புகைப்படம், தொலைக்காட்சி வைத்துக்கொள்ளலாமா?
பதில்:
உருவப்படங்கள், உருவச் சிலைகள் ஆகியவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளதைப் பெரும்பாலோர் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் நவீனமான கருவிகளைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் உருவப்படங்கள் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
உருவாச்சிலைகள், உருவப்படங்கள், புகைப்படங்கள், நிழற்படங்கள், எலக்ட்ரான் கதிர் அலைகளால் தெரியும் படங்கள் என பல்வேறு வகைகள் உள்ளன. இவைகளை விரிவாக நாம் ஆராய்ந்தாலே உண்மை விளங்கும்.
‘எந்த வீட்டில் உருவச்சிலைகளும், நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் நுழைய மாட்டார்கள்’ என்பது நபிமொழி. அபுதல்ஹா(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது. உருவச்சிலைகள் என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் ‘திம்ஸால்’ ‘தமாஸீல்’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸில் உருவச் சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் வரமாட்டார்கள் என்று கடுமையான வார்த்தையை நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளதால் உருவச்சிலைகளுக்கு அறவே அனுமதி இல்லை என்று தெளிவாக உணரலாம். இந்தத் தடை எல்லா உருவச் சிலைகளுக்கும் பொதுவானதா? அல்லது இதில் விதி விலக்கு ஏதும் உள்ளதா? என்று பார்ப்போம்.
”நான் நபி(ஸல்) அவர்களுடனிருக்கும் போது பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பேன். என்னுடன் விளையாடுவதற்கு சில தோழிகளும் இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழையும் போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வர். ஆனால் நபி(ஸல்) அவர்கள் (என்னுடன் விளையாட) அவர்களை திருப்பி அனுப்புவார்கள். அதன் பின் அவர்கள் என்னோடு விளையாடுவார்கள்” என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸிலிருந்து ‘பனாத்’ (பொம்மைகள்) வைத்து விளையாட அனுமதி உள்ளது என்று உணரப்படுகின்றது. எனினும் சிலர், உருவச்சிலைகளுக்கு பொதுவான தடை வந்துள்ளதால், இங்கே குறிப்பிடப்படும் பொம்மைகள் உயிரற்ற மரம், செடி, கப்பல் போன்ற பொம்மைகளாக தான் இருக்க முடியும் என்று கூற இடமுண்டு. அதை மற்றொரு ஹதீஸ், மறுத்து ”உயிருள்ளவைகளின் பொம்கைளையே வைத்து விளையாடி இருக்கிறார்கள்” என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் தபூக்கோ, அல்லது ஹுனைனோ இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தனர். அப்போது காற்று வீசி ஆயிஷா(ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைக்குப் போடப்பட்டிருந்த திரை விலக்கியது. அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ”ஆயிஷாவே என்ன இது?” என்றார்கள். ”என் பொம்மைகள்” என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றையும் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ”குதிரை” என்று ஆயிஷா(ரலி) பதில் கூறினார்கள். குதிரையின் மேல் என்ன? என்று கேட்டார்கள். ”இறக்கைகள்” என்று ஆயிஷா(ரலி) பதில் கூறினார்கள். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா? என்று நபி(ஸல்) கேட்க, ”ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?” என்று ஆயிஷா(ரலி) கேட்டார்கள். இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள் என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் அபூதாவூதில் இது இடம் பெற்றுள்ளது.
உயிருள்ள குதிரையின் உருவச் சிலையைக் கண்ட பின்னும் நபி(ஸல்) அவர்கள் கண்டிக்காதது மட்டுமல்ல; தனது சிரிப்பின் மூலம் இதற்கு அங்கீகாரமும் அளிக்கிறார்கள். இதன் மூலம் உயிரற்றவைகள் மட்டுமல்ல; உயிருள்ளவைகளின் பொம்மைகளைக் கூட சிறுவர்கள் விளையாடலாம். அதை வீட்டில் வைத்திருக்கலாம் என்பது தெளிவாகின்றது. உருவச்சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது, சிறுவர்களின் விளையாட்டுக்காக இல்லாமல் ஏனைய நோக்கங்களுக்காக உள்ள உருவச்சிலைகளுக்கே என்று உணரலாம்.
உயிரற்ற பொருட்களாகிய மரம், செடி, கப்பல், வீடு, கார் போன்ற உருவங்களுக்குத் தடை ஏதுமில்லை.
”நான் ஓவியங்கள் வரைகிறேன். அது பற்றி எனக்குத் தீர்ப்பளியுங்கள்” என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஒருவர் கேட்டார். ”எல்லா ஓவியர்களும் நரகில் தான்.வ அவன் வரைந்த ஓவியங்களுக்கு உயிரளிக்கப்பட்டு அவை அவனை நரகில் வேதனைப்படுத்தும். நீ அவசியம் செய்தாக வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவைகளைச் செய்து கொள்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள். இது புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.
உயிரற்ற பொருட்களை செய்து கொள்ள ஒரு தடையுமில்லை என்பதை இந்த ஹதீஸ் திட்டவட்மாக அறிவித்து விடுகின்றது. ஆனால் இந்த அனுமதியிலும் விதிவிலக்கு இருக்கின்றது. உயிரற்றவைகளான ஒரு சில பொருட்களை வைத்துக் கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதி மறுக்கிறார்கள்.
”நபி(ஸல்) அவர்கள் தமது வீட்டில் ‘சிலுவைகளைப் பொறித்த எந்தப் பொருளையும் அழிக்காமல் விட மாட்டார்கள்’ என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி, அபூதாவூத், நஸயீ, அஹ்மத் ஆகிய நூற்களில் இது இடம் பெற்றுள்ளது.”
ஏனைய மக்களால் புனிதப் பொருளாக கருதப்படும் பொருட்களின் உருவச் சிலைகளை நபி(ஸல்) அவர்கள் அனுமதித்ததில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
முப்பரிமாணம் (பட்ழ்ங்ங் உண்ம்ங்ய்ற்ண்ர்ய்) உள்ள உருவச் சிலைகளைப் பொருத்தவரை சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மைகள், பிறரால் புனிதமாகக் கருதப்படாத பொருட்கள் ஆகியவற்றை வைத்துக் கொள்ள அனுமதி உள்ளது என்பதையும், உயிரற்ற ஏனைய பொருட்கள் உருவச்சிலைகளையும் வைத்துக் கொள்ளலாம் என்பதையும் இதன் மூலம் அறிகிறோம். இவற்றைத் தவிர எல்லா உருவச்சிலைகளையும் இஸ்லாம் முற்றாக தடை செய்கிறது. குறிப்பாக நல்லடியார்கள் என்று கருதப்படுபவர்களின் உருவங்களென்றால் அவற்றையும் கட்டாயத் தவிர்க்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஃபாவுக்குள் இருந்த இப்றாஹீம்(அலை), இஸ்மாயில்(அலை) ஆகியோரின் உருவச் சிலைகள் உட்பட எல்லா உருவச் சிலைகளையும் அகற்றுமாறு கட்டளையிட்டு, அவற்றை அகற்றிய பின்பே உள்ளே நுழைந்தார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரியில் இது இடம் பெற்றுள்ளது.
நல்லடியார்களுக்கென்று இதில் விதிவிலக்கு எதுவும் இல்லை. ஈமானுக்கு இதில் தான் ஆபத்து அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எந்த வீட்டில் உருவப்படங்கள் உள்ளனவோ அந்த வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது நபிமொழி. அபூதல்ஹா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. உருவப்படங்கள் என்று இங்கே நாம் மொழிபெயர்த்த இடத்தில் ‘ஸுரத்’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. முன்னர் நாம் உருவச்சிலைகள் என்று மொழிபெயர்த்த இடத்தில் ‘திம்ஸால்’ என்ற வார்த்தையும், இங்கே இம் பெற்ற ‘ஸுரத்’ என்ற வார்த்தையும் உருவச்சிலைகளையும், உருவப்படங்களையும் குறிக்கும் பொதுவான சொல்லாகும். எனினும் பெரும்பாலும் ‘திம்ஸால்’ என்பது உருவச் சிலைகளுக்கும், ‘ஸுரத்’ என்பது உருவப்படங்களுக்கும் பயன்படுத்துவதால் இவ்வாறு மொழி பெயர்த்துள்ளோம்.
ஒரு சிலர் இந்த இடத்திலும், முன்னர் எழுதியுள்ள ஹதீஸிலும் உள்ள ‘திம்ஸால்’, ‘ஸுரத்’ என்ற இரண்டுமே மூன்று பரிமாணம் உள்ள உருவச்சிலைகளையே குறிக்கும். இரண்டு பரிமாணமுள்ள படங்களைக் குறிக்காது. எந்தப் படங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விசித்திரமான விளக்கம் தருகின்றனர். ஹதீஸ்களை ஆராயும் போது இந்த விளக்கம் முற்றிலும் தவறானது என்பது அறியலாம்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்த போது உருவங்கள் (திம்ஸால்) உள்ள திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதைக் கண்டதும் அவர்களின் முகம் மாற்றமடைந்தது. அதைக் கிழித்து எறிந்து விட்டு ”ஆயிஷாவே! அல்லாஹ்வின் படைப்பைப் போல் படைக்க முற்படுபவர்களே கியாமத் நாளில் கடுமையான தண்டனைக்குரியவர்கள்” என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், முஅத்தா, நஸயீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.
திரைச்சீலையில் இருந்த உருவங்கள் நிச்சயம் முப்பரிமாணம் உள்ளதன்று. அவ்வாறு இருக்கவும் முடியாது. மாறாக படங்கள் தான் வரையப்பட்டிருக்கும். அல்லது பின்னப்பட்டிருக்கும். படங்களையும் நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதற்கு இது தெளிவான சான்றாகும். உருவச்சிலைகளும் உருவப் படங்களும் இஸ்லாத்தின் பார்வையில் ஒன்று தான் என்பதை இந்நிகழ்ச்சி உறுதி செய்கின்றது.
உருவப்படங்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டதா? அதில் ஏதேனும் விதிவிலக்கு உண்டா? என்பதை இனி காண்போம்.
”நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்த போது உருவப்படம் வரையப்பட்ட திரைச்சீலைகளைக் கண்டதும். அதை அகற்றினார்கள். நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் அவர்கள் சாய்ந்து கொள்பவர்களாக இருந்தனர்” என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூற்களில் இது இடம் பெற்றுள்ளது.
நான் இதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் உருவப்படங்கள் இருக்கும் நிலையிலேயே அதில் அவர்கள் சாய்ந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவ்குகம் மற்றொரு ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.
”ஜிப்ரீல்(அலை) என்னிடம் வந்து சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்கு தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச்சீலை ஒன்றும் நாய் ஒன்றும் இருந்தது தான். உருவச் சிலையை தலையை அகற்றுமாறும், உருவப் படங்கள் உள்ள திரைச்சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும், நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள்” என்று என்னிடம் கூறினார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அபூஹுரைரா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.
தன்னிடம் இறக்கைகள் உடைய குதிரைகளின் படம் பொறிக்கப்பட்ட திரைச்சீலை இருந்ததாகவும், அதை நபி(ஸல்) அவர்கள் கிழித்ததும், அதில் இரண்டு தலையணைகள் செய்ததாகவும் அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். இது முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ்களை கவனமாகப் பார்க்கும் போது, உருவப் படங்களில் அனுமதிக்கப்பட்டவை எவை? தடுக்கப்பட்டவை எவை? என்பதை எவரும் அறிய முடியும். மதிப்பு மிக்கவையாக கருதப்படும் உருவப்படங்களே தடுக்கப்படுகின்றன. ‘மதிப்பில்லாமல் மிதிபடும் தலையணையாக மாற்றுமா’ ஜிப்ரீல்(அலை) கூறிய வார்த்தை இதைத் தெளிவாக விளக்கும். எந்த உருவம் திரைச்சீலையாக தொங்கிக் கொண்டிருக்கும் போது நபி(ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டதோ அதே உருவம் தலையணையாகத் தரையில் போடக் கூடியதாக ஆகும் போது நபி(ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை. மாறாக அதை அவர்களே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அந்தத் திரைச்சீலையை இரண்டாகக் கிழித்த போது உருவமும், பாதி, பாதியாக சிதறுண்டு போயிருக்கலாம். அதனால் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று சிலருக்குத் தோன்றக் கூடும். அது சரியான அனுமானம் அல்ல. ஏனெனில் ஆயிஷா(ரலி) அவர்கள் ”அதில் உருவம் இருக்கும் நிலையிலேயே அதில் சாய்ந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன்” என்கிறார்கள். உருவம் சிதைந்து விட்டதால் அதைப் பயன்படுத்தினார்கள் என்றால், அதைப் போய் உருவம் என்று சொல்லும் அளவுக்கு விபரம் அறியாதவர்களாக அறிவுச் சுடர் அன்னை ஆயிஷா(ரலி) இருக்கவில்லை. சின்னஞ்சிறு வித்தியாசத்தையும் நுணுக்கமாக கவனிக்கும் அன்னை அவர்கள் உருவம் சிதைந்து போயிருந்தால் அதை உருவம் என்று குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.
மேலும் சம்மந்தப்பட்ட ஹதீஸில் உருவச் சிலையின் தலையை அகற்றுமாறு கூறிய ஜிப்ரீல்(அலை) அவர்கள், உருவப்படங்கள் உள்ள சீலையை உருவம் தெரியாதவாறு நீள வடிவில் பாதியாகக் கிழிக்குமாறு கூறவில்லை. உருவம் தெரியாத அளவுக்கு மாற்றினால் தான் தலையணையாகப் பயன்படுத்தலாம் என்றிருந்தால் ‘மதிப்பில்லாமல் மிதிபடும் வகையில் என்று கூறியிரக்கத் தேவையில்லை. இன்னும் சொல்வதென்றால் தலையணையாக ஆக்குமாறு கூட அவர்கள் கூறத் தேவையில்லை. உருவம் தெரியாத வகையில் கிழிக்கப்பட்டு விட்டால் அதைத் திரைச்சீலையாகவே மீண்டும் பயன்படுத்தலாமே!”
ஆக மதிப்பற்ற விதத்தில் பொறிக்கப்பட்டுள்ள படங்களைப் பயன்படுத்தத் தடை ஏதும் இல்லை என்பதே சரியாகும். தொங்க விடப்படும் உருவப் படங்கள் பொறித்த திரைச் சீலைகள், பிரேம் செய்து மாட்டப்படும் உருவப் படங்கள், ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கும் போட்டோக்கள், பெட்டியில் பூட்டி வைத்து பாதுகாக்கும் உருவப் படங்கள் இவயெல்லாம் தடுக்கப்படுகின்றன. அதைப் பற்றி மதிப்பிருக்கின்ற காரணத்தினால் தான் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்கள். ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள். உயர்ந்த இடத்தில் வைத்துப் பேணுகிறார்கள். இது போன்ற வழிகளில் பயன்படுத்த இஸ்லாம் தடுக்கின்றது.
செய்தித்தாள்களில் காணப்படும் உருவப்படங்கள், பொட்டலாம் கட்டிக் கொடுக்கப் பயன்படும் உருவபடங்கள் பொறித்த காகிதங்கள், பொருட்களைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பெட்டிகளில் பொறிக்கப்பட்ட உருவப் படங்களுக்கு (உதாரணம்: தீப்பெட்டி) எவ்வித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. இவைகளை வைத்திருக்கத் தடையும் இல்லை. ஒரு செய்திப் பத்திரிகை நம் வீட்டில் இருந்தால் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பதில்லை.
இந்த இடத்தில் ஒரு வித்தியாசத்தை நாம் மறந்து விடக் கூடாது. இவைகளை வைத்திருக்கத் தான் அனுமதியே தவிர நாமே வரைய அனுமதி இல்லை. மற்றவர்கள் அவசியமான தயாரிப்புகளில் உருவப் படங்களை வரைந்தே விற்பனை செய்தால் உருவப் படத்துக்கு மதிப்பு ஏதும் தராமல் பயன்படுத்தலாம். பொருளை பயன்படுத்திய பின் தூர எறிந்து விடலாம். நாமே அச்சிடுவதும், வரைவதும் கடுமையான குற்றமாகும்.
குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தல் போன்ற காரணத்துக்காக உருவங்கள் வரைந்து கற்றுக் கொடுப்பதையும் தடை செய்ய முடியாது. சிங்கம், புலி போன்ற விலங்குகளை படம் வரைந்து தான் கற்றுக் கொடுக்க முடியும்.
அது போல் சாட்சியங்களாகப் பயன்படக் கூடிய வகையிலும் படங்களைப் பயன்படுத்தலாம்.
ஒரு ஊரில் ஒரு சமுதாயத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை அம்பலப்படுத்திட புகைப்படங்கள் சிறந்த சாட்சியமாகப் பயன்படும். சிலரது சந்திப்புகளை நிரூபிக்கும் அவசியம் ஏற்படும் என்றால் அப்போதும் புகைப்படங்களைத் தடுக்க முடியாது.
மதிப்பில்லாத வகையில் உருவப்படங்களை பயன்படுத்துவதில் இவை யாவும் அடங்கும்.
யாரேனும் உருவப்படங்களை வரைந்தால் அதற்கு அவனால் உயிரளிக்க முடியாது என்றிருந்தும் உயிரளிக்கும் வரை அவனை அல்லாஹ் வேதனை செய்வான். (அதாவது வேதனை செய்து கொண்டேயிருப்பான்) என்பதும் நபிமொழி. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, திர்மிதீ, நஸயீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது. இதே கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. நபி(ஸல்) அவர்கள் இதில் விதிவிலக்கு அளிக்கவே இல்லை. மரம் போன்ற தாவரங்களைத் தான் வரையலாம் என்ற அளவுக்கே அனுமதித்தார்கள். அந்த ஹதீஸை முன்பே குறிப்பிட்டுள்ளோம்.
நமது தயாரிப்புகளில் உருவப்படங்கள் அச்சிடுவதையும் நூற்களில், இதழ்களில் உருவப்படம் பொறிப்பதையும் தவிர்த்தே ஆக வேண்டும்.
”உருவப் படம் வரையும் வேலையை இனியும் யாரேனும் செய்தால் முஹம்மதின் மீது இறக்கப்பட்ட(வேதத்)தை அவர் மறுக்கிறார்?” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அலீ(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. உண்மையான முஸ்லிம்களுக்கு இந்த ஒரு எச்சரிக்கையே போதுமானதாகும்.
ரூபாய் நோட்டுக்களில் உருவப்படங்கள் பொறிக்கப்படுகின்றன. அதற்கு மதிப்பளிக்கப்பட்டு பெட்டியில் வைத்துப் பாதுகாக்கவும் படுகின்றதே! அப்படியானால் ரூபாய் நோட்டுக்களையும் பயன்படுத்தக் கூடாதா? என்று சிலருக்குத் தோன்றலாம். இதை நுணுக்கமாக கவனிக்க வேண்டும்.
ரூபாய் நோட்டுக்களுக்கு இருக்கும் மதிப்பு ரிஸர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து இருப்பதால் தான். அதில் உள்ள உருவப்படங்களுக்காக அல்ல. உருவப்படங்கள் இல்லாமல் வெளியிடப்படும் ‘நூறு ரூபாயை’ நாம் தெருவில் எறிந்து விட மாட்டோம். 100 ரூபாய் செல்லாது என்று அரசாங்கம் அறிவித்த பிறகு பல்பொடி மடிக்கத்தான் அதை பயன்டுத்தியிருப்போம். ரூபாய்க்கு உள்ள மதிப்பு அதைக் கொடுத்து பொருட்களை வாங்க முடியும் என்பதால் தான். அதில் பொறிக்கப்பட்ட படங்களுக்காக அல்ல. எனவே ரூபாய் நோட்டுக்களைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
நீங்கள் ரூபாய் நோட்டு அடிப்பதென்றால்! (நான் கள்ள நோட்டை இங்கே சொல்லவில்லை. உங்களிடத்தில் ஆட்சி இருந்து நீங்கள் அடிப்பதென்றால்) உருவப் படங்கள் பொறிக்காமல் அடிக்க வேண்டும். இந்த வித்தியாசத்தை நாம் மறந்து விடக் கூடாது.
ஒரு சாரார், ”மதிப்பற்ற வகையிலும் கூட உருவப் படங்களை பயன்படுத்தக் கூடாது” என்று கூறி கீழ்க்கண்ட ஹதீஸைச் சான்றாகக் காட்டக்கூடும்.
ஆயிஷா(ரலி) அவர்கள் உருவப்படங்கள் பொறித்த திரைச்சீலை ஒன்றை வாங்கியிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வந்து உள்ளே நுழையவில்லை. இதைக் கண்டதும், ஆயிஷா(ரலி) அவர்கள், ”நான் செய்த தவறு (எதுவாயினும்) அதற்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்புத் தேடுகிறேன்” என்றார்கள். ”இது என்ன திரைச்சீலை” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ”நீங்கள் அதன் மேல் அமர்வதற்கும், சாய்ந்து கொள்வதற்காகவும் வாங்கினேன்” என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள். ”இந்த உருவத்தை வரைந்தவர்கள் கியாமத் நாளில் வேதனை செய்யப்படுவார்கள். நீங்கள் படைத்ததை உயிர்ப்பியுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரியில் இது இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் ”சாய்ந்து கொண்டார்கள்” என்று வருகின்ற ஹதீஸை மாற்றி விட்டது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். இந்த வாதம் இரண்டு காரணங்களால் சரியானதல்ல. நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) விளக்கம் கூறிய பிறகு, வரைந்தவர்களையே கண்டனம் செய்கிறார்கள். ஆயிஷா(ரலி) அவர்களைக் கண்டிக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் உருவப்படம் உள்ள தலையணையில் சாய்ந்து கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு பின்பே ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். அது மாற்றப்பட்டிருந்தால் நபி(ஸல்) அவர்கள் ஏற்கனவே பயன்படுத்தியதைத் தூர எறிந்திருப்பார்கள்.
இது உருவப்படங்களின் நிலை! புகைப்படங்களுக்கும் இதுவே தான் சட்டம். கையால் வரைந்தால் தான் உருவப்படும். கருவியால் வரைந்தால் அது உருவப்படம் அல்ல எந்த விந்தையான வாதம் உப்புச் சப்பில்லாத வாதமாகும். ஒரு காலத்தில் எழுத்தாணியால் எழுதினார்கள். அது வளர்ந்து பேனாக்களால் எழுதப்பட்டு, இன்று அச்சிடப்படுகிறது. எழுத்துக்கலையின் விஞ்ஞான முன்னேற்றமே அச்சுக்கலை. அச்சிடப்பட்டதையும், கையால் எழுதியதையும் எழுத்துக்கள் என்றே கூறுவோம். அதுபோல் ஓவியக் கலையின் விஞ்ஞான முன்னேற்றமே ‘போட்டோ’ (புகைப்படக் கலை) இது உருவப்படம் அல்ல என்று எவரும் கூற முடியாது. அதை விட தத்ரூபமாக படங்கள் போட்டோவில் அமைகின்றன. போட்டோவுக்கு உருவப் படங்களுக்குச் சொன்ன எல்லா விதிகளும், விலக்குகளும் பொருந்தும்.
எல்லாவற்றையும் நமக்காக இறைவன் படைத்துள்ளான் என்பதால் உருவப்படங்கள் கூடும் என்று சிலர் கூறுகின்றனர். பன்றி, நாய்களையும் இதே அடிப்படையில் உண்ண முடியுமா? நமக்காக எல்லாவற்றையும் படைத்த இறைவன் தான் ஒரு சிலவற்றை நமக்குத் தடுத்திருக்கிறான் என்று புரிந்து கொண்டால் இந்தக் கேள்வி எழ வழியில்லை.
முயல்ஜோடி கைலி அணியலாம். ரூபாய்கள் வைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த விளக்கங்கள் தெளிவாக்கம். டி.வி., வீடியோவுக்கு வருவோம்.
டி.வி, வீடியோக்கள் உருவப்படங்களில் சேராது என்பதே சரியாகும். உருவப்படங்களுக்கும், டி.வி., வீடியோவுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
காணப்படுவது, பிரதிபலிப்பது எல்லாம் படங்கள் அல்ல. பதிவதும், நிலைத்திருப்பதுமே படங்கள். நமது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறோம். நமது உருவம் கண்ணாடியில் தெரிவதால் காண்ணாடியை யாரும் உருவப்படம் என்று சொல்வதில்லை. கண்ணாடி பார்த்தால் மலக்குகள் வருவதில்லை என்று கூறுவதில்லை. கண்ணாடியில் தெரிவதை நாம் படம் என்று சொல்லாமலிருக்க என்ன காரணம் கூறுவோம். நம் உருவம் கண்ணாடியில் பதியவும் இல்லை. நிலைத்திருக்கவும் இல்லை. நாம் முன்னால் நின்றால் அது நம்மைக் காட்டும். வேறு யாராவது நின்றால் அவர்களைக் காட்டும். யாருமே நிற்காவிட்டால் எதையும் காட்டாது.
டி.வி.,யும் இது போன்றது தான். நாம் எதை ஒளிபரப்புகிறோமோ அது தெரியும். என்னை ஒளிபரப்பினால் நான் தெரிவேன். உங்களை ஒளிபரப்பினால் நீங்கள் தெரிவீர்கள். எதையும் ஒளிபரப்பாவிட்டால் எதுவுமே தெரியாது. டி.வி.யில் எதுவுமே பதியவுமில்லை. நிலைக்கவுமில்லை. உருவப்படம் என்று காரணம் காட்டி இதைத் தடுக்க முடியாது.
மேலும் உருவப்படம் என்பதில் இயக்கமோ, அசைவோ, ஓசையோ இருக்காது. டி.வி., வீடியோக்களில் இவையெல்லாம் இருக்கின்றன. உருவப்படங்களிலிருந்து இந்த வகையிலும் தொலைக்காட்சி என்பது வித்தியாசப்படுகின்றது. சுருங்கச் சொல்வதென்றால் நேரடியாகக் காண்பது போன்ற தன்மையே டி.வி., வீடியோக்களில் காணப்படுகிறது.
அன்னியப் பென் ஒருத்தி போய்க் கொண்டிருக்கிறாள். முகம் பார்க்கும் கண்ணாடி வழியாக அவளது பிம்பத்தை ரசிப்பது கூடுமா? கூடாது என்போம். உருவம் என்பதற்காக அல்ல. அன்னியப் பெண்ணை ரசிக்கக் கூடாது என்பதற்காக. நேரில் எதையெல்லாம் பார்க்கக் கூடாதோ அதையெல்லாம் கண்ணாடி வழியாகவும் பார்க்கக் கூடாது.
ஒரு விளையாட்டு நடக்கிறது. அதை நேரிலும் பார்க்கலாம். கண்ணாடி வழியாகவும் பார்க்கலாம். டி.வி.,யின் நிலையும் இதுதான். கல்வி, விவசாயம், மருத்துவம், தொழிற்பயிற்சி, சமையல்கலை, நாட்டு நடப்பு, அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்கள், செய்முறைப் பயிற்சி, மார்க்க விளக்க நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளை நேரிலும் பார்க்கலாம். டி.வி.யிலும் பார்க்கலாம். திரைப்படமாகவும் பார்க்கலாம்.
ஆபாசம், பச்சை வசனங்கள், ஆண் பெண் கட்டிப் புரளுதல், படுக்கையறைக் காட்சிகள் போன்றவைகளை நேரிலும் பார்க்கக் கூடாது. டி.வியிலும் பார்க்கக் கூடாது. இசையை நேரிலும் கேட்கக் கூடாது. டி.வி., வழியாகவும் கேட்கக் கூடாது. இது தான் அதன் அடிப்படை.
வீடியோவுக்கு அனுமதி உண்டு என்று கருதிக் கொண்டு திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று கருதக் கூடாது. மற்றவர்களுக்கோ தனக்கோ ஒரு பயனும் இல்லாத இது போன்ற நிகழ்ச்சிகளுக்காகப் பெரும் பணம் செலவு செய்தல், வீண் விரயம் என்ற அடிப்படையில் தடுக்கப்பட்டதாகும். கல்வி மற்றும் பிறருக்குப் பயன் தருகின்ற நிகழ்ச்சிகளை வீடியோ கேஸட்டுகளாக எடுத்து வைப்பதால் அதைப் பிறர் பார்த்து கற்றுக் கொள்ள உதவுகிறது என்பதால் அதற்குத் தடை இல்லை. கடைசியாக ஒரு போதனை.
பயனுள்ள பல காரியங்களுக்காக பயன்படத்தக்க இத்தகைய நவீன கருவிகள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தவல்ல இத்தகைய சாதனங்கள் தகுதியற்றவர்களின் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் மனிதனை வழிகெடுக்கும் நிகழ்ச்சிகளும், உருப்படாத சங்கதிகளுமே அதிகமதிகம் காட்டப்படுகின்றன. ஒரு சில பயனுள்ள நிகழ்ச்சிகளைக் காட்டினாலும் அதை மட்டும் மக்கள் பார்ப்பதில்லை. உருப்படாத நிகழ்ச்சிகளுக்காகக் காத்திருந்து அதைப் பார்க்கிறார்கள்.
இத்தகைய ஆளும் வர்க்கமும், இப்படிப்பட்ட மக்களும் உள்ள நாடுகளில் இதுபோன்ற சாதனங்களை வீடுகளில் வாங்கி வைப்பவர்கள் ரொம்பவும் யோசிக்க வேண்டும்.
மார்க்கம் அனுமதிக்கின்ற வழிகளில் மட்டும் அதை தன்னால் பயன்படுத்த முடியுமா? மனதைக் கெடுக்கும் சமாச்சாரங்கள் காட்டப்படும் போது சபலப்படாமல் தன்னை வெல்ல முடியுமா? என்று பலமுறை யோசிக்க வேண்டும். நாம் வேலையின் நிமித்தம் வெளியிலோ, வெளி ஊருக்கோ, வெளி நாட்டுக்கோ சென்ற பின் நம் குடும்பத்தினர் அதை மார்க்கம் அனுமதிக்கின்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்துவார்களா? இதையும் யோசிக்க வேண்டும். நம்முடைய பிள்ளைகள் இதில் மூழ்கி உள்ளம் கெட்டுப் போவதுடன், கல்வமகற்பதில் அக்கறையின்மை கொள்ளாமலிருப்பார்களா? இதையும் யோசிக்க வேண்டும். இவ்வளவு உறுதியும் கட்டுப்பாடும் உள்ளவர்கள் டி.வி.யைத் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை.
ஒரு காலத்தில் வானொலிப் பெட்டி அறிமுகமானபோது உலக நடப்புக்களையும், செய்திகளையும் அறிய உதவுவதால் வானொலிப் பெட்டியை அனுமதித்தார்கள். ஆனால் நடந்தது என்ன? செய்தி வாசிக்கும் போது மட்டும் வானொலிப் பெட்டியை நிறுத்தி விடுகிறார்கள். தகுதியில்லாதவர்களிடம் இது போன்ற சாதனங்கள் இருப்பது வம்மை விலை கொடுத்து வாங்கியதாகவே அமையும்.
நன்றி: onlinepj.com

Comments are closed.