இஹ்வான்களை விமர்சிப்பதால் எமக்கு என்ன லாபம்?
அன்பிக்கினிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!
முற்போக்கான முறையில் சர்வதேசமெங்கும் இஸ்லாமியத்தூதைப் பிரச்சாரம் செய்யும் எமது அமைப்பு மிக அண்மைக்காலமாக தமது இணையதளத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் வழிதவறிப்போன இயக்கங்கள் பற்றிய விமர்சன விளக்கங்களை தொடர்சியாக இணைய அன்பர்களின் மேலான கவனத்திற்கு பதிப்பித்துவந்தோம்.
இத்தொடரை வாசித்த பல சகோதர, சகோதரிகள் சில இயக்கங்களின் உண்மை முகங்களை அறிந்துகொண்டதாக எமக்கு மின்னஞ்சல் வாயிலாக அறியத்தந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
மேற்குறித்த விமர்சனத்தில் தொடர்ச்சியாக “அல் இஹ்வானுல் முஸ்லிமூன்” எனும் இயக்கம் பற்றி ஆக்கங்களை எழுதிவந்ததையும் வாசகர்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள். அவ்வியக்கத்தின் யதார்த்தத்தை இணையத்தில் எழுதியதை சகித்துக் கொள்ளமுடியாத சில சகோதரர்கள் பல்வேறு வகையான விமர்சனங்களை மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றனர். அவ்வாறு பரப்பப்படும் விமர்சனங்களில் அதிகப்படியாகவும், மக்களைக் கவரும் வகையிலும் அமைந்த விமர்சனமே “இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை விமர்சிப்பதால் இவர்களுக்கு என்ன லாபம்?” எனும் விமர்சனம்.
மேற்குறித்த விமர்சனத்திற்கு விடையாகவே இவ்வாக்கம் அமையப்பெருகின்றது.
எம்மைப் பொருத்தமட்டில் இஸ்லாமிய மார்க்கத்தை அதன்தூய வடிவில் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டுமென்ற ஒரே நோக்கிலே அயராது பாடுபட்டு வருகின்றோம். இயக்கத்தை வளர்க்க வேண்டும், ஆட்பிடிக்க வேண்டும் என்ற அற்ப நோக்கங்கள் எமக்குக் கிடையவே கிடையாது. இஸ்லாத்தை கூட்டல், குறைத்தல், மறைத்தல், பூஸிமெழுகுதல், மழுப்பல் போன்ற நயவஞ்சகத்தனங்கள் இல்லாமலும், மனோ இச்சைக்களுக்காய் விட்டுக்கொடுக்கும் துரோகத்தனங்களுக்கு இடம் வைக்காமலும் மிகத்தெளிவாக, உள்ளதை உள்ளபடி எடுத்துக் கூறி மக்களை நேர்வழியின் பால் எமது சக்திக்கு உட்பட்ட வரை அழைப்புப்பணி செய்துவருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.
நாம் இஸ்லாத்தின் உண்மையான வடிவத்தை யார் சிதைத்தாலும் கைகட்டி, வாய்மூடி மெளனியாக ஒருக்காலும் இருக்கக்கூடாது என்றே எமது பிரச்சாரத்தில் அடிக்கடி கூறிவருகின்றோம். சில சகோதரர்கள் அடிக்கடி “இயக்கங்களை மனிதர்கள் தானே செய்கிறார்கள் எனவே இயக்கங்களை விமர்சிக்கக் கூடாது” என்று பேசியும்,எழுதியும் வருகின்றனர். இவ்வாதம் முற்றிலும் இருகாரணிகளால் தவறானதாகும்.
1 இயக்கங்கள் தவறான அமைப்பில் மக்களை வழிநடாத்தும் வேளையில் அதனைக் கண்டுகொள்ளக்கூடாது என்று கூறுவதற்கு எந்தமுகாந்திரமும் அல்குர்ஆனிலோ,அஸ்ஸுன்னாவிலோ அறவே கிடையாது (இயக்கங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையல்ல)
2 தவறை எச்சந்தர்ப்பத்தில் யார்செய்தாலும் தயவுதாட்சன்யங்களைப் பார்க்காமல் மக்களுக்கு அதனைத்தெளிவுபடுத்த வேண்டும். (இதனை திருமறையில் 15ம் அத்தியாயத்தில் 94ம் வசனத்தில் காணலாம் “ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக” )
அன்புக்கினியவர்களே!
சற்று சிந்தித்துப்பார்ப்போம்! இயக்கங்கள் எதற்கு உருவாக்கப்பட்டன??? ஒரே பதில்..
“இஸ்லாத்தை வளர்க்க உருவாக்கப்பட்ட அந்த இயக்கமே தன் வந்தபாதையை விட்டு திசைமாறினால்.. அந்நேரத்தில் ஒரு முஸ்லிமுக்கு என்ன கடமை?
எமது இலக்கும் நோக்கமும் இஸ்லாமெனும் நாகரீகம் உலக மனிதர்களைச்சென்றடைவதுதான்!! அதற்குக் காரணமாக இருக்கும் இயக்கத்தை பிரபல்யப்படுத்தி, அவ்வியக்கம் விடும் தவறுகளைக் கண்டும் காணமல் விடுவது அல்ல. இஸ்லாத்தின் மிது அன்பும், ஆர்வமும் கொண்டவனால் மாத்திரமே இதனைப்புரிந்து கொள்ள இயலும் என்பதில் துளியளவும் சந்தேகம் கிடையாது.
நாம் இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் இயக்கத்தை விமர்சிக்கின்றோம் என்றால் எமக்கும் அவர்களுக்கும் எந்தவிதமான பிரச்சனைகளும் கிடையாது. ஹஸலுல் பன்னாவையோ, செய்யிதுல் குதுபையோ, யூஸுப் அல்கர்ளாவியையோ, ஜமாலுத்தீன் ஆப்கானியையோ நாம் சந்தித்ததும் கிடையாது. வர்தகப்பிரச்சனையோ, குடும்பப்பிரச்சனையோ, கோத்திரப்பிரச்சனையோ எமக்கும் அவர்களுக்கும் இல்லாதபோது நாம் ஏன் அவர்களை விமர்சிக்கின்றோம் என்றால் இஸ்லாமிய மார்க்கத்தை இவர்கள் புரட்டி, கையாடல்களையும், தங்களது சொந்த ஊகங்களையும் மேற்கொண்டு மார்க்கத்தில் சுன்னாக்களை சில்லறைப் பிரச்சனைகள் என்றும், காபிர்களான ஷீஆக்களை முஸ்லிம்கள் என்றும் பிரஸ்தாபித்து இஸ்லாமென்றால் ஏதோ சல்லடை போல் தோற்றத்தை ஏற்படுத்தி எமது மார்க்கத்திற்கு மாசுகற்பித்தவர்கள்.
யார் எத்தவறை செய்தாலும் சுட்டிக்காட்டப்படவேண்டுமென்ற அடிப்படையில் தான் விமர்சிக்கின்றோமே அல்லாமல் சொந்தகுரோதங்களுக்காக அல்ல.
சத்தியக்கொள்கை என்று வந்து விட்டு வந்தவழியிலேயே திரும்பும் அயோக்கியத்தனத்தை அல்லாஹுத்தஆலா “நயவஞ்சகம்” எனக்கண்டிக்கின்றான். அல்லாஹ்வின் கொள்கைக்கு யார்மாற்று விளக்கம் கற்பித்தாலும் (அது நாமாக இருந்தாலும் சரி) தவறை உரிய முறையில் உள்ளபடி சுட்டிக்காட்டப்படல் வேண்டும். மனிதர்கள் தவறுக்கு அப்பாற்பட்டவர்களல்ல. அதில் மாற்றுக் கருத்துக்கிடையாது. ஆனால் உரிய முறையில் தக்க சான்றுகளுடன் அத்தவறு சுட்டிக்காட்டப்படும் சந்தர்ப்பத்தில் அவசியம் அத்தவறை ஏற்று அதிலிருந்து மீளும் பழக்கத்தை உருவாக்குவதே உண்மைமுஃமினுக்கு அழகானதாகும்.
ஆனால் விமர்சனம் வேண்டாம்!விமர்சனம் வேண்டாம்!விமர்சனம் வேண்டாம்! என பிரச்சாரம்செய்யும் இஹ்வானிகள்(டிஏ, எம்.எப்.சிடீ, ஜமாஅதே இஸ்லாமி) நாம் எடுத்துக்கூறும் எந்த ஆக்கபூர்வமான விமர்சனத்தையாவது பரிசீலித்துள்ளார்களா..? இயக்கத்தின் மீதுள்ள பற்று இஸ்லாத்தின் மீது வரக்கூடாதா..?
நாம் யாரையும் எல்லை மீறி, சுயகெளரவங்களில் தலையிட்டு அசிங்கப்படுத்தும் படி எழுதியதோ, பேசியதோ கிடையாது.
எமது விமர்சனங்கள் அத்தனையும் ஆக்கபூர்வமாக அமைந்ததன் பின்னரே மக்கள் பார்வைக்கு விடுகின்றோம்.
தவறான இயக்கங்கள் அனைத்தையும் விமர்சிப்பது போன்றே “இஹ்வானுல் முஸ்லிமீன்” எனும் தவறான கொள்கையுடைய இயக்கத்தையும் விமர்சிக்கின்றோம். எம்மைப் பொருத்தமட்டில் சத்தியக்கொள்கைதான் முக்கியமானதே அன்றி எமது இயக்கமல்ல. சுன்னாக்களுக்கே முதலிடமன்றி இயக்கத்தலமைக்கு அல்ல.
உண்மையை அம்பலப்படுத்தும் வேளை அதனால் ஏற்படும் விளைவுகளை நாம் கவனத்தில் எடுப்பது கிடையாது. யார் எதைச்சொன்னாலும் ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு மாத்திரமே நாம் பதில்களை அளிக்கப்பழகியிருக்கிறோம். தவறாகவும், நியாயமற்றும் செய்யப்படும் அத்தனை விமர்சனங்களையும் நாம் ஒரு தலைப்பட்சமாகவே நோக்குகின்றோம். எனவே இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் கொள்கைகளை நாம் எடுத்துக்கூறுவதால் அவ்வியக்கத்திற்கும் எமக்கும் எந்தவிதமான உட்பூஸல்களும் கிடையவே கிடையாது. எமது ஒரே நோக்கம் அல்லாஹ்வின் கொள்கை மட்டும் வாழ வேண்டும், தனிமனிதக் கருத்துக்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்குத்தேவையில்லை.
….எமது கடமை தெளிவாக சொல்வதே அன்றி வேறில்லை..

Comments are closed.