கவாரிஜ்கள் என்போர் யார்???
அஷ்ரப் அஹ்மத் அல் அதரி
இஸ்லாமிய வரலாற்றில் அல்லாஹ்வின் தூதரின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட அகீதா ரீதியான முரண்பாட்டால் உருவான சாராரே “கவாரிஜ்கள்”எனும் சாராராகும்.இவர்கள் இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதால் அன்றைய நபித்தோழர்களால் முர்த்தத்களாக நோக்கப்பட்டு “நஹ்ரவான்”எனுமிடத்தில் கொலை செய்யப்பட்டார்கள்.
இவர்களின் கொள்கைகள் என்ன? “கவாரிஜ்களை”எதிர்த்தவர்கள் யார் போன்ற பல தகவல்களை இவ்வாய்வு அலசுகின்றது.கவாரிஜ்கள் என்ற வார்த்தைக்கு நேரடி அர்த்தம் ‘கிளர்ந்தெழுவோர்’ என பொருள்படும்.இவர்களுக்கு இப்பெயர் சூட்டப்படுவதற்கு காரணம் இஸ்லாமிய ஆட்சிக்கெதிராக அக்காலத்தில் இவர்கள் கிளர்ந்தெழுந்ததும் ஓர் அடிப்படைக் காரணமாகும்.
இப்பெயர் அல்லாமல் வேறு பெயர்களும் இவர்களுக்குண்டு உதாரணமாக முஹக்கிமா, ஹரூரிய்யா,அஹ்லுன்னஹ்ரவான், மாரிகா, முகப்பிரா என்பன போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.இவர்களின் பிரதான கொள்கைகள் பின்வருமாறு:
1.இஸ்லாத்தின் மூன்றாம் கலீபா அலி(ரலி)அவர்களை நாகூசாமல்”காபிர்”என அழைத்தமை.
2.அல்குர்ஆன் படைக்கப்பட்டது எனும் மோசமான கருத்தைக் கொண்டிருத்தமை.
3.பெரும்பாவங்கள் செய்த முஸ்லிம்களை “காபிர்”என அழைத்தமை.
4.இஸ்லாமிய ஆட்சிக்கெதிராக கிழர்ச்சி செய்தமை.
5.இப்னு அப்பாஸ்(ரலி)அவர்களை இழிவாகக் கருதியமை.
மேற்குறித்த காரணங்களால் இவர்கள் வழிகேடர்களாக அன்றைய நபித்தோழர்களால் கருதப்பட்டார்கள்.மார்க்க விவகாரத்தில் மிகக் கடுமையாக எல்லை மீறிப்போய் இருதியில் முர்தத்களாகவே இவர்கள் மாறிப்போய்விட்டனர். அல்லாஹ்வுடைய தூதரால் முன்னெச்சரிக்கையாகக் கூறப்பட்ட இந்த கவாரிஜ்களைப் பற்றி ஸஹீஹு முஸ்லிமில் வரும் நபிமொழி அழகாக விபரிக்கின்றது.
அபூ சயீத் அல்குத்ரீ(ரலி)அவர்கள் கூறியதாவது:நபி(ஸல்)அவர்கள் தம் சமுதாயத்தாரில் தோன்றவிருக்கின்ற ஒரு கூட்டத்தாரைப் பற்றிக் கூறுகையில்”அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்.மொட்டை போடுவ(தை பக்தி மார்க்கமாகவும்,வழிபாடாகவும் கொண்டிருப்ப)துதான் அவர்களின் அடையாளமாகும். அவர்கள் தாம் படைப்பினங்களிலேயே தீயவர்கள்.அல்லது படைப்பினங்களில் தீயவர்களில் உள்ளவர்களாவர்.இரண்டு பிரிவினர்களில் உண்மைக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிரிவினர் அவர்களை அழிப்பார்கள் என்று கூறினார்கள்.(ஹதீஸ் இல:1927)
கவாரிஜ்களின் தோற்றம்: இஸ்லாமிய வரலாற்றில் உஸ்மான்(ரலி) அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு வகையான பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன.உஸ்மான்(ரலி) அவர்களின் மறைவைத் தொடர்ந்து அலி(ரலி) அவர்கள் ஆட்சியைப் பொறுப்பெடுத்த நேரத்தில் பல்வேறு வகையான நிர்வாகச் சிக்கல்களை அவர்கள் எதிர்கொண்டார்கள்.
அதில் முதன்மையான சிக்கல் உஸ்மானைக் கொன்ற கொலைஞர்களை முதலில் கண்டுபிடிப்பதா? அல்லது ஆட்சித் தலைவர் ஒருவர் ஆட்சிபீடமேறிய பிறகு அதிகாரத்தினால் அவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதா? என்பதில் அன்று சிரியாவில் கவர்னராக இருந்த முஆவியா(ரலி) அவர்களுக்கும் அலி(ரலி)அவர்களுக்கும் கருத்து முரண்பாடு தோன்றியது.
இக்கருத்து முரண்பாட்டை உடன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் இரு நபித்தோழர்களும் சமரச சபை ஒன்றை ஏற்படுத்த இணங்கினர்.இதனை ஏற்றுக் கொள்ள ஒரு சாரார் மறுத்தனர். மறுத்ததோடு இவ்வாறு செயற்படுவதற்கு முன்னெனியாகத் திகழ்ந்த அலி(ரலி) அவர்களை நாகூசாமல் “காபிர்”எனக் கூறி கிழர்ச்சி செய்தனர்.இவர்களையே “கவாரிஜ்கள்” என நாம் அழைக்கின்றோம். கவாரிஜ்களின் இம்மோசமான நடவடிக்கையை அன்றைய நபித்தோழர்கள் வன்மையாக எதிர்த்தனர்.இஸ்லாத்தில் அதிகாரம் கொடுக்கப்பட்ட ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படாமல் கிழர்ந்தெழுந்த கவாரிஜ்களை அலி(ரலி)அவர்கள் கொன்றொழித்தார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹு முஸ்லிம்/ஹதீஸ் இல:1934)
கவாரிஜ்களின் அடையாளங்கள்:
கவாரிஜ்களைப் பொருத்தமட்டில் இஸ்லாமிய அகீதாவை விட்டு அவர்கள் திசைமாறி முர்தத்களாகப் போனவர்கள்.இவர்களின் அடையாளத்தை அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்)அவர்கள் உயிருடன் வாழுகின்ற போதே அழகாக எமக்கு முன்னறிவிப்புச் செய்துவிட்டு மரணித்துப் போனார்கள்.
1.ஈராக் பகுதியிலிருந்து அவர்கள் தோன்றுதல்:
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.கிழக்கு(ஈராக்)திசையிலிருந்து வழிதவறிய ஒரு கூட்டத்தார் கிழம்புவார்கள்.(ஆதாரம்:ஸஹீஹு முஸ்லிம்:1938)
2.அவர்கள் மொட்டை அடித்திருத்தல்:
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.கிழக்கு(ஈராக்)திசையிலிருந்து வழிதவறிய ஒரு கூட்டத்தார் கிழம்புவார்கள்.அவர்களுடைய தலைகள் மழிக்கப்பட்டு(மொட்டையாக)இருக்கும்.(ஆதாரம்:ஸஹீஹு முஸ்லிம்:1938)
3.அவர்களில் ஊனமான கையுள்ளவன் இருப்பான்:
(கவாரிஜ்களின் யுத்தத்திற்குப் பின் அலி(ரலி)அவர்கள் யுத்தகளத்தில் நின்றவாரே)”அவர்களிடையே ஊனமான கையுடைய அந்த மனிதரைத் தேடிப்பாருங்கள்”எனக் கூறினார்கள்.(ஆதாரம்:ஸஹீஹு முஸ்லிம்:1934)
4.ஸஹாபாக்களை மிஞ்சும் அளவுக்கு வணக்கங்களில் அவர்கள் ஈடுபடல்:
அபூ சயீத் அல்குத்ரி(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:இந்தச் சமுதாயத்தாரிடையே ஒரு கூட்டத்தார் புறப்படுவர்.அவர்களது தொழுகையுடன்(நபித்தோழர்களான)உங்களது தொழுகையை ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையை அற்பமாகக் கருதுவீர்கள்.அவர்கள்(அதிகமாகக்)குர்ஆனை ஓதுவார்கள்.ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது.(ஆதாரம்:ஸஹீஹு முஸ்லிம்:1925)
மேற் குறித்த அடையாளங்களை தன்னகத்தே கொண்டிருந்த அந்த கவாரிஜ்களை அலி(ரலி)அவர்கள் அன்றே அழித்தொழித்து விட்டார்கள்.அதே நேரம் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை பற்றுடனும்,தெளிவாகவும் பிரச்சாரம் செய்யும் அறிஞர்களுக்கும் சில அறிவிலிகள் “கவாரிஜ்கள்” எனும் பெயரைச் சூட்டி,அவர்களது பிரச்சாரத்திற்கு இடையூராக இருந்ததையும் வரலாற்றில் காணமுடிகின்றது.
“நஜ்த்” எனும் பிரதேசத்தில் வாழ்ந்து இஸ்லாத்தை அதன் தூயவடிவில் எடுத்துரைத்த அல் இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்)அவர்களையும் அன்றைய கப்ரு வணங்கிகளும்,பித்அத்வாதிகளும் “கவாரிஜ்”என்றே அழைத்தனர்.எனவே தூய இஸ்லாத்தை மக்கள் மன்றத்தில் முன்வைக்கும் வேளையில் இஸ்லாமிய சட்ட நுனுக்கங்களை சரிவர அறிந்து கொள்ளத்தவரிய சில அறிவிலிகளும், பணத்திற்காக சத்தியத்தை அவமதிக்கும் அயோக்கியர்களும் தெளஹீத்வாதிகளைப் பார்த்து “கவாரிஜ்”என அழைப்பது வழமையானதே!
இவ்வாரான விமர்சனங்கள் அதிக காலம் வாழ்வதில்லை என்பதே வரலாற்று உண்மை என்பதை ஒவ்வெரு கொள்கைவாதிகள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.காலத்திற்குக் காலம் அல்லாஹ்வின் தீன் தூயவடிவில் மேலோங்கும் வேளையில் அசத்தியவாதிகள் அதனைப் பொருத்துக்கொள்ளாமல் “கவாரிஜ்,முஃதஸிலா,வஹ்ஹாபிய்யா போன்ற பிரயோகங்களைப் பயன்படுத்துவது வரலாற்று நெடுகிலும் உண்மையாகும்.
சத்தியத்தோடு மோதும் இந்த அசத்தியவாதிகள் காலம் கடந்தாவது அல்குர்ஆனினதும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களினதும் தெய்வீக சக்தியைப் புரிந்து கொள்வர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
பொருத்திருந்து பார்ப்போம்.

Comments are closed.