சீதன ஒழிப்பு மாநாடு ஏற்படுத்திய சிந்தனைப் புரட்சிகள்:

1) சீதன ஒழிப்பு மாநாடு நிகழ்த்தப்படுவதற்காக ஏற்பாடுகளையும் ஒழுங்கமைப்பையும் மேற்கொண்டவர்கள் முழுக்க முழுக்க இளைஞர் அணி என்பது இங்கு முதன்மையாக அடையாளப்படுத்தப்பட வேண்டிய அம்சமாகும். சீதனத்தை வளர்ப்பதில் கூடுதல் பங்காளர்கள் இளைஞர்களே. இதனை யாரும் மறுக்க முடியாது.
எனவே சீதனத்தை ஒழிக்க ஒரு இளைஞர் கூட்டமே முன்னின்று ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்து நிகழ்த்தியதானது முஸ்லிம் சமூகத்தில் பாரிய ஒரு மாற்றத்தை இம்மாநாடு ஏற்படுத்தியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகின்றது.
2) சீதனத்தை வாங்கிய பல சகோதரர்களினுல் சில சகோதரர்கள் திருப்பி ஒப்படைத்துள்ளனர்.குறிப்பாக அறியாமையால் சீதனத்தை வாங்கிய எமது கொள்கை சகோதரர்களும் மாநாடு நடைபெற்று முடிந்த மறுநாள் தங்களது தவறை உணர்ந்து திருந்திக்கொண்ட காட்சியைக் காணக்கூடிதாக இருந்தது.
3) சீதன ஒழிப்பு மாநாட்டிற்காக செலவீனங்களை ‘நாங்களே தருகின்றோம்’ என வசதி படைத்தவர்கள் முன்வந்தமை இம்மாநாடு அனைவரின் உள்ளங்களையும் உலுக்கியுள்ளது என்பதை ஊகிக்க முடிகின்றது.
4) இம்மாநாட்டிற்காக வருகை தந்திருந்த இந்து சகோதரர்கள் ‘தங்களுடைய சமூகத்தவர்களுக்கும் சீதம் பற்றி அறிவுரை கூற வேண்டுமென தாருல் அதரை வேண்டிக்கொண்டமை.
5) மாநாட்டில் கலந்து கொண்ட கனிசமான இளைஞர்கள் மேடை ஏறி ‘நாங்கள் வாழ்க்கையில் ஒருக்காலமும் வரதட்சனை வாங்கமாட்டோம்’ என வாக்களித்தமை.
6) ஊர்முக்கியஸ்தர்கள் நலன் விரும்பிகள் தொடர்ச்சியாக இம்மாநாட்டை நடாத்த வேண்டுமென எம்மை ஊக்கப்படுத்தியமை.
போன்ற இன்னும் அதிகமான மாற்றங்களை இம்மாநாடு ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
ஒரு எழுச்சி மாநாட்டினால் மட்டுமே இக்கொடுமையை ஒளித்துவிடலாமென நினைப்பது குறுகிய பார்வையாகும். இக்கொடுமையை ஒழிக்கும் விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் அனைத்து சக்திகளும் ஒன்றினைய வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம். சீதன ஒழிப்பில் யாருக்கும் பொருப்பில்லை எனக்கூற முடியாது. காத்திரமான ஒரு சமூகத்தை சமைக்க வேண்டுமாயின் அவசியம் அறிவுறுத்தல்கள் ஆக்கபூர்வமாகவும் ஆணித்தரமாகவும் அமையப் பெறுதல் வேண்டும். இல்லாவிட்டால் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் முன்னுதாரண சமூகமாக முஸ்லிம் சமூகம் திகழ வேண்டிய துர்ப்பாக்கிய சூழல் ஏற்படுமென்பதில் சிறிதும் ஐயமில்லை.
தாருல் அதரைப் பொறுத்தவரை சமூக விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் முதன்மையாக சீதன ஒழிப்பை பிரச்சாரம் செய்து வருகின்றோம். தனிப்பட்டவர்கள் மத்தியிலும், அமைப்புக்களிடத்திலும் சீதனக் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டியதின் அவசியத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.
சமூகத்தில் புரையோடிப்போயுள்ள இவ்வாரான அனாச்சாரங்களை எம்மால் மாத்திரம் ஒழித்து விட முடியுமென்று நாம் கூறவில்லை. சமூக அக்கறையுள்ள ஒவ்வோர் தனிமனிதர்களும், அமைப்புக்களும் இந்த விடயத்தில் செயலாற்ற முன்வரவேண்டும்.. அவ்வாறான முயற்சிகளை தூய எண்ணத்தோடு யார் செய்தாலும் அவர்களோடு இணைந்து செயற்படுவதில் நாம் ஒருபோதும் பின்நிற்க போவதில்லை..
அல்லாஹ் போதுமானவன்.

Comments are closed.