சர்வதேசப்பிறை பற்றிய சந்தேகங்களும் தெளிவுகளும்

அன்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே!
இக்கட்டுரையின் நோக்கம் சர்வதேசப்பிறை பற்றி எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு தெளிவுரை வளங்குவதும், பிறை விவகாரத்தில் தெளிவு பெறுவது எவ்வாறு? என்ற அடிப்படையை தெளிவுபடுத்தி ஆதாரங்கள் அடிப்படையில் எமது வண்க்க வழிபாடுகளை செய்வதற்கு வழிகாட்டுவதுமேயாகும்.
கேள்வி : சர்வதேச பிறை என்றால் என்ன?
பதில் : சர்வதேச பிறை என்பது உலகில் எப்பகுதியில் பிறை தென்பட்டாலும் அப்பிறையை நம்பகமான, நீதமான இரண்டு முஸ்லிம்கள் தாம் நெற்றிக்கண்களால் கண்டதாக சாட்சி கூறினால் அதனை ஏற்று ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் தங்களது நோன்பு மற்றும் இரு பெருநாட்களை அனுஷ்டிக்க வேண்டும். இதுவே சர்வதேசப்பிறைக்கு இரத்தினச்சுருக்கமான விள்க்கமாகும்.
கேள்வி : உள்நாட்டுப்பிறையை ஏற்காமல் சர்வதேசப்பிறையை மாத்திரம் நீங்கள் கருத்திலெடுப்பதன் நோக்கமென்ன?
பதில்: உள்நாட்டுப்பிறையை ஏற்காமல் சர்வதேசப்பிறையை நாம் ஏற்றுக்கொண்டதற்கு பல காரண்ங்களை கூற முடியும். சுருக்கமாக கூறுவதென்றால் அவற்றை மூன்று காரணிகளாக வரிசைப்படுத்தலாம்.
1. அல்குர் ஆனும், அஸ்ஸுன்னாவும் சர்வதேசப்பிறையையே அதிகம் வலியுறுத்துவது.
2. அறிவியல் ரீதியாகவும் சர்வதேசப்பிறைக்கே அதிக சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றமையும்.
3. பிறையை எமக்குத் தீர்மானித்து தரும் பிறைக்கொமிட்டியினர் தொடர்ச்சியாக மோசடிகளில் ஈடுபட்டு அவர்களின் நம்பகத்தன்மையை இழந்தமையும்.
மேற்குறித்த காரணங்களை மையப்படுத்தியே உள்நாட்டுப்பிறையை ஏற்காமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கும் சர்வதேசப்பிறையை பிரச்சாரம் செய்து அதனை அமுல்படுத்தி வருகின்றோம்.
கேள்வி: சர்வதேசப்பிறையை தாங்கள் பின்பற்றுவதால் ஊரின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுகின்றதே? இதுபற்றி…
பதில்: இஸ்லாம் மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவதில் தன்னிகரற்ற ஓர் மார்க்கம் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்தில்லை. பல்வேறு இடங்களில் ஒற்றுமையை வலியுருத்தும் இஸ்லாம் அவ்வொற்றுமை மார்க்க அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்று வலியுறுத்துவதையும் இவ்விடத்தில் கோடித்துக்காட்ட விரும்புகிறோம்.
மக்கள் அனைவரும் மார்க்கம் சொல்கின்ற அடிப்படையிலேயே ஒற்றுமையை கடைப்பிடிக்க வேண்டுமேயல்லமல் ஊர் நடைமுறைக்ககவும் தொன்றுதொட்டுவந்த பழக்க வழக்கங்களுக்காகவும் மார்க்கத்தை விட்டுவிடமுடியாது. இதனையே திருக்குர் ஆன் இப்படிச் சொல்கின்றது:
” நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்! அதில் பிரிந்து விடாதீர்கள்!” (ஆல இம்ரான்)
உலகில் வாழுகின்ற எல்லா முஸ்லிம்களும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஒரே தினத்தில் பெருநாள் கொண்டாடினால் அனைத்து முஸ்லிம்கள் மத்தியிலும் பாரிய ஒற்றுமை வளருமல்லவா? மாற்றுமத அன்பர்களே தங்களது புனித தினங்களை ஒரே தினத்தில் கொண்டாடும் போது சத்திய மார்க்கத்தில் வாழும் நாம் ஏன் ஒரே தினத்தில் எமது நோன்பு மற்றும் இரு பெருநாட்களை அமைத்துக்கொள்ள முடியாது?
சர்வதேசப்பிறையினூடாக நாம் எதிபார்க்கும் ஒற்றுமை உலக முஸ்லிம்களின் ஒற்றுமையைத்தான். உலகம் கிராமமாக சுருங்கியுள்ள இக்காலகட்டத்தில் இன்னும் நாம் பழய பஞ்சாங்கங்களை காரணம் காட்டி சர்வதேச ஒற்றுமையை உதாசீனம் செய்ய முடியாது. சமூக ஒற்றுமைக்காய் ஸுன்னாக்களை மறைக்கமுடியுமா?
உலகியல் சார்ந்த விடயங்களில் ஊர் ஒற்றுமையை முழுமையாக மதிக்கின்றோம். அன்னால் மார்க்க விடயங்களில் ஊரின் ஒற்றுமையைவிட அல்லாஹ்வின் விருப்பத்தையே முதன்மைப்படுத்தி மார்க்க சட்டங்களை பின்பற்ற விழைகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது சகோதரர்களே! சிந்தித்து பாருங்கள்.
கேள்வி: சர்வதேசப்பிறை அடிப்படையில் பெருநாள் தொழும் நீங்கள் திறந்த வெளியில் அவற்றை தொழாமல் உங்கள் வீடுகளில் தொழுது கொண்டால் என்ன?
பதில்: அன்புக்குரிய சகோதரர்களே! ஊர்மக்களுக்கு மாற்றமாய் ஒரு காரியத்தை செய்து ஊரின் சுமூக நிலையை குழப்பி அதில் குளிர்காய வேண்டுமென்ற நோக்கத்தில் நாம் எமது தஃவாப்பிரச்சாரத்தையோ, அதன் அமுலாக்கங்களையோ செய்யவில்லை. இது மார்க்க விடயம். எமது விருப்பு வெருப்பிற்கேற்ப செயற்படுவதற்கு இது எமது மார்க்கமல்ல.
அந்த வல்ல நாயனுக்கு சொந்தமான மார்க்கம். அவனது அடிமைகளான நாம் அவன் விரும்புகின்ற அடிப்படையில்தான் வாழ முடியும். மார்க்கத்தை நமக்கு சொல்லித்தந்த அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் அதன் முறைமைகளையும் சொல்லித்தந்து விட்டே மரணித்துள்ளார்கள். தொழுங்கள் என்று கட்டளையிட்ட அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)அவர்கள் எப்படித்தொழ வேண்டும் என்ற முறைமைகளையும் கற்றுத்தந்துள்ளார்கள்.
பெருநாள் தொழுகையை எங்கு தொழவேண்டுமென்று ந்பிகளார் நேரடி வாக்குமூலத்தை கீழே தருகின்றோம்.
” அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
‘அல்லாஹ்வுடய தூதர் நோன்பு மற்றும் ஹ்ஜ்ஜுப்பெருநாள் தொழுகைகளைத் தொழுவதற்கு தொழும் திடலுக்கே போவார்கள். (ஆதாரம் : ஸ்ஹீஹுல் புஹாரி )”
சுமார் எட்டுக் கிரந்தங்களுக்கும் மேலாக நம்பகமான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இச்செய்தி அடிப்படையில் பெருவெளியில்தான் தொழ வேண்டுமேயல்லாமல் பள்ளிகளிலோ, வீடுகளிலோ பெருநாட்தொழுகைகளை தொழுவதை இஸ்லாம் விரும்பவில்லை என்பதைக்கவனத்தில் கொள்க!
கேள்வி: மக்களை விட்டு தனித்து பெருநாள் கொண்டாடுவது நபிவழியல்ல என்று சில மார்க்க அறிஞர்கள் கூறுகின்றார்களே..இது பற்றி?
பதில்: மேற்குறிப்பிட்ட கருத்து மார்க்க அதாரங்கள் அடிப்படையில் சொல்லப்பட்ட ஓர் கருத்தல்ல. அவ்வறிஞர்களின் சொந்த யூகமே இக்கருத்தாகும். அதாரங்கள் இன்றி எவருடைய சொந்த கருத்தையும் நாம் கவனத்தில் எடுப்பதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
கேள்வி: சர்தேசப்பிறையை ஏற்காத மக்களைப்பற்றி தாங்கள் காபிர்கள் என்று கூறுவதாக சில பேர் பேசிக்கொள்கின்றனர். இது பற்றி தங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: தூய கலிமாவை ஏற்றுக்கொண்ட எந்த முஸ்லிமைப்பார்த்தும் நாம் காபிர் என்று கூறியது கிடையாது. அல்லாஹ்வை அஞ்சிய எந்த முஸ்லிமையும் காபிர் என்று அழைக்கும் அதிகாரம் எவருக்கும் எச்சந்தர்ப்பத்திலும் வழங்கப்படவில்லை என்றே பிரச்சாரம் செய்து வர்கின்றோம்.
எம்மீது காழ்ப்புணர்வும், எமது தஃவாப்பிரச்சாரத்தால் அதிகரித்துவரும் மக்கள் அலையைக்கண்டு சகிக்க முடியாமல் பொறாமை கொண்ட சில நயவஞ்சகர்கள் இவ்வாறு மோசமான, போலியான தகவல்களை பாமர மக்களிடம் பரப்பி எம்மை அகீதாவில் வழிதவறிய முர்தத்துக்களைப்போன்று சித்தரிக்க முற்படுகின்றனர்.
அல்லாஹ்வை மறந்து சதித்திட்டங்கள் தீட்டுவதிலும் இஸ்லாமியப்பிரச்சாரங்களை முடக்குவதிலும் முன்னனியில் திகழும் இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் நாகரீகத்தை விட்டுவிட்டு அராஜகங்களாலும், அட்டூழியங்களாலும் தாங்கள் நினைத்ததை சாதித்து இவ்வூரை ஆழநினைக்கும் இக்கும்பல் அல்லாஹ்வுடைய தண்டனையை அதிகம் அஞ்சிக்கொள்ளட்டும்.
கேள்வி : உங்கள் அமைப்பான தாருல் அதர் அத்தஅவிய்யா சர்வதேசப்பிறையை பேசுவதற்கு முன்னால் யாராவது சர்வதேசப்பிறை பற்றி பேசியுள்ளார்களா?
பதில்: ஆம், நிறைய மார்க்க அறிஞர்கள், ஹதீஸ்கலை வல்லுனர்கள், பிக்ஹ்சட்டக்களை மேதைகள், பல இஸ்லாமிய அமைப்புகள் சர்வதேசப்பிறை பற்றி எழுத்திலும், பேச்சிலும் அதனைச்சரிகண்டு தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவாக முன்வைத்துள்ளார்கள் என்பதற்கு வரலாறு சாட்சி.
அன்புப்பொதுமக்களே!
சர்வதேசப்பிறை என்பதை இவ்வுலகில் முதன்முதலாக நாம்தான் அமுல்படுத்துகிறோம் என்பது போல் சில கோழைகள் வரலாறு தெறியாமல் அல்லது வேண்டுமென்றே தவறான கருத்தை உங்கள் உள்ளங்களில் சித்தரிக்க முற்படுகின்றனர். அனால், கடந்த கால இஸ்லாமிய வரலாற்றையும் சமகால இஸ்லாமிய உலக வரலாற்றையும் ஆழ்ந்து கற்றால் நிதர்சன உண்மையை ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
இமாம் ஷவ்கானி(ரஹ்), நவீன கால ஹதீஸ்கலை அறிஞர் அல்பானி(ரஹ்), இமாம் சித்தீக் ஹஸன் கான்(ரஹ்), ஏன் இமாம் நவவீ(ரஹ்) போன்றவர்கள் சர்வதேசப்பிறையை தங்களது நூட்களில் சரிகண்டுள்ளார்கள். உலகநாடுகளில் முஸ்லிம்கள் வாழும் சகல பகுதிகளிலும் சர்வதேசப்பிறை அடிப்படையில் தங்கள் பெருநாட்களை தீர்மானிக்கும் மக்கள் வாழ்கிறார்கள். எமது இலங்கை நாட்டிலும் முஸ்லிம்கள் வாழும் இடங்களிலெல்லாம் சர்வதேசப்பிறையை சரிகாணக்கூடியவர்கள் காணப்படுகின்றார்கள்.
இது ஊருக்கு மாத்திரம் உண்டாண பிரச்சனை அல்ல. சர்வதேச ரீதியாக உலகில் காண்ப்படும் இப்பிரச்சனையை குறுகிய பார்வையால் நோக்காமல் ஆய்வு மனப்பாங்கோடு நோக்கவேண்டும். எனவே சர்வதேசப்பிறை விவகாரத்தை நாமாக முதலில் முன்வைக்கவில்லை எனபதை தங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகின்றோம்.
கேள்வி: சர்வதேசப் பிறையை விமர்சிக்கும் மார்க்க அறிஞர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: அவர்களோடு சற்று மனந்திறந்து பேச விரும்புகிறோம். அன்பிக்குரிய உலமாக்களே! சர்வதேசப்பிறை என்பது மார்க்க அறிஞர்களோடு சம்பந்தப்பட்டது. இதனை எமது ஆய்வுக்கு எட்டிய வரை சமூகத்திடம் முன்வைத்துள்ளோம். இதில் தவறுகள், பிழைகள், ஆய்வில் முரண்பாடு ஏதாவது தங்களுக்கு தென்பட்டால் எம்மை அழைத்து அவற்றை சுட்டிக்காட்டினால் தாங்கள் கூறுவதில் நியாயமிருந்தால் அவற்றை மனமுவந்து ஏற்றுக்கொள்வோம்.
தற்காலிகமாக சர்வதேச பிறையை கைவிடுங்கள் என்று எம்மை பார்த்து புலம்புவதை விட்டுவிட்டு ஆய்வு ரீதியாக அவற்றை அணுகி சமூகத்திடம் தெளிவான தீர்வை முன்வைக்க அணிதிரளுங்கள்.
கேள்வி: சர்வதேசப்பிறை பற்றி தெளிவு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
பதில்: தூய நோக்கோடு அதனை அறியும் ஆவலில் களமிறங்குங்கள். சர்வதேசப் பிறையை யார் முன்வைத்தாலும் ஆட்களை பார்க்காமல் ஆதாரங்கள் அதற்கு உண்டா என்பதை கவனியுங்கள். சர்வதேசப் பிறைக்கு எதிராக யார் பேசினாலும், எழுதினாலும் அவற்றை புறக்கனிக்காமல் வாதங்களைக் கவனித்து தெளிவு பெற முற்படுங்கள். பட்டங்களை நம்பி ஸுன்னாக்களை பறிகொடுக்காமல் பகலைப்போன்ற தெளிவான இம்மார்க்கத்தை படித்துணர முற்படுங்கள். சர்வதேசப் பிறைபற்றிய தெளிவு இன்ஷா அல்லாஹ் கிடைக்கும்.
கேள்வி: தாங்கள் இறுதியாக கூற விரும்புவது?
பதில்: சர்வதேசப்பிறை பற்றி மாற்றுக்கருத்துள்ள உலமாக்கள், புத்திஜீவிகள், மத்ரஸாக்கள், பள்ளி நிருவாகிகள் அனைவரையும் அன்பு கூர்ந்து அழைக்கின்றோம். சர்வதேசப்பிறை என்பது இஜ்திஹாத்தோடு சம்பந்தப்பட்ட ஓர் மார்க்கப்பிரச்சனை. பிறை தொடர்பான விடயத்தில் நாம் சர்வதேசப்பிறையை சரிகாண்கின்றோம் அதிலே உங்கள் கண்களை மூடி நாங்கள் சொல்வதை அப்படியே நம்பி அமுல்படுத்துங்கள் என்று அழைப்பு விடுக்கவில்லை. மாறாக ஆய்வியல் ரீதியாகவும் கருத்துப்பறிமாற்றத்தின் ஊடாகவுமே இவ்விடயங்களை ஒரு நிலையோடு நோக்குங்கள் என்றே கூறி வருகின்றோம்.
எமது தஃவா பிரச்சாரத்தையும், பிறை பற்றிய எமது நிலைப்பாடையும் விமர்சிக்கின்ற எமது சகோதரர்களுக்கு பணிவான முறையில் சில கருத்துக்களை பதிய வைக்க விரும்புகின்றோம். பிறை விடயத்தில் உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் உங்களுக்கு பிடித்த உலமாக்களை அனுகி அதுபற்றி எம்மோடு பகிரங்கமான முறையில் கலந்தாலோசிக்க அவர்களை தயார்படுத்துங்கள்.
தெளிவுகிடைக்க வேண்டுமென்ற தூய சிந்தனை உங்களிடமிருந்தால் இக்காரியத்தை நீங்கல் மேற்கொள்வீர்கள் என நம்புகிறோம். அதை விட்டுவிட்டு விரும்பதகாத காரியங்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின்கோபத்திற்கு ஆலாகாதீர்கள்
“நேர்வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்”

Comments are closed.