Skip to content

ஆயுததாரிகளின் அடக்குமுறைக்கு நாளாந்தம் இரையாக்கப்படும் காத்தான்குடி முஸ்லிம்கள்

June 5, 2008


கிழ‌க்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் தனித்து வாழும் ஊர் காத்தான்குடி. கல்வியிலும் வர்த்தகத்துறையிலும் தன்னிகரற்று விளங்கும் இவ்வூர் தொடர்ச்சியாக பாசிசப்புலிகளின் தாக்குதல்களுக்கு உட்பட்டு வருவதை சர்வதேசமே நன்கறியும். அல்லாஹ்வை வணங்கும் வேளையில் பயங்கரவாதிகளால் மிகக் கொடூரமான முறையில் கொன்று குவிக்கப்பட்ட கரைபடிந்த வரலாறைக் கொண்ட ஊரும் இக்காத்தான்குடியே!

பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த போதும் இவ்வூர் மக்கள் செல்வத்தோடும் கல்வியோடும் நன்மதிப்போடும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வளர்ச்சியை சகித்துக் கொள்ளமுடியாத பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக இம்மக்களின் சொத்துக்களை அழித்தொழிப்பதிலும் அம்மக்களைக் கடத்திப் படுகொலை செய்வதிலும் கூடுதல் கவனத்தை செலுத்திவருகின்றனர். மிக அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை பயங்கரவாதிகள் ஆயுதமுனையில் அபகரித்தமை முஸ்லிம் வர்த்தக உரிமையாளர்களிடம் கப்பம் பெறுகின்றமை முஸ்லிம் ஆசிரியர்களை அச்சுருத்துகின்றமை முஸ்லிம்களின் தலைசிறந்த கல்விமான்களை சுட்டுக் கொல்கின்றமை போன்ற அட்டூளியங்கள் நாளுக்கு நாள் நடந்தேறுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

மாறிமாறி அர‌சுக‌ள் ஆட்சிக்கு வ‌ந்தாலும் அநியாய‌ங்க‌ள் ஒழிந்த‌பாடில்லை. சிங்க‌ள‌ப் பேரின‌வாதிக‌ளின் தலையீடு நிச்ச‌ய‌ம் இதில் இருக்குமென‌ அவ‌தானிக‌ள் க‌ருத்துத் தெரிவிக்கின்ற‌ன‌ர். ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் அட‌க்கு முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க‌ வேண்டிய‌து அர‌சாங்க‌த்தின் த‌லையாய‌ க‌ட‌மையாகும். பொருப்புவாய்ந்த‌ ஒரு அர‌சாங்க‌ம் ஒரு இனம் பாசிச‌வாதிக‌ளால் சூரையாட‌ப்ப‌டும் வேளையில் கைக‌ட்டி மெள‌னியாய் இருப்ப‌து ஜ‌ன‌நாய‌க‌ம் பேசும் அர‌சுக்கு அழ‌க‌ல்ல‌. அது ஜ‌ன‌நாய‌க‌த்தை குழிதோண்டிப் புதைத்த‌தாக‌வே க‌ருத‌ப்ப‌டும்.

காத்தான்குடி முஸ்லிம்க‌ளின் பிர‌ச்ச‌னை தொட‌ர்பாக‌ எம‌து அர‌சிய‌ல்வாதிக‌ள் அய‌ராத‌ உற‌க்க‌த்தில் இருப்ப‌து எம்மை ஆச்ச‌ரிய‌த்திற்கு உட்ப‌டுத்துகின்ற‌து. ம‌க்க‌ளின் வோட்டுக்க‌ளை அப‌க‌ரிப்ப‌தில் ம‌ட்டும் ‘ச‌மூக‌ம் ச‌மூகம்’ என‌க் கூக்குர‌லிடும் இவ்வ‌ர‌சிய‌ல்வாதிக‌ள் முஸ்லிம்க‌ளுக்குப் பிர‌ச்ச‌னை என்றால் ம‌ட்டும் ஓடி ஒழிந்து விடுவ‌து ஏன்?? ம‌ன‌ச்சாட்சியை சிங்க‌ள‌ப் போரின‌வாதிக‌ளுக்கு விற்றுவிட்டார்க‌ளோ என‌ ஐய‌ப்ப‌ட‌வேண்டியுள்ள‌து.

ப‌ல‌ நாட்க‌ளாக‌ காத்தான்குடியில் இரு இன‌ங்க‌ளுக்கு ம‌த்தியில் இன‌ப்பிர‌ச்ச‌னை கொழுந்துவிட்டு எரிகின்ற‌து. நாளுக்கு நாள் முஸ்லிம் ம‌க்க‌ள் க‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். ஆயுத‌தாரிக‌ள் அட்ட‌காச‌ம் சொல்ல‌ முடியாத அள‌வுக்கு த‌லைவிரித்தாடுகின்ற‌து. இத‌னை அதிக‌மான‌ ஊட‌க‌ங்க‌ள் ஏன் ச‌ர்வ‌தேச‌த்திற்கு ம‌றைக்க‌ வேண்டும்?

இவைய‌னைத்தும் பாரிய‌ திட்ட‌மிட‌லுக்குப் பின்ன‌ரே ந‌டைபெறுகின்ற‌ன‌ என‌ எண்ண‌த்தோன்றுகிற‌து. இவ்விட‌ய‌ம் குறித்து முஸ்லிம் த‌லைமைக‌ள் அவ‌சிய‌ம் அறிக்கைக‌ளை ச‌ர்வ‌தேச‌த்திற்கு ச‌ம‌ர்ப்பிக்க‌வேண்டும். இல‌ங்கைக்கு உத‌வும் ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளின் தூதுவ‌ரால‌ய‌ங்க‌ளுக்கு உட‌ன‌டியாக‌ இவ்விட‌ய‌த்தின் உண்மை முக‌ம் தோலுரித்துக் காட்ட‌ப்ப‌ட‌ல் வேண்டும்.

கிழ‌க்கில் இன்ன‌மும் சுமுக‌ நிலை தோன்ற‌வில்லை என்ப‌தை அர‌சுக்கு அகில‌ இல‌ங்கை ஜ‌ம்இய்ய‌துல் உல‌மா எடுத்துரைக்க‌வேண்டும். மெள‌லூத் ஓதுவ‌த‌ற்கும் க‌ந்தூரி கொடுப்ப‌த‌ற்கும் வ‌ரிந்து க‌ட்டும் உல‌மாக்க‌ள் இன்றைய‌ ச‌முதாய‌த்தின் அவ‌ல‌நிலையை நீக்க‌ அய‌ராது பாடுப‌ட‌ல் வேண்டும். முஸ்லிம்க‌ளும் இது விட‌ய‌த்தில் ச‌ர்வ‌தேச‌த்திற்கு இப்பிர‌ச்ச‌னையின் ய‌தார்த்த‌த்தைத் தெளிவுப‌டுத்துவ‌தில் முன்னின்று உழைக்க‌ வேண்டும். மீண்டுமொரு மாவ‌ன‌ல்லையாக‌வோ மூதூராக‌வோ மாறுவ‌த‌ற்கு முஸ்லிம்க‌ள் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளுக்கு அவ‌காச‌ம் அளிக்க‌க் கூடாது என‌ முஸ்லிம் ஆய்வாள‌ர்க‌ள் க‌ருத்துத் தெரிவிக்கின்ற‌ன‌ர்.

அன்புட‌ன்
ம‌த‌னீ

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers