அதிகார அராஜகமும் முஸ்லிம் அரசியலும்.
(கடந்த 22ம் தேதி காத்தான்குடி பிரதேசத்தில் நடந்து முடிந்த துயரமான சம்பவங்களின் பின்னணியில் இக்கட்டுரை சமர்ப்பிக்கப்படுகிறது.)
இலங்கை நாட்டைப் பொறுத்தவரை காலத்திற்கு காலம் அப்பாவி முஸ்லீம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதும் சில நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லி அவற்றை மூடிமறைத்துவிடுவதும் வாடிக்கையாக போய்விட்டது. அந்தவகையில் கடந்த மே மாதம் 22ம் தேதி காத்தான்குடியிலும் ஒரு ஈனச் செயல் நடந்தேறியுள்ளது. கிழக்கில் ஜனநாயகத்தை அமுல்படுத்திவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் அரசாங்கம் அந்த ஜனநாயகத்தை பாதுகாக்க தவறிவிட்டது.
இதுவரை இலங்கையின் எந்தவொரு மாகாணத்திற்கும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அந்த அதிகாரத்தை மறைமுகமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கியிருப்பதாகவே தோன்றுகின்றது.
ஆயுதக் குழு ஒன்றைத் தலைமையேற்று நடாத்திவந்த ஒருவருக்கு அந்த ஆயுதங்களை களையாமலேயே கிழக்கின் முதலமைச்சர் பதவியை கொடுத்திருப்பதன்மூலம் அரசாங்கம் மறைமுகமாக இந்த குற்றச் சாட்டை ஒப்புக் கொள்கின்றது. குறிப்பிட்ட முதமைச்சர் பதவியேற்று 2 வாரங்களுக்குள்ளாலேயே அவருடைய ஆயுதக்குழு மூலமாகவே அப்பாவி முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டும் பலர் கத்திக்குத்திற்கு இலக்காகியும் முஸ்லீம்களின் பொருளாதாரம் குறிவைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கின்றபோது எந்த ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போகிறார்கள் என்று புரியவில்லை.
நடந்து முடிந்த சம்பவங்களில் இரண்டு தரப்பு இழப்புக்களையும் நோக்கும்போது ஒரு தரப்பிலே உயிரிழந்தவர்கள் ஆயுதம் தாங்கிய போராளிகள் மற்றதரப்பினர் அப்பாவி பொதுமக்கள். மனித உயிரின் மதிப்பு மலிந்துபோய்விட்ட இந்த உலகில் மனிதாபிமான அடிப்படையில் சிந்திக்கும்போது உயிர்கள் என்பதில் போராளிகள் என்றோ பொதுமக்கள் என்றோ பாகுபடுத்த கூடாது. ஆனால், வெளிப்படையாக ஆயுதம் தாங்கியவர்களுக்கு அவர்களுக்கு சமமான பலத்தையோ அல்லது அவர்களைவிட பலமானவர்களிடமிருந்தோ எப்போதுமே அச்சுறுத்தல்கள் இருக்கும். அந்தவகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் தற்போதைய கிழக்கின் முதலமைச்சருமான திரு.பிள்ளையான் அவர்கள் தனது ஒவ்வொரு செவ்வியிலும் ”நாங்கள் அரசியல் நீரோட்டத்திற்கு வந்த பின்னரும் எங்களுக்கு நாங்கள் பிரிந்து வந்த விடுதலைப் புலிகள் அமைப்பினரால் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.எனவே நாங்கள் தற்போதைக்கு ஆயுதங்களை களைய முடியாது’ என்று தாங்கள் ஆயுதம் வைத்திருப்பதை நியாயப்படுத்தி பி.பி.சி உட்பட பல ஊடகங்களுக்கும் செவ்விகள் கொடுத்திருந்தார்.
அதுமட்டுமல்லாது ”இந்த அச்சுறுத்தல்கள் அகன்றுவிட்டால் நாங்கள் ஆயுதங்களை களைவதற்கு தயாரா’கவிருப்பதாகவும் சொல்லியிருந்தார். எனவே எப்படிப் பார்க்கின்ற போதும் எங்களுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்துதான் அச்சுறுத்தல் இருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இருந்தும் அசம்பாவிதம் என்று ஒன்று நடந்தவுடன் சற்றும் யோசிக்காமல் முஸ்லீம்கள் மீது பழி போடுவதும் அவர்களைக் குறிவைத்து பழி தீர்ப்பதும் எந்தவகையில் நியாயம்? நடந்துமுடிந்த திரு. சாந்தன் அவர்களின் படுகொலைக்கு எடுத்த எடுப்பிலேயே முஸ்லீம்கள் மீது பழிபோடுவதற்கு 2 காரணங்கள்தான் இருக்கின்றன.
1. முஸ்லீம்களை பழிவாங்குவதற்குரிய சந்தர்ப்பமாக இதை பயன்படுத்திக் கொள்வது.
2. உண்மையான குற்றவாளிகளாக விடுதலைப்புலிகள் இருந்தால், தங்களுக்கு அவமானம் ஏற்படும் என்பதனால் ஆட்சி அதிகாரங்கள் தங்கள் பக்கம் இருந்தும் நியாயமான முறையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சி செய்யாமல் அவசர அவசரமாக முஸ்லீம்கள் மீது பழியைப் போட்டு தங்கள் சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள முற்படுவது.
இந்த இரண்டு அடிப்படைகளை வைத்துத்தான் அப்பாவி முஸ்லீம்கள் மீது கொலை வெறியாட்டம் நடந்தேறியிருக்கின்றது. இலங்கை முஸ்லீம்களைப் பொறுத்தவரை ஜனநாயகத்தின்மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள். அதனால்தான் எவ்வளவு துயரங்கள் அவர்களைச் சூழ்ந்த போதிலும் அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்தே தனது நடவடிக்கைகளை தொடர்ந்துவருகிறார்கள்.
தன்மேல் முழு நம்பிக்கை வைத்திருக்கின்ற சமுதாயம் ஒன்றிற்கு நியாயங்களைப் பெற்றுக் கொடுப்பது ஒரு சிறந்த அரசாங்கத்தின் கடமையாகும். நடந்து முடிந்த சம்பவங்களுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களும் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்களின் வாக்குகளை ஒற்றுமையுடனும் விட்டுக் கொடுப்புக்களுடனும் நின்று சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள தெரியாத ஊனமுற்ற முஸ்லிம் அரசியலினால் இப்படியான கொடூரங்கள் எதிர்காலத்திலும் அரங்கேற வாய்ப்புக்கள் இருக்கின்றன. இந்த அரசியல் பலவீனத்தை கடுகதியில் சீர் செய்ய தலைவர்கள் முற்படாவிட்டால் பாரியதொரு இனச் சுத்திகரிப்பிற்கு நாங்களே வித்திட்டுக் கொடுப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
தன்னுடைய இனத்திற்கான நியாயயங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக போராடுகின்ற எந்தவொரு இயக்கத்தையும் மற்றவர்கள் விமர்சிக்கவேண்டிய அவசியமில்லை. அந்த வகையில் விடுதலைப் புலிகளையும் முஸ்லிம்கள் எப்போதும் விமர்சித்தது கிடையாது. ஆனால், எப்போது தன் சமூக உணர்வை விட்டு இன்னொரு சமூகம் இந்த மண்ணில் வாழக்கூடாது என்ற குரோத எண்ணம் எப்போது புலிகளிடம் ஏற்பட்டு அதனால் முஸ்லிம்களின் உயிரும் உடமைகளும் பொருளாதாரங்களும் எப்போது புலிகளினால் சூறையாடப்பட்டதோ அப்போதுதான் முஸ்லிம்களும் விடுதலைப்புலிகளை ஒரு பயங்கர வாத இயக்கமாக பார்க்க ஆரம்பித்தார்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை முன்னர் விடுதலைப் புலிகளாக இருந்த போதும் எப்போது அரசியல் நீரோட்டத்திற்கு வந்தார்களோ (அவர்களுடைய ஆயுதங்கள் களையாமல் இருக்கும்போது கூட) அப்போதே பழைய பகைமைகளை மறந்து அவர்களோடு கைகோர்த்து வாழ முஸ்லீம்கள் ஆசைப்பட்டார்கள். அதன் காரணமாக அவர்களுடனேயே ஒன்றாக தேர்தலில் நின்று அரசாங்கத்தினால் ஏமாற்றப் பட்டாலும் கூட விட்டுக் கொடுப்புக்களுடனும் சகிப்புத் தன்மையுடனும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் கிழக்கு மாகாணசபையில் பிள்ளையான் அவர்களின் தலைமையை மனதார ஏற்றுக் கொண்டார்கள். இதன்மூலம் அரசாங்கத்தையும் அதைவிட பிள்ளையான் தலைமையில் அமைந்த மாகாண அரசையும் முஸ்லீம்கள் பெரிதும் நம்புகிறார்கள் என்பது தெளிவு.
இப்படியொரு சூழ்நிலையில்தான் மேற்கூறிய சம்பவம் நடந்திருக்கின்றது. இதன்மூலம் மீண்டும் விடுதலைப்புலிகளின் பட்டியலில்தான் இந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் முஸ்லிம்கள் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த அவநம்பிக்கையை களைய வேண்டிய பாரியபொறுப்பு திரு. பிள்ளையான் அவர்களுக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இருக்கின்றது. இந்த முரண்பாட்டினை களையவில்லையாயின் நாடு மீண்டும் மீண்டும் பேரழிவுகளை சந்திக்க கூடும் என்பதில் ஐயமில்லை.
இது இவ்வாறிருக்க இறுதியாக ஒரு வேண்டுகோள். தயவு செய்து இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை உண்டு பண்ணுவதோடு அப்பாவி மக்களின் அன்றாட வாழ்வாதார வருமானத்தை கேள்விக்குறியாக்கிருக்கின்ற இன முரண்பாடுகளை களைவதோடு ஆயுத அரசியல் செய்வதை விட்டு ஜனநாயக அரசியல் செய்து சகல இன மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று ஆட்சி செய்ய முயற்சிக்குமாறு முதலமைச்சர் அவர்களுக்கும் மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் வாக்களித்து ஆசனமேற்றிய அப்பாவி மக்கள் சார்பாக அன்புக் கட்டளை இடப்படுகின்றது.
–தமிழ்மகன்

Comments are closed.