இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!
ஆக்கம்:ரிஸாதா றிபாய்
இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல.அது ஒரு மார்க்கம்.அது மனிதனாகப் பிறந்த ஒவ்வெருவரும் பின்பற்றுவதற்கு மிக எளிமையானதும் இனிமையானதுமான ஒரு மார்க்கம். இதனால் தான் இஸ்லாம் எளிய மார்க்கம் இனிய மார்க்கம் என்று பலராலும் போற்றப்படுகின்றது.
இது ஏனைய மதங்களை விட சிறப்புற்று விளங்கக் காரணம் இதில் காணப்படும் ஓரிரைக்கொள்கை வணக்கவழிபாடாகும். இறைவன் காலத்திற்குக் காலம் நபிமார்களை அனுப்பி இஸ்லாத்தை மக்களுக்குத் தெளிவாக்கினான். அந்த வகையில் இருதியாக வந்தவர் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள். இவர்கள் மூலமாகவே இஸ்லாத்தை இறைவன் முழுமையாக்கினான். அன்று எமது தூதருக்கு வழங்கப்பட்டதே அல்குர்ஆனாகும். இது அரபு மொழியிலேயே அருளப்பட்டது. இதனால் ஏனைய மொழிகளைப் பேசக்கூடியவர்கள் கவலைப்படாமல் இருக்கவும் அரபு பேசக்கூடியவர்கள் பெருமைப்படாமல் இருக்கவும் நபி(ஸல்)அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
‘எந்த ஒரு அரபிக்கும் அஜமியை விடச் சிறப்புக்கிடையாது.அல்லாஹ்வை அஞ்சுகின்றவர்களைத் தவிர’ (ஆதாரம்:ஸஹீஹுல் புஹாரி)
ஏனைய மதங்களை எடுத்துக்கொண்டால் பல பல உருவங்களை அவர்களே வடிவமைத்து அவைகளுக்குப் பெயர்களையும் சூட்டி அவைகளை கடவுள்களாக வணங்குகின்றனர். இதையெல்லாம் இஸ்லாம் முற்று முழுதாகக் கண்டிக்கின்றது. இறைகொள்கை விடயத்தில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். ‘நிச்சயமாக ஒரே ஒரு கடவுள்தான் இவ்வுலகை நிர்வகிக்க வேண்டும்.பல கடவுள்கள் நிர்வகித்தால் வேண்டாத குழப்பங்களும் அழிவுகளும் ஏற்பட ஆரம்பிக்கும்.
இந்தப் பிரபஞ்சம் சீராக இயங்கமாட்டாது. ஒரே ஒருவனால் மாத்திரமே எவ்விதக்கோணல்களுமின்றி மிகச்சரியாக துல்லியமாக இந்த உலகை நிர்வகிக்க முடியும்’ மேற்குறித்த திருமறைக்குர்ஆனின் கூற்று ஏகத்துவத்தை ஆணித்தரமாகப் போதிப்பதைக் காணலாம். இவ்வாறான நேர்த்தியான இறைகொள்கையைப் போதிக்கும் இஸ்லாம் மிக மிக எளிமையான சட்டங்களையே மனிதர்களுக்குப் பின்பற்றுமாறு பணிக்கின்றது. இஸ்லாம் பின்பற்றுவதற்கு மிகவும் எளிமையான ஓர் இறைகொள்கை என்பதை அதை ஆய்வுசெய்யும் ஒவ்வெருவரும் மிகத்தெளிவாகப் புரிந்து கொள்வர்.
அழகான இம்மார்க்கத்தில் தனிமனிதக்கருத்துக்களுக்கு முன்னுரிமை இல்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியவைகளே மார்க்கமாகும். ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்ற விரும்பினால் அவர் அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் மாத்திரமே பின்பற்ற வேண்டுமே ஒழிய தனிமனிதக்கருத்துக்களை அல்ல. அல்லாஹ்வின் வஹியை மாத்திரமே நாம் பின்பற்றி வாழவேண்டும். ஒரு மனிதன் பிறந்தது முதல் மரணிக்கும் வரையிலுள்ள காலப்பகுதியில் அவன் எவ்வாறு வாழவேண்டும் எவ்வாறு செயற்பட வேண்டும் எவ்வாறு நடந்தால் ஈருலகிலும் வெற்றிபெற முடியும் என்ற அனைத்து விடயங்களையும் அலசிஆராயும் ஒரு மார்க்கமே இஸ்லாம்.
மனிதவாழ்வின் எந்தக்கட்டமாக இருந்தாலும் அத்தனை கட்டங்களிலும் மிக உயர்ந்த வழிகாட்டுதல்களை இஸ்லாம் அழகாக முன்வைத்துள்ளது. குடும்பவாழ்வில் ஆணுக்குப் பங்குள்ளது போன்று பெண்களுக்கும் வாரிசுச்சொத்தில் பங்குண்டு என ஏனைய மதங்கள் பேசாத உரிமையையும் இஸ்லாம் கூறுகின்றது. ஆனால் இன்றைய எமது முஸ்லிம்களில் அதிகமானோர் இஸ்லாத்தைப் புறக்கணித்து விட்டு மேற்குக் கலாச்சாரங்களில் மூழ்கிப்போயுள்ளனர். இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் ஒரு சில முஸ்லிம்களும் இஸ்லாம் கூறாத சட்டங்களை தாங்களாகவே வகுத்துக்கொண்டு வழிகேட்டில் வாழும் சாபநிலையைக் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
ஒருகாலத்தில் மாற்றுமதத்தவர்களின் நல்லபிப்பிராயத்தைப் பெற்ற இஸ்லாம் இன்று நமது முஸ்லிம்களின் பிழையான இஸ்லாம் காட்டாத மெளட்டீகங்களால் ஏதோ மூடநம்பிக்கைகளை மொத்தமாகக் கொண்டிருக்கும் கொள்கை என மாற்றுமதத்தவர்களால் ஓரங்கட்டப்படுவதை நாம் அனைவரும் நன்கறிவோம். அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் இல்லாத ஒன்றை மக்களாகவே ஏற்படுத்தி அல்லாஹ் அனுமதிக்காத பித்அத்(நூதனச்செயல்)களைப் புரிந்து இஸ்லாத்தைக் கஷ்டமான ஒரு மார்க்கம் என்ற இழிநிலையை இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளார்கள்.
இதனைக் கண்டித்தே பின்வரும் அல்குர்ஆன் வசனம் இறக்கியருளப்பட்டது.
அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணைவைப்பாளர்கள் இருக்கின்றார்களா?(442:21)
மேலும் நபியவர்கள் கூறினார்கள்:
மார்க்கத்தில் புதிதானவற்றைச் செய்வதை விட்டும் நான் உங்களை எச்சரிக்கின்றேன்.ஏனெனில் மார்க்கத்தில் மிகக்கெட்டது அதில் புதிதானவற்றை ஏற்படுத்துவதாகும்.புதியவை அனைத்தும் வழிகேடே!வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்.
(ஆதாரம்:சுனனுத் திர்மிதி)
நமது சமூகத்தில் சில மனிதர்களைக் காணுகின்றோம். பணத்திற்காகவும் பட்டம் பதவிகளுக்காகவும் நாயாக அழைகின்றான். இனிமையான இந்த இஸ்லாத்தைப் பற்றி எள்முனையளவும் கவலைகிடையாது. மார்க்கத்தைப் பற்றி அவ்வாரான மனிதர்களிடம் பேசினால் போதும் அவர்கள் தங்களது முகங்களைத் திருப்பிக்கொள்வார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் எளிமையான இனிமையான கொள்கை முக்கியமல்ல. மாறாக புகழும் கெளரவங்களுமே முக்கியமாகும்.
நாளை மறுமையில் இவர்களின் நிலை என்ன? சற்று சிந்திக்க வேண்டும். இறைவன் இவ்வுலகைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றான்.
‘இவ்வுலகம் வெறும் வேடிக்கையும் விளையாட்டும் அலங்காரமுமாகும்.அதில் நீங்கள் மூழ்கி விட வேண்டாம்.இந்த உலகு நிரந்தரமானதல்ல. அழிந்துவிடக் கூடியதே! நிலையானது என்னிடம் உள்ளது. நீங்கள் இவ்வுலக வாழ்க்கையை விரும்ப வேண்டாம்!(அல்குர்ஆன்)
எனவே அழகான அறிவுபூர்வமான இம்மார்க்கத்தை அகிலம் அனைத்திற்கும் எடுத்துரைப்பது இன்றைய முஸ்லிம்களின் தலையாய கடமையாகும். அல்லாஹ்வால் இலகுவான முறையில் அருளப்பட்ட இம்மார்க்கத்தை சரிவரப்பின்பற்றி ஈருலகிலும் வெற்றிபெற அந்த அல்லாஹ் அருள்பாலிப்பானாக!!

Comments are closed.