சிந்தாதே…இரத்தத்தை…’சிந்தி’!
மனிதா..மனிதா…
இதைக் கேள்- நீ
மண்ணில் பரவிய
கதை கேள்!
காடுகள் மலைகள்
கடற்கரை வெளிகள்
கடந்தன உந்தன் கால்கள்…
நாடுகள் என்னும்
கோடுகள் இல்லா
நானிலம் செய்ததுன் கைகள்…
அலைகளைப் போல
அலைந்து திரிந்தாய்
மலைகளைக் குடைந்து
குடியும் இருந்தாய்
விலங்குகளை நீ
வேட்டையாடினாய்
உன்னையும் அவைகள்
வேட்டையாடின
ஞாலக் களத்தில்
காலக் கலத்தில்
நீள வளர்ந்தது
நின் பயணம்…
தனி மரமொன்று
தோப்பாய் ஆனதே
மனித சரித்திரக்
கோப்பாய் ஆனது
பன்னூறாயிரம்
ஆண்டு பரப்பில்
பதிந்திருக்கின்றன
உன் பயணச் சுவடிகள்…
முன்னேறும் உன் அடிச்சுவடுகளில்
முளை விடுகின்றன
புதுமை விதைகள்…
துளியாய் தொடங்கி
கடலாய் விரிந்த
மனிதா..!மனிதா..!
இதைக் கேள்- நீ
மண்ணில் பரவிய
கதை கேள்
நீ
விலங்கிலிருந்து
விளைந்தவனல்ல
குரங்கிலிருந்தும்
குதித்தவனல்ல.
அனுமானங்கள்
மட்டும் அல்ல
அறிவுக்கான அடையாளங்கள்
அனுமானங்களை
மெய்யெனக் கொண்டால்
அறிவியல் துறைக்கே
அவமானங்கள்
உடலில் ஓடும் ரத்தம்
அதில் கேள்
உறங்கா உண்மையின் சத்தம்
இல்லை மனிதரில் பேதம்
இல்லை மனிதரில் சாதி
என்பதே இரத்தம் கூறிடும் சேதி
நாம் அனைவரும்
ஒரு தந்தை மக்கள்
இதை உணர்ந்தால் உலகில்
ஒழிந்திடும் சிக்கல்
இறைமை மறுத்து மனிதம் படித்தல்
வெளிச்சம் அவித்து விழித்தல் போல
தொன்மையின் பயணம்
தொடர்கிற மனிதா…
உண்மை இலக்கை
உணர்ந்தாயா நீ…?
வேத வெளிச்சம் கொண்டு
ஆதமின் மகனே
அறிவைத் தேடு…
இனமும் இடமும்
மொழியும் குலமும்
இன்னும் நீளும்
பிரிவினை யாவும்
மாயைகள் என்று
மனிதா உணர்க!
மகத்துவ மனிதா
அகத்தினில் எழுக
சகத்தினில் இறையின்
சாட்சி் பகர்க!
ஆன்ம நேசங்களோடு…
கனி

Comments are closed.