இறைவனை அஞ்சியே நாம் விமர்சிக்கின்றோம்!!
தாருல் அதர் ஆய்வுக்குழு
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர நெஞ்சங்களே!
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்.
அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னைவும் அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்து வரும் நாம் மிக அண்மைக்காலமாக ‘இஹ்வானுல் முஸ்லிமீன்’எனும் இயக்கத்தை மிக அதிகமாக விமர்சனம் செய்துவருகின்றோம். நாம் அவ்வியக்கத்தை விமர்சனம் செய்வதால் சில சகோதரர்கள் எம்மீது கடுமையாக ஆத்திரப்பட்டு அவதூறுகளைப் பரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். அதாவது எமக்கும் யூத, கிறிஸ்தவர்களுக்கும் சினேகபூர்வமான தொடர்பிருப்பதாகவும் இஸ்ரவேலிலிருந்து இஹ்வானுல் முஸ்லிமீனை விமர்சிப்பதற்கு சம்பளம் கிடைப்பதாகவும் அநாமோதயத் துண்டுப் பிரசுரங்கள் வாயிலாக நாடளாவிய ரீதியில் பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர் (பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் என்றென்றும் உண்டாவதாக!).
நமது நாட்டில் ஏகத்துவத்தைப் போதிக்கும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்களில் கனிசமான அமைப்புக்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பணரீதியான உதவிகளைப் பெரும் அமைப்புக்கள் என்பதை அவதானிகள் நன்கறிவர். அவ்வாரான அமைப்புக்களில் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பு எந்த வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்தும் ஐந்து சதமும் வாங்குவதில்லை என்பதையும் பொதுமக்கள் நன்கறிவர். எமது அமைப்பின் அங்கத்தினர்களிடத்தில் வசூலித்தே இஸ்லாமியப்பணியை சர்வதேசமெங்கும் முன்னெடுத்து வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ். அரபு நாடுகளிலிருந்தே பணம் பெறாத நாங்கள் எங்கணம் யூத கிறிஸ்தவர்களிடமிருந்து பணம் பெருவோம்? விமர்சிப்பவர்களுக்கும் இவ்விடயம் நன்றாகத் தெரியும். அவர்களின் மனச்சாட்சியே இதற்கு நல்ல சான்று.
இருந்தபோதிலும் தெரிந்து கொண்டே அவர்கள் இப்படியான பொய்யான கட்டுக்கதைகளை மக்களிடம் பரப்பித்திரிவதற்கு அடிப்படைக் காரணம் அவர்களின் முப்திகளை(?) நாம் விமர்சித்ததும் அவர்களின் இயக்கத்தை வழிகேடு என்று பிரச்சாரம் செய்வதுமே!
நாம் ஏன் ஒரு இயக்கத்தை விமர்சிக்கின்றோம் எனும் அடிப்டை அவர்களுக்குப் புரியாததே இவ்வாறு அவர்கள் நிலைகுலைவதற்கு மூல காரணம். இஹ்வானுல் முஸ்லிமீன் (நமது நாட்டில் DA என்ற பெயரில்இயங்கும்) இயக்கத்திற்கும் நமக்கும் என்ன விரோதம்? மக்களிடம் தெளிவான இம்மார்க்கம் கலப்படமில்லாமல் அன்று ஒப்படைக்கப்பட்ட அதே முறையிலேயே சென்றடைய வேண்டுமென்றே நாம் பல்வேறு சோதனைகளை எதிர்நோக்கியும் சளைக்காமல் விமர்சனங்களைக் கண்டு ஓடி ஒளியாமல் நெஞ்சுருதியோடு களத்தில் நின்று பிரச்சாரம் செய்கின்றோம். சத்தியத்தை அதன் தூயவடிவில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற அவாவினாலேயே கொள்கை என்று வந்தால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் உண்மைகளை அப்படியே ஒப்பிவித்து வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.
இஹ்வான்களை விமர்சிக்கும் போது ஆதாரபூர்வமானவைகளை மாத்திரமே கருத்தில் கொள்கின்றோம். இஹ்வான்களை விமர்சித்து எழுதிய அறிஞர்களின் நூற்களை நாம் ஆதாரமாகக் கொள்ளாமல் இஹ்வான்களின் நூற்களை ஒரு முறை நுணுக்கமாக மீளாய்வு செய்து விட்டே அவர்களின் பிழையான கொள்கைகளை மக்களுக்கு அடையாளப்படுத்தி வருகின்றோம். இயக்கப் பற்றுள்ள அதிகமான சகோதரர்கள் இக்கருத்துக்களை உண்மையிலேயே இஹ்வானுல் முஸ்லிமீன்களின் தலைவர்கள் கூறியிருந்தால் அவ்வியக்கம் வழிகேடானது என்று கூறி அவ்வியக்கத்தை விட்டு வெளியேறிய வண்னமுள்ளனர்.
அதேவேளை இயக்க வெறியுள்ள சிலர்கள் அப்படியெல்லாம் செய்யிதுல் குதுபோ, ஹஸனுல் பன்னாவோ, மெளலான மெளதூதியோ சொல்லியிருப்பார்களா??? சாத்தியமேயில்லை என்று கருதி நம்மீது அவதூறுகளைப் பரப்பித்திரிகின்றனர். இன்னும் சிலரோ ‘தாருல் அதர் உலமாக்களுக்கு அல்லாஹ் மீது சிறிதும் அச்சமில்லை’என பூரூடா ஒன்றை விட்டுத்திரிகின்றனர்.
அல்லாஹ் மீது ஆணையிட்டுச் சொல்கின்றோம். அல்லாஹ்வின் சத்தியம் தூய்மையாகவே உலக மக்களுக்குக் கிடைக்கவேண்டுமென்பதில் நாங்கள் தெளிவாகவே இருக்கின்றோம். அல்லாஹ்வுக்கு அஞ்சியே இஹ்வான்களின் கொள்கை மோசடிகளை இணையத்தின் ஊடாகவும் வாய்வழிப்பிரச்சாரத்தின் ஊடாகவும் அம்பலப்படுத்தி வருகின்றோம். இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடர்வோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தை சத்தியமாகவும் அசத்தியத்தை அசத்தியமாகவும் காட்டி கொள்கைத்தெளிவோடு மரணிக்கும் நல்லடியார்களாக நம்மனைவர்களையும் ஆக்கியருள்வானாக!

Comments are closed.