அவதானம்: போலி முஸ்லிம் பூஸாரிகள் ஏமாற்ற வருகின்றார்கள்!!.
முஹம்மது முப்தி (பேராதனைப் பல்கலைக்களக சிரேஷ்ட மாணவன்)
அன்பின் சகோதர, சகோதரிகளே!
நம்மிடமிருக்கும் குறைவான மார்க்க அறிவைப் பயன்படுத்தி பல போலிகள் நமது சமூகத்தில் வலம் வருகின்றனர். நமக்கு ஏற்படும் மனோவியல் ரீதியான நோய்களைக் குணப்படுத்துகின்றோம் எனும் பெயரில் தாயத்துக் கட்டுவது தண்ணீரில் ஓதிப்பார்ப்பது, நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பது, குறி கேட்பது, சகுணம் பார்ப்பது, இஸ்ம் கட்டுவது,ஜோதிடவியல் கற்பது போன்ற கொடுமைகளை இன்று நாம் கண்கூடாகக் காணுகின்றோம்.
இஸ்லாமிய அடிப்படை அறிவில்லாத பெண்களும், ஆண்களுமே இவ்விடயங்களில் அதிகம் மூழ்குவதைக் காணமுடிகின்றது. சுத்தமாக ஏமாற்றி அப்பாவிமக்களின் பணங்களைச் சூரையாடும் கொடியமனம் கொண்ட மனிதர்கள் எம்மில் இல்லாமலில்லை. அதிக மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு, மயக்க நிலைக்கு ஆளாகும் ஒரு நோயாளியையே ‘ஹிஸ்டீரியா நோயாளி’ என வைத்திய உலகு அழைக்கின்றது. வைத்தியத்துறையில் பல முன்னேற்றங்களை மனிதன் அடைந்தபோதும் மூடநம்பிக்கைகளைக் கைவிட்ட மாதிரித்தென்படவில்லை.
மத நம்பிக்கை அடிப்படையிலேயே அதிகமான மக்கள் அப்பாவித்தனமாக ஏமாந்து விடுகின்றனர். உலகத்தில் நடைபெறும் பெரிய கொள்ளைகளில் மிகப்பெரும் கொள்ளை ‘பேய் பிசாசு, ஜின் பிடித்தல்’ போன்ற போலிப்பெயர்களைச் சூட்டி மக்களிடம் பணம் புடுங்கும் கொள்ளையாகும். இக்கொள்ளையர்கள் சட்டத்தின் முன் அவசியம் நிறுத்தப்படல் வேண்டும்.
மாற்றுமதத்தவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட ஏமாற்று மோசடிகளை சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் இன்னமும் ‘இஸ்லாமிய வைத்தியம்’ எனும் பெயரில் அரங்கேற்றி அப்பாவி மக்களின் இயல்புவாழ்வைச் சூரையாடிவருகின்றனர். இஸ்லாத்தில் இவர்கள் வாழ்வதாகக் கூறிக்கொண்டாலும் இவர்கள் சுத்தமான ஏமாற்றுப்பேர்வழிகள் என்பதில் எள்முனையளவும் சந்தேகம் இல்லை. எதிர்கால நலவு, தீமைகளைத் துல்லியமாகக் கூறுவோம் எனக்கூறியே மேற்படி இஸ்லாமியப் பூஸாரிகள் அப்பாவி மக்களை ஏமாற்றிவருகின்றனர்.
மார்க்க அறிவு அறவே இல்லாத இப்பேர்வழிகள் யார் என சமூகத்தில் அடையாளம் காணப்பட்டு அவசியம் தண்டனைகளுக்கு அவர்களை உட்படுத்த முஸ்லிம் அதிகாரிகள் முன்வரவேண்டும்.அறிவியல் துறையும், ஆராய்ச்சித்துறையும் கொடிகட்டிப்பறக்கும் இன்றைய உலகில் இன்னும் நமது நாடு முன்னேறாமைக்கு மூடக்கொள்கைகள் நமது நாட்டில்அதிகம் காணப்படுவதும் ஒருமுக்கிய காரணமாகும்.
ஒரு சமுதாயம் தலைநிமிர்ந்து யாராலும் எவ்விதத்திலும் ஏமாற்றப்படாமல் வாழ்வதற்கு மூடநம்பிக்கைகளுக்கு சாவுமணியை அச்சமூகம் அடித்திருக்க வேண்டும். இது நிறூபிக்கப்பட்ட ஓர் அடிப்படை. ஆனால் எமது முஸ்லிம்களோ இன்னமும் மெளட்டீகங்களுக்கு மெருகூட்டுவதிலும் அவற்றை தொடர்ந்தும் வாழவைப்பதிலுமே கவனம் செலுத்திவருகின்றனர்.பேய் பிசாசு என்று மக்கள் அங்கலாய்ப்பதை திட்டமிட்டுப் பயன்படுத்திய ஒரு கும்பலே ‘இஸ்ம், அஸ்மாக்களை, தாயத்து தகடு தட்டுக்களை கட்டுகின்றோம்’எனும் பெயரில் ஏழைகளின் பணங்களை ஏப்பமிடுட்டு வருகின்றனர்.
மக்களே! இது நீங்கள் விழிக்கும் நேரம். ஏமாறுபவன் இருக்கும் காலமெல்லாம் ஏமாற்றுபவனும் இருக்கவே செய்வான்.அழகான, அறிவுபூர்வமான இம்மார்க்கத்தில் வாழ்ந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் இக்கொடிய குற்றங்களை நாம் புரிவது அல்லாஹ்வுக்குச் செய்யும் துரோகமில்லையா? சிந்தியுங்கள்!
அல்லாஹ் எமக்குப் பகுத்தறியும் அறிவை வழங்கி எம்மைச் சிறப்பித்திருக்கின்றான்.பிரயோஜனப்படவேண்டிய பொக்கிஷமான ‘பகுத்தறிவை’ மனிதன் கடாசிவிட்டு ஏமாற்றும் ஆலிம்களுக்குப் பின்னால் போய் அநியாயமாக ஏமாந்து ஈமானை இழந்து பெரும் நஷ்டவாளிகளாகக் மாறிக்கொண்டிருக்கும் அவலநிலையைக் கண்டு பெரிதும் மனம் வெதும்புகின்றோம்.
நேர்வழிகாட்ட அல்லாஹ்போதுமானவன்.

Comments are closed.