Skip to content

ந‌பிழியில் கூட்டுத்தொழுகையின் போது ஸப்புகளை சீர்செய்வது எப்படி?

November 28, 2007

ஏக‌ இறைவ‌னாகிய‌ எம‌து இர‌ட்ச‌க‌ன் எம்மீது தின‌மும் ஐவேளைத் தொழுகையைக் க‌ட‌மையாக்கியுள்ளான். அத்தொழுகையை (ஜ‌மாஅத்) கூட்டாக‌ நிறைவேற்றும் வேளை நாம் க‌டைப்பிடிக்க‌ வேண்டிய‌ வ‌ழிகாட்டுத‌ல்க‌ளையும் அவ‌னின் திருத்தூத‌ர் (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் மூல‌மாக‌ எம‌க்குக் க‌ற்றுத்த‌ந்துள்ளான்.
இஸ்லாத்தைப் பொறுத்த‌வ‌ரை ச‌கோத‌ர‌த்துவ‌ சிந்த‌னைக்கு முத‌லிட‌ம் கொடுக்கும் ஓர் மார்க்க‌ம் என்ப‌து வ‌ர‌லாறு க‌ண்ட‌ உண்மை. குல‌, நிற‌, மொழி வேறுபாடு அன்றி “ச‌க‌லரும் ச‌ம‌மே” என்ற‌ உய‌ர் கோட்பாட்டை வெளிக்கொண‌ரும் ஒரு த‌ளமாக‌வே ஜ‌மாஅத் தொழுகையை இஸ்லாம் நோக்குகிற‌து. ம‌னித‌ குல‌த்தின் ம‌றும‌ல‌ர்ச்சிக்காய் த‌ன்னையே அர்ப்பணித்த‌ மாந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூட்டாக‌ தொழுகை ந‌டாத்தும் வேளை ஸ‌ப்புக‌ளை சீராக்குவ‌திலும் வ‌ளைவு இன்றி வ‌ரிசைப்ப‌டுத்துவ‌திலும் கூடிய‌ க‌வ‌ன‌ம் செலுத்தினார்க‌ள்.

அபூ ம‌ஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் எங்களுடைய தோள்களைத் தடவி (தோள்கள் சமமாக இருக்கின்றனவா என்று சரி) பார்ப்பார்கள். மேலும் நேராக நில்லுங்கள்! வேறுபட்டு நிற்காதீர்கள்! அப்படி நின்றால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும்.

உங்களில் அறிவில் சிறந்தவர்கள் எனக்கு அருகில் நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்துள்ளவர்களும் பிறகு அவர்களுக்கு அடுத்துள்ளவர்களும் நிற்கட்டும் என்று கூறுவார்கள். தொடர்ந்து அபூ மஸ்ஊத் அல் அன்சாரி (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஆனால் நீங்களோ இன்று (வரிசையில் சீராக நிற்காத காரணத்தால்) கருத்துவேறுபாட்டுடன் காணப்படுகின்றீர்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸிலிருந்து எமக்குத் தெளிவாகும் விளக்கம்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் எங்களுடைய தோள்களைத் தடவி (தோள்கள் சமமாக இருக்கின்றனவா என்று சரி)பார்ப்பார்கள்.. என்ற‌ ஹ‌தீஸின் தொட‌ர் எம‌க்குத் தெளிவு ப‌டுத்தும் விட‌ய‌ம் என்ன‌வென்றால் தொழுகை ந‌டாத்தும் இமாம்க‌ள் தொழுகையை ந‌டாத்துவ‌த‌ற்கு முன் த‌ம‌க்குப் பின்னால் நிற்ப‌வ‌ர்க‌ளின் தோள்க‌ளை பிற‌ ச‌கோத‌ர‌ர்க‌ளின் தோளோடு சேர்த்து வைப்ப‌து ந‌பிவ‌ழியில் அமைந்த‌ ஸுன்னாவாகும்.

ஆனால் பெரும்பாலான‌ இமாம்க‌ள் பள்ளிவாயல்களில் கூட்டாக தொழுகை நடாத்தும்போது ஏன் மேற்கண்டவாறு ஸப்புகளை சீர்திருத்துவதில்லை? மாறாக “ஸப்பூ ஸுபூ பக்கும் றஹிமகுமுல்லாஹ்” என்கிறார். வரிசையில் நிற்பவர்கள் “ஆமீன்” என்கிறார்கள். குளிக்கப்போய் சேறு பூசியவனின் கதைபோல் நன்மை தேட வந்து மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத நூதன அனுஷ்டானத்தை இன்றும் எமது சமூகம் பள்ளியினுள் தினமும் அரங்கேற்றிவருவதை கண்கூடாய்க் காண்கிறோம்.

அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள் ஏனெனில் வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகை முழுமை அடைவதன் ஓர் அங்க‌மாகும்.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸை அறிவிக்கும் அனஸ்(ரழி) அவர்களே கூறுகிறார்கள்: எங்களில் ஒருவர் மற்றவரின் தோளோடும், கால்பாதத்தை தனது கால்பாதத்தோடும் சேர்த்து வைப்பவர்களாக இருந்தோம்.
ஆதாரம்: புஹாரி

நுஃமான் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் (வளைந்த) அம்புக்குச்சிகளை சீராக்குவது போன்று எங்கள் (தொழுகை) அணிகளை சீராக்குவார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்

நுஃமான்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: (எங்களில்) ஒருவர் தனது தோளை மற்ற சகோதரனின் தோளோடும், முட்டுக்காலை மற்ற சகோதரனின் முட்டுக்காலோடும், தனது பாதத்தை மற்ற சகோதரனின் பாதத்தோடும் இனைத்து நின்றதை நான் பார்த்தேன்.
ஆதாரம்: அல்குனா வல்அஸ்மா

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! பேஷ் இமாம்களே!
மேற்கூறப்பட்ட அனைத்து நபிமொழிகளில் இருந்தும் இரண்டு விடயங்கள் எமக்குத் தெளிவாகின்றன.

1) முஸ்லிம் சமூகத்தின் ஐக்கியமும் பரஸ்பர உறவும் ஸப்புகளை சீர்படுத்துவதிலே தங்கியுள்ளது. இன்று முஸ்லிம் சமுதாயம் பிளவுபட்டு நிற்பதற்கு மூல காரணங்களில் ஒன்று ஸப்புகளில் சீர்திருத்தமின்மையே என்பது தெளிவான ஒரு விடயமாகும்.

2) கூட்டுத்தொழுகையின் போது ஸப்புகளில் தனது தோளை மற்ற சகோதரனின் தோளோடு சேர்த்து வைப்பதும், தனது பாதத்தை மற்ற சகோதரனின் பாதத்தோடு சேர்த்து வைப்பதும் கட்டாயக் கடமையாகும். வெறுமனே அனியாக நின்றால் மட்டும் போதாது. எனவே இமாம்கள் தொழவைக்குமுன்  கட்டாயமாக‌ ஸப்புகளை சீர்திருத்தும் விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நபிகளாரால் ஒவ்வொரு தொழுகையிலும் வலியுருத்தப்பட்ட இந்த ஸுன்னாஹ் இன்று எம்மை விட்டு முற்றாக மறைந்து காணப்படுகிறது. மார்க்க அங்கீகாரமில்லாத பிழையான கொள்கைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நபிகளாரால் வலியுருத்தப்பட்ட இந்த ஸுன்னாவுக்கு கொடுப்பதன் மூலம் ஒட்டு மொத்த சமூகமே சகோதரத்துவ பரஸ்பர உணர்வுக்குத் திரும்புமென்பதில் ஐயமேதுமில்லை.

பள்ளிவாயலில் மக்களுக்குத் தொழவைக்கும் இமாம்கள் சகோதரத்துவத்தையும் சினேகபூர்வத்தையும் கட்டியெழுப்பும் இந்நடவடிக்கையில் கூடுதல் கரிசனை செழுத்த வேண்டும்.
இஸ்லாம் தடுத்த ஜாதி வேறுபாட்டை கழைந்து ஒருகுல மக்களாக முஸ்லிம்கள் திகழ்வதற்கு வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.

அல்லாஹ் நம்மனைவரையும் அவனதும் அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களினதும் நேரான பாதையில் நடக்க அருள்புரிவானாக.

“எமது கடமை தெளிவாகச் சொல்வதே அன்றி வேறில்லை”

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers