ஜும்ஆப் பள்ளிவாயல்களில் இஃதிகாப் இருக்கலாமா?
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
(கடந்த 12.09.2008 அன்று காத்தான்குடி 05, ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் மௌலவி அலியார் (ரியாழி) அவர்களால் ஆற்றப்பட்ட ஜும்ஆ பிரசங்கத்திற்கான மறுப்புப் பிரசுரம்)
அன்புப் பொதுமக்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூயவடிவில் ஒளிவு மறைவின்றி முற்போக்கான முறையில் சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்துவரும் அமைப்பே தாருல் அதர் அத்தஅவிய்யா என்பதை தாங்கள்; அனைவரும் நன்கறிவீர்கள்.
நீதமாகவும், நேர்மையாகவும் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் எமது அமைப்பையும், அதன் மார்க்க அறிஞர்களையும் கடந்த சில காலங்களாக ஸஊதி அரேபிய இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வந்த சிலர் எம்மை அரைகுறைகள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்காதவர்கள், அரபு நூற்கள் வாசிக்கத் தெரியாதவர்கள் என்பன போன்ற ஆரோக்கியமற்ற வார்த்தைகளைப் பிரயோகித்து விமர்சித்து வருவதை பொதுமக்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள்.
தங்களுக்குக் கிடைக்கும் அத்தனை சந்தர்ப்பங்களையும் எம்மை தூசிப்பதற்கே பயன்படுத்தும் இப்பட்டதாரிகள்(?) புனிதமான மிம்பர் மேடைகளையும் அதற்குப் பகடையாகப் பயன்படுத்துகின்றனர். இதன் உண்மை நிலையை பொதுமக்களாகிய உங்களுக்கு தெளிவு படுத்துவதுதான் இப்பிரசுரத்தின் நோக்கமாகும்;.
அல்லாஹ்வை றப்பாகவும் முஹம்மது நபிகளாரை இறைத் தூதராகவும் ஏற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம்களாகிய நாம், நம்மத்தியில் மார்க்க ரீதியான கருத்து முரண்பாடுகள் தோன்றும்போது அவனது வஹியாகிய அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவிலேயே தீர்வைப் பெற்றுக் கொள்ளும்படி ஏவப்பட்டுள்ளோம்.
இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது.
‘ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآَخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
(நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் (உண்மையான முறையில்) இறை விசுவாசம் கொண்டிருந்தால் உங்கள் மத்தியில் மார்க்க ரீதியாக கருத்து முரண்பாடு தோன்றும்போது அல்லாஹ்வின் பாலும் அவனது தூதரின்பாலும் கொண்டுசெல்லுங்கள்; இதுவே மிகவும் சிறந்ததும் அழகிய விளக்கமுமாகும்(4:58).
அன்பார்ந்தவர்களே!
இதனை அடிப்படையாக வைத்து நம் மத்தியில் தற்பொழுது பாரிய சர்ச்சையாக உருவெடுத்திருக்கும் ‘இஃதிகாப் எங்கே இருப்பது?’ என்கின்ற விடயத்தில் தீர்வைக்காண முற்படுவோம். அதற்கு முன் நாம் இங்கு அல்குர்ஆன் அல் ஹதீஸை விளங்குவதற்கான அடிப்படையான ஓர் சட்ட விதியைப் புரிந்துகொள்வது அவசியமாகும். அதாவது அல்குர்ஆனில் பொதுப்படையாக ஒரு வசனம் கூறப்பட்டு பின்னர் வேறொரு வசனம் அல்லது ஹதீஸ் அப்பொதுப்படையைத் குறிப்பாக்கும் முகமாக இருந்தால் குறிப்பாக்குவதை வைத்தே மார்க்கச் சட்டம் இயற்றப்படும்.
இவ்விதியில் இமாம்களுக்கு மத்தியில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. இதனை அரபு மொழி சட்டக்கலை வல்லுனர்கள் இவ்வாறு அழைப்பர்.
يجب العملُ بالدليل المخصص في صورة التخصيص وإهدارُ دلالة العام عليها، ولا يجوز حمل
(اللفظ العام وإبقاؤه على عمومه (معالم أصول الفقه عند أهل السنة والجماعة – (ج 1 ஃ ص 390
எனவே இவ்விதியை மனதில் பதிய வைத்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டு எமது ஆய்வில் நுழைகின்றோம்.
அல்லாஹுத்தஆலா தனது திருமறையில் (2:187) ‘وَأَنْتُمْ عَاكِفُونَ فِي المساجد நீங்கள் பள்ளிவாயல்களில் இஃதிகாப் இருக்கும் சமயம்’ எனக் குறிப்பிட்டுள்ளான். இவ்வசனத்தில் ‘பள்ளிவாயல்கள்’ என பொதுவாக இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இப்பொதுப்படையை கீழ் குறிப்பிடும் ஹுதைபா(ரலி) அறிவிக்கும் ஆதாரபூர்வமான ஹதீத் ‘மூன்று பள்ளிகளில்தான் இஃதிகாப் இருக்க முடியும்’ என குறிப்பாக்குகின்றது. அந்த ஆதாரபூர்வமான ஹதீஸ் பின்வருமாறு:
حَدثنَا سعيد بن مَنْصُور حَدثنَا سُفْيَان عَن جَامع بن أبي رَاشد عَن شَقِيق بن سَلمَة ……………..
قَالَ قَالَ حُذَيْفَة لِابْنِ مَسْعُود لقد علمت أَن رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ لَا اعْتِكَاف إِلَّا
فِي الْمَسَاجِد الثَّلَاثَة
(مشكل الآثار (201ஃ7) مصنف ابن أبي شيبة (316ஃ4) السنن الكبرى للبيهقي (316ஃ4) أخبار مكة للفاكهي (149ஃ2
எனவே இந்த ஹதீதின் மூலம் ‘பள்ளிகளில்’ எனும்போது அது அனைத்துப் பள்ளிகளையும் உள்ளடக்கமாட்டாது. மாற்றமாக ‘மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா’ ஆகிய மூன்று ஜும்ஆப் பள்ளிகளை மாத்திரமே உள்ளடக்கிக் கொள்ளும் எனத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
மேற்கூறப்பட்ட ஹதீதை மையமாக வைத்து இஃதிகாப் எனும் வணக்கம் மூன்றே முன்று பள்ளிகளில் மாத்திரம் தான் செல்லுபடியாகும் என்பதை அழகாகப் புரிந்துகொள்ள முடியும். இந்த இறை கட்டளைகளில் ஏதாவது ஒன்றை விட்டுவிட்டால் வேதத்தில் சிலதை ஏற்று சிலதை நிராகரித்த பாவிகளாக ஆகவேண்டிவரும். எனவே நுனிப்புல் மேய்தல் போன்று, அரை குறையாக கிதாபுகளை வாசிப்பவர்கள்தான் ஒன்றை விட்டு ஒன்றை எடுப்பார்கள். முழுமையாக கிதாபுகளை வாசிப்பவர்கள் அனைத்தையும்தான் எடுப்பார்கள். ஆகவே, குர்ஆன் ஹதீஸை அரைகுறையாக விளங்கியவர்கள், அரபு மொழி தெரியாதவர்கள் யார் என்பதை மக்களே உங்கள்; சிந்தனைக்கு விடுகின்றோம்.
மூன்று பள்ளிகளில் தான் இஃதிகாப் இருக்க வேண்டும் ஏனைய பள்ளிகளில் இருப்பது கூடாது என்று வந்துள்ள நபிமொழியின் நம்பகத் தன்மை(صحة) குறித்து சில மார்க்க அறிஞர்கள் எழுப்பும் சந்தேகங்களும் அவற்றுக்கான தெளிவுகளும்.
சந்தேகம் 1. குறித்த ஹதீஸை அறிவிப்புச் செய்யும் ஹுதைபா(ரலி) அவர்களிடமிருந்து ‘ஷகீக் பின் ஸலமா’ இப்றாஹீம் பின் யஸீத் ஆகிய இரு நபர்களும் அறிவிப்புச் செய்கின்றனர். இதனை ‘ஷகீக்’ என்பவர் நபிவழிச் செய்தியாக(مرفوع) அறிவிக்க ‘இப்றாஹீம்’ என்பவரோ ஸஹாபியின் கூற்றாக(موقوف) அறிவிக்கின்றார். எனவே இது நபிகளாரின் கூற்றா? அல்லது நபித் தோழர் ஹுதைபாவின் கருத்தா? இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது?
தெளிவு: இச்சந்தேகத்தின் யதார்த்த வடிவத்தை சரிவரப் புரிந்து கொண்டால் சாதாரண ஹதீஸ் கலை ஞானமுள்ள எவரும் இதனை ஒரு வாதமாக எந்த மிம்பரிலும் முன்வைக்கமாட்டார்கள். ஹுதைபா விடமிருந்து அறிவிக்கும் இருவருமே நம்பகமானவர்களாக இருந்தால்தான் இக்கேள்வியை முன் வைப்பது நியாயமாகும். நபிவழிச் செய்தியாக அறிவிக்கும் ‘ஷகீக்’ என்பவரைப் பற்றி யஹ்யா பின் மயீன், வகீஃ, இப்னு ஸஃத் மற்றும் பல ஹதீஸ் கலை மேதைகள் நம்பகமானவர் எனக் குறிப்பிடுகின்றனர். எனினும் நபித் தோழர் ஹுதைபாவின் கருத்தாக அறிவிக்கும் இப்றாஹீம் என்பவரை எந்தவொரு அறிஞருமே நம்பகமானவர் எனக் குறிப்பிடவில்லை. அத்தோடு அவர் நபித்தோழர்கள் எவரையும் சந்தித்து எந்தவொரு ஹதீதையும் கேட்கவில்லை என இமாம் அலி இப்னுல் மதீனி, அபூ ஹாத்தம் அர் ராஸி போன்ற ஹதீஸ் கலையில் விசேட நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். (التهذيب (1:178)இ جامع التحصيل في أحك ام المراسيل (141)
எனவே இப்றாஹீம் என்பவர் ஹுதைபா(ரலி)யை எப்படிச் சந்தித்திருக்க முடியும்? ஆகமொத்தத்தில் இப்றாஹீமுடைய தகவல் தொடர்பறுந்த(منقطع) தகவலாகும். இதன் மூலம் மூன்று பள்ளிகளில் தான் இஃதிகாப் இருக்க முடியும் எனும் ஹதீஸை நபிகளாரின் கூற்று என அறிவிக்கும் ‘ஷகீக் பின் ஸலமா’வின் அறிவிப்பே ஏற்றுக் கொள்ளப்பட்டதும் ஆதாரபூர்வமானதுமான அறிவிப்புமாகும்.
சந்தேகம் 2. ஹுதைபாவின் அறிவிப்பில் வருகின்ற ‘ஸுப்யான் பின் உயைனா’ தொடர்பான சர்ச்சைக்கு என்ன தீர்வு?
தெளிவு: ஸுப்யான் என்பவரிடமிருந்து ஏழு அறிவிப்பாளர்கள் இந்த ஹதீஸை அறிவிப்புச் செய்கின்றனர். அதன் அட்டவணை பின்வருமாறு:
ஹுதைபா பின் யமான்
ஷகீக் பின் ஸலமா
ஜாமிஃ பின் அபீ ராஸித்
ஸுபியான் பின் உயைனா
இந்த ஏழு அறிவிப்பாளர்களில் ‘அப்துர் ரஸ்ஸாக்’ என்பவரைத் தவிர மற்ற ஆறு அறிவிப்பாளர்களும் நபிகளாரின் கூற்று என அறிவிக்கின்றனர். ஆனால் அப்துர் ரஸ்ஸாக் என்பவர் மாத்திரம் ‘நபித் தோழர் ஹுதைபாவின் கருத்து’ (موقوف) என அறிவிக்கின்றார். ஆக ஆறு நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு ஒரு நம்பகமான அறிவிப்பாளர் முரண்படுவதால் ஹதீஸ் கலை விதியின் படி அப்துர் ரஸ்ஸாகின் அறிவிப்பானது (شاذ )’ஷாத்’ எனும் பலஹீனமான வகையைச் சார்ந்ததாகும்.
நபிகளாரோடு தொடர்புபட்ட ஆறு அறிவிப்புக்களும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகவும்(محفوظ) கருதப்படும். ‘ஸுப்யானிடமிருந்து அறிவிக்கும் இந்த ஏழு அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களே! எம்மீது மிம்பர் மேடைகளிலும் பொதுச் சபைகளிலும் அபாண்டமான விமர்சனங்களை அள்ளி வீசும் வெளிநாட்டு பல்களைக்கழக பட்டதாரிகள் இது பற்றிய முழு விபரத்தை அறிந்து கொள்ள பின்வரும் ‘ஜரஹ் வத்தஃதீல்’ கிதாபுகளை பார்வையிடவும்.
(4ஃ89). (6ஃ310). (10ஃ61) التهذيب (2ஃ290-291) (11ஃ51) ‘الجرح والتعديل’ (9ஃ518 520)’التهذيب’
(3ஃ304-305) ‘تحرير تقريب التهذيب’ (4ஃ55) ‘تهذيب التهذيب’ (8ஃ290- 291) ‘الجرح والتعديل لابن أبي حاتم’
சந்தேகம் 3. ‘மூன்று பள்ளிகளில் தவிர வேறு பள்ளிகளில் இஃதிகாப் இல்லை’ எனும் ஹதீஸை வைத்து வேறு பள்ளிகளில் இஃதிகாப் இருக்க முடியாது என விளங்க முற்படுவது அரபு மொழி தெரியாதோரின் விளக்கமாகுமா?
தெளிவு: மதிப்பிற்குரிய மௌலவி அவர்கள் சொன்னதைப் போன்று இந்த ஹதீதை வைத்து ‘ஜும்ஆப் பள்ளிகளில் இஃதிகாப் இருக்க முடியாது’ என விளக்கம் சொல்வது அறிவீனம் என்றால், இதே அமைப்பில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களின் வாசகங்களுக்கும் இப்படியே விளக்கம் சொல்ல இவர் தயாரா? அப்படி மௌலவி அவர்கள் விளக்க முற்பட்டால் ‘வுழு இல்லாமல் தொழலாம்’ என பத்வாக் கொடுக்க நேரிடும். ஏனெனில் ஹதீதிலே ‘வுழு இல்லாதவனுக்குத் தொழுகை இல்லை’ என வந்துள்ளது. இது சரியான மொழிபெயர்ப்பா? அல்லது தொழுபவனுக்கு வுழு அவசியமில்லை என்பது சரியான மொழிபெயர்ப்பா? இவ்வாறானதொரு பட்டியலையே இவர்களுக்கு எம்மால் எடுத்துக்காட்ட முடியும். எனவே ஹதீத்களை சரிவர விளங்குவதற்கு உங்களது நூலத்திலுள்ள (أصول الفقه) கிதாபுகளையாவது முழுமையாக வாசிக்குமாறு மௌளவி அவர்களிடம் வினயமாக வேண்டுகின்றோம்.
மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய மார்க்க அறிஞர்களே!
மஸ்ஜிதுல் அக்ஸா, மஸ்ஜிதுந் நபவி, மஸ்ஜிதுல் ஹறாம் ஆகிய மூன்று பள்ளிகளில் மாத்திரமே இஃதிகாப் செல்லுபடியாகும் என்று நாம் கூறி வருகின்றோம். இது எமது மனோ இச்சை அடிப்படையில் கூறவில்லை. அல்லாஹ்வுக்கு அஞ்சி மக்களுக்குத் தெளிவான சத்தியம் கிடைக்கப்பெற வேண்டுமென்ற நன்னோக்கிலேயே ஆய்வுகளை மேற்கொண்டு கூறி வருகின்றோம்;. ‘மூன்று பள்ளிகளில் தவிர வேறு பள்ளிகளில் இஃதிகாப் இல்லை’ என்பது எங்களது சொந்தக் கூற்றல்ல.
இக்கூற்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் கூற்றாகும். எங்களது அளவுகோல் பெரியார்களோ, ஊர் வழக்காறுகளோ ஸஊதி மற்றும் சர்வதேச உலமாக்களோ அல்ல. நாம் பின்பற்றும் ஒரே தலைவர் அல்லாஹ்வின் தூதர் மாத்திரமே! சத்தியத்தில் சிறிதும் மனிதக் கருத்துக்கள் கலந்து விடக்கூடாது என்பதில் அதிக கவனமெடுப்பவர்கள் நாங்கள்.
இஃதிகாப் தொடர்பான மார்க்க விடயத்தில் தங்களது நிலைப்பாடு தெளிவானதும், நேர்மையானது மென்றால் மக்களை அழைத்து பகிரங்கமாக பிரச்சாரம் செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான். அதை விடுத்து மார்க்க அறிஞர்களுக்கு கொஞ்சம் கூட தகுதியில்லாத அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எங்களை விமர்சித்து தங்களை தாங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.
மக்கள் விழிப்படைந்துவிட்ட காலம் இது. எல்லாக் காலமும் மக்களை மந்தைகளாக மேய்க்க முடியாது. சத்தியத்திற்காக இன்று பெரும் மக்கள் கூட்டமே அணிதிரண்டு நிற்கின்றது. மக்களிடம் ஒன்றைச் சொல்லி ஒன்றை மறைக்க வேண்டாம்! சத்தியம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது.
நாங்கள் அல்லாஹ்விற்கு அஞ்சி மேற்கொண்ட இவ் ஆய்வில் தங்களுக்கு நிறைகள் இருந்தால் உங்களது கௌரவங்களையும், குரோதங்களையும் தூக்கி வீசிவிட்டு சத்தியத்தை நோக்கி வாருங்கள். அல்லது தங்களுக்கு ஏதும் மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் மக்கள் மன்றத்தில் நேரடியாக எம்மோடு பேச முன்வாருங்கள். இஃதிகாப் எனும் புனிதமான அமலை குளிக்கச்சென்று சேறு பூசிய கதை போன்றாக்காதீர்கள். மீண்டும் சொல்கின்றோம். கருத்தை கருத்தால் மோத கற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிடில் முற்போக்கு சிந்தனை கொண்ட எம் சமூகத்திடம் தோற்றுப்போய் விடுவீர்கள்.
குறித்த மௌலவி அவர்களிடம் நாம் பணிவாக கேட்க விரும்புவது என்னவென்றால், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் செல்லாதவர்கலெல்லாம் அரைகுறைகள், சிறார்களென்று தாங்கள் சொல்ல வந்தால், நமக்கெல்லாம் மார்க்கத்தை கொண்டுவந்து சேர்த்த நபித்தோழர்கள், கண்ணியமிக்க இமாம்கள், ஏன் நீங்கள் வெளிநாடு செல்வதற்கு அடித்தளமிட்ட எமது மூத்த உலமாக்களையெல்லாம் அரைகுறைகள் என்றா சொல்ல வருகின்றீர்கள்?
மௌலவி அவர்களே! குர்ஆன், ஹதீதை விளங்குவதற்கு அறபு மொழி கட்டாயம் என்கிறீர்கள். அப்படியென்றால் தென்னிந்திய மார்க்க அறிஞர் கோவை அய்யூப், யூசுப் இஸ்லாம் போன்றவர்களெல்லாம் எப்படி குர்ஆனை விளங்கினார்கள். இன்று அவர்கள்தான் சர்வதேச பிரச்சாரகர்கள். ஆனால் உங்கள் பார்வையில் அவர்களெல்லாம் அறைகுறைகள். ஒரு பிரச்சாரகரை அரைகுறை என்று நீங்கள் விமர்சித்தால் உங்களை மக்கள் அரைகுறை என நினைத்து விடுவார்களல்லவா?
எம்மை திட்டமிட்டு விமர்சிக்கும் நீங்கள் ஒரு விடயத்தை மறந்து விட்டீர்கள் என நினைக்கின்றோம். எங்களைக் குழப்பவாதிகள் என தற்போது முத்திரை குத்தும் நீங்கள் ஒரு காலத்தில் அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் துணிகரமாக முன்வைத்த போது உங்களுக்கும் இப்பெயர்தானே வந்தது.! இப்போது மட்டும் நீங்கள் ஒற்றுமையும் சமூக ஐக்கியமும் பற்றிப்பேசும் ஒற்றுமைவாதிகளாக மாறிப்போனது எதனடிப்படையில்?
எமதூரில் மக்கள் அனைவரும் தொன்றுதொட்டு செய்துவந்த ஸுப்ஹுத் தொழுகையில் குனூத், கூட்டு துஆக்கள், தறாவீஹ் 23 ரகஅதுக்கள், மரணித்தவர்களுக்காக தல்கீன் போன்றவற்றை மார்க்கத்தில் இல்லாத பித்அத்கள் என்பது உட்பட இன்னும் பல புதிய கருத்துக்களை முதன் முதலில் முன்வைத்தவர்கள் நீங்கள். (நாங்களும் இவ்விடயத்தில் உங்கள் நிலைப்பாடுதான்). அப்போது அல்குர்ஆன் அஸ்ஸுன்னா பற்றிப் பேசிய நீங்கள் ஏன் இப்போது மட்டும் ஊர் ஒற்றுமைக்காக சத்தியத்தை மறைக்கின்றீர்கள்! நீங்கள் எம்மைப்பற்றி மிம்பர்களில் வீணாக விமர்சிப்பதை விடுத்து எமக்குள் ஏற்படும் கருத்து முரண்பாடுகளை மக்கள் முன்னிலையில் பகிரங்கமாகப் பேசி மக்களுக்கு தீர்வைக் கொடுக்க முன்வாருங்கள். அப்போது யார் அரைகுறைகள், யார் அரபு மொழி தெரியாதவர்கள், மார்க்க விடயங்களை கருத்து முரண்பாடான விடயங்களாக சித்தரிப்பவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள்.
இவ்வூரின் நடுநிலையாளர்களே, பொதுமக்களே!
உங்களுக்கு ஒரு தார்மீகக் கடமையும் பொறுப்பும் உள்ளது. இஃதிகாப் எங்கே இருப்பது என்பதில் எமக்கும் எமதூரிலுள்ள சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்த மார்க்க அறிஞர்களுக்குமிடையே கருத்து முரண்பாடு தோன்றி உள்ளது. இம்முரண்பாட்டை நீக்குவதற்கு ஒரேவழி பகிரங்க விவாதமொன்றே. எமது கருத்தோடு அவர்களுக்கு உடன்பாடில்லை என்றால் மக்கள் ஒன்றுகூடும் ஒரு சபையில் எம்மோடு அவர்கள் விவாதிக்கட்டும். பகிரங்க விவாதத்திற்கு இம்மார்க்க அறிஞர்கள் வர மறுத்தால் மக்களாகிய நீங்கள் இவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இதுபோன்ற மார்க்கப் பிரச்சனைகளுக்கு பகிரங்க விவாதம் ஒன்றே சரியான தீர்வாகும்.
அவ்விவாதத்தில் அவசியம் பொதுமக்கள் பார்வையாளர்களாக இருக்கவேண்டும். மிம்பர்களில் கூக்குரலிடுவதைவிட இது அழகானதும், அறிவுபூர்வமானதுமில்லையா? மக்களே நீங்களே நடுநிலையாக இருந்து சிந்தித்துப்பாருங்கள். மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சி அவனது மார்க்கமே இப்பூமியை வியாபித்திருக்கவேண்டுமெனும் எதிர்பார்ப்புடன் இதுபோன்ற பல சவால்களுக்கு மத்தியில் எமது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றோம் என்பதனை உங்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவருகின்றோம். எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்.
குறிப்பு : இன்ஷா அல்லாஹ் இன்றிரவு இரவுத் தொழுகையைத் தொடர்ந்து மௌலவி அலியார் (ரியாழி) அவர்களது ஜும்ஆ உரைக்கான மறுப்புரை எமது தலைமைக் காரியாலயத்தில் நடைபெறும்.
இவ்வண்ணம்
தாருல் அதர் அத்தஅவிய்யா
(மத்ஹபுகள் சாராத அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையிலான பிரச்சார அமைப்பு)
த.பெ. இல 19, கப்பல் ஆலிம் வீதி, புதிய காத்ததான்குடி 02.
19.09.2008
‘எமது கடமை தெளிவாகச் சொல்வதேயன்றி வேறில்லை’ (அல்குர்ஆன் 36:17)

Comments are closed.