். இதனால் அவர்கள் அன்றைய மக்களிடம் மானத்தை இழந்து நின்றாலும் அல்லாஹ்வின் பார்வையில் கெளரவமானவர்கள் என்பதை ஒவ்வெரு தாயிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

அசத்தியவாதிகள் செய்யும் அர்ப்பணிப்புக்கள் கூட சில வேளை சத்தியவாதிகள் செய்யாமல் இருப்பது எமக்கு மத்தியில் இருக்கும் அசமந்தத்தையே படம் பிடித்துக் காட்டுகின்றது. ஒரு காலத்தில் சத்தியப்பிரச்சாரத்திற்கு என்று களமிறங்கிய சில சகோதரர்கள் கூட‌ இன்று கிடைக்கும் சொகுசுகளுக்காக தஃவாவைத் தொலைத்து விட்டு அசத்தியவாதிகளோடு கைகோர்த்து நிற்கும் நிலையைப் பார்க்கும் போது உண்மைப் பிரச்சாரகர்கள் அல்லாஹ்விடம் இப்பணியில் நிலைத்திருக்கப் பிரார்த்திப்பது அவசியமென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தஃவாப் பணியென்பது மகத்தானதும் அருள் நிறைந்ததுமான ஒரு பணியாகும். அல்லாஹ்வின் கட்சிக்காக மக்களை அழைத்தால் அல்லாஹ் நமக்கு மனநிறைவான வாழ்வை ஏற்படுத்துவான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் அமானிதமாக எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இப்பணியினைச் செய்வதற்கு அனைத்துப் பிரச்சாரகர்களும் அணிதிரள்வோமாக!

அல்லாஹ் நாம் அனைவ‌ரும் மேற்கொள்ளும் ம‌க‌த்தான‌ இப்ப‌ணிக்காக‌ முழுமையான‌ கூலியைத் த‌ந்த‌ருள்வானாக‌!

.

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers